Tuesday, July 19, 2011

நிராசையின் தினத்தில்...



நிராசையின் தினத்தில்
என் உள்ளங்கையையே
நான் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்

நான் அதற்கு முன்பு
அந்தக் கைகளைப் பார்த்ததே இல்லை
என்பது போல


நான் பார்ப்பதை
ஒரு கணம் தவறவிட்டாலும்
அது என்னுடைய கைகளாக
இல்லாமல் போய்விடும்
என்பதுபோல


நான் பார்க்கும்போதே
அதன் ரேகைகள்
இடம்மாறுகிறதா என்று


நான் பார்க்காதபோது
அந்தக் கைகள்
என்னைப் பார்க்கிறதா என்று


நிராசையின் தினத்தில்
நமக்குப் பார்ப்பதற்கு
நமது கைகளைத் தவிர
வேறு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது



மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதையைப் படித்த போது மறுமையின் நினைவுகளே மனதுக்குள் எழ ஆரம்பித்தன. பின்னர் வெறுங்கைகளோடு இப்படித்தான் நிற்க வேண்டி வருமோ என்ற அச்சம் மனதெங்கும் பரவத் தொடங்கிற்று...


 

Monday, July 11, 2011

ஒரு சிறிய தனிமை



இப்போது சிறிது நேரத்திற்கு
ஒரு சிறிய தனிமை
கிடைத்திருக்கிறது
நான் அதை
உனக்கு முழுமையாக அளிக்கிறேன்

நீ அதை
அவ்வளவு விரும்பினாய்
எத்தனையோ முறை
திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறாய்
இப்போது நான் அதை
உன் கைகளில் தரும்போது
உனக்கு மிகவும் திகைப்பாக இருக்கிறது
அது ஒரு அபூர்வமான
பிராணியைப் போல இருக்கிறது
உனக்கு அதைக்
கைகளில் எப்படித் தொட்டு எடுப்பது
எனத் தெரியவில்லை
அது நழுவிச் செல்கிறது
உன்னைக் கொஞ்சம் பயப்பட வைக்கிறது

இந்தத் தனிமை
அவ்வளவு பெரியதல்ல
ஒரு சாளரத்தைப்போன்றது
ஒரு சின்னஞ்சிறு துவாரத்தைப்
போன்றதாகக்கூட இருக்கலாம்
அது இரவாக இருந்தால் கொஞ்சம் நிலவொளியும்
அது பகலாக இருந்தால் கொஞ்சம் சூரிய ஒளியும்
உனக்குக் கிடைக்கும்
மேலும்
அந்தத் தனிமை
உனக்கு என்ன பருவத்தில் கிடைக்கிறதோ
அந்தப் பருவத்தின் விசேஷங்களில்
ஏதேனும் ஒரு துளி
உன்னை வந்தடைந்துவிடலாம்
ஆனால் நீயோ வேறொன்றை யோசிக்கிறாய்
அந்த சிறிய துவாரத்தின் வழியாக
நீ வாழ்வின் வேறொரு பக்கத்திற்கு
சென்றுவிட விரும்புகிறாய்
அது அப்படி நடப்பதில்லை என்று
உறுதியாகத் தெரிந்தபிறகும்
நீ அதைத்தான் திட்டமிடுகிறாய்

திடீரென கிடைக்கும்
சிறிய தனிமை
ஏராளமானவற்றைத் திட்டமிட வைக்கிறது
ஏராளமான வழிமுறைகளைப் பரிசீலிக்கச்செய்கிறது
நாம் எதற்கும் தரவேண்டிய
நியாயமான நேரத்தைத் தருவதே இல்லை
ப்ரொஜக்டரில் நமது சினிமா
வேகமாக ஓட்டப்படுகிறது
அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது
சிறிய நுட்பமான விஷயங்கள்
தவறவிடப்படுகின்றன
நாம் அந்தத் திரையைவிட்டு
எப்படியாவது வெளியே வந்துவிடமாட்டோமா
என்று நமக்கு மூச்சுத் திணறுகிறது

திடீரென கிடைக்கும்  தனிமையில்
நாம் கொஞ்சமாகவே வாழ்கிறோம்
ஆனால்
அதை நிறைய பார்க்கிறோம்
நிறையப் பதிவுசெய்துகொள்கிறோம்
பிறகு அதைப்பற்றி
நிறைய கற்பனை செய்கிறோம்
உண்மையில் அது நமக்கு
ஒரு நீண்ட வாழ்க்கைபோல தோன்றிவிடுகிறது
சகலத்தையும் பார்த்துவிட்டதுபோல
களைத்துப் போய்விடுகிறோம்

ஒரு சிறிய தனிமை என்பது
ஒரு அமுதத்தைளப்போல
நமது நாக்கில் படிகிறது
ஆனால் வெகு நீண்டகாலத்திற்கு
நமது உடல்களை
அது நஞ்சாக்கிவிடுகிறது

Manushya Puthiran

Thanks to Manushya Puthiran's Notes