இந்த வாழ்க்கை பற்றி நினைக்கும்போதே அதன் வசீகரம்தான் மேலெழுகிறது. அன்புள்ள வாழ்க்கை என்பது எவ்வளவு இனிமையானது. எத்தனை வசீ கரங்கள், வசந்தங்கள்... பூக்கள் நிறைந்த சோலை மாதிரி பார்க்கப் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது இந்த வாழ்க்கை.
ஒரு குழந்தை பிறத்தல் என்பது எவ்வளவு கொண்டாட்டத்திற்குரியது. அது அணை கடந்த மகிழ்ச்சியை எல்லோர் மனதிலும் பரவச் செய்கிறது. அப்போது தாயும் தந்தையும் அடையும் மகிழ்ச்சி இந்தப் பிரபஞ்சத்தையே தழுவி நிற்கி றது. உயரப் பறக்கும் ஒரு பறவையின் குதூகலத்தோடு மனது சிறகடிக்கும் தருணமது.
ஒரு விளக்கு எத்தனை பேருக்கு வெளிச்சம் கொடுக்கிறது. அது போலத் தான் ஒரு ஜனனமும். அதன் வருகை யில் எல்லோரும் மகிழ்கிறார்கள்.
இந்தப் பூமியில் இன்னும் வாழாத ஒரு வாழ்க்கைக்காக அது பிறக்கிறது. எல் லையற்ற கற்பனைக ளுடனும் சாத்தி யங்களுடனும் அது வளர்கிறது. பின் இந்த வாழ்க்கையின் வசீகரங்களில் அது தொலைந்து விடுகிறது.
இந்த வாழ்க்கை எல்லையற்ற துன்பத்தை வைத்திருப்பதுபோலவே எல்லை யற்ற மகிழ்ச்சியையும் வைத்திருக்கிறது. ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு மகிழ்ச்சியை அது தருகிறது. குழந்தைப் பருவத்து மகிழ்ச்சியை யாரும் மறப்ப தில்லை. இன்னுமொரு முறை அந்த வாழ்வை வாழவே எல்லோரும் விரும்பு கிறார்கள். ஏனெனில், குழந்தைகளை யாரும் மறுப்பதில்லை. அவர்களை எல் லோரும் அங்கீகரிக்கிறார்கள். இருந்தாலும் அந்த அங்கீகாரம் பெரியவனாகும் போது கிடைப்பதில்லை.
இளமை இன்னுமொரு வசீகரம். காலை வெயில் மாதிரி தெம்புடன் கூடிய பருவமது. ஒவ்வொருத் தரும் அதில் ஒவ்வொரு மகிழ்ச்சியை அனுபவிக்கி றார்கள். ஏன், இளமையே வசீகரம்தானே!
முதுமையிலும் வசீகரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் அதில் ஒரு பலவீனம் வந்து அமர்ந்துவிடுகிறது. எல்லா வசீகரங்களையும் அது காவு கொண்டுவிடுகிறது.
குழந்தைப் பருவமும் முதுமைப்பருவமும் இன்னுமொருவரில் தங்கியிருக்க வேண்டிய சுமையை தோற்றுவித்துவிடுகிறது. எனவேதான் எல்லோரும் முதுமைக்கு அஞ்சுகிறார்கள். ‘சுடுகாட்டுக்கு நடந்து போக சக்தியிருக்கும் போதே செத்துப்போகவேண்டும்’ என்று ஒரு கவிஞன் பிரார்த்தித்தது நினை வுக்கு வருகிறது.
ஒரு குழந்தையை கொஞ்சுவதுபோல எந்த முதியவரையும் யாரும் கொஞ்சு வதில்லை. வயோதிபமும் ஒரு குழந்தைத்தனம்தான். இருப்பினும் யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை. அவர் தன் எல்லா மகிழ்ச்சிகளையும் தன் நடுக்கத்திலேயே தொலைத்து விடுகிறார். மண்ணறையை அருகாமையில் இருப்பதாக கனவுகாணத் தொடங்குகிறார்.
இப்படி முப்பருவங்களைக் கொண்ட இந்த வாழ்க்கை பற்றி எழுத நினைக்கும் போது அதன் ஆனந்தமே மேலெழுகிறது. ஒரு மழைத்துளி தரும் ஆசுவாசம் போல, ஒரு தென்றல் தரும் இதம்போல, இந்த வாழ்க்கை இன்பமானதுதான்.
ஆனால், இந்த இன்பம் முடிந்துபோகும் என்பது தான் இந்த வாழ்க்கை பற்றி நாம் படிக்க மறந்த குறிப்பாகும். அன்று பள்ளிவாயலில் ஒரு வயோதிப ரைப் பார்த்தேன். அவரது முகத்தில் மரணத்தின் ரேகைகள் படிந்திருந்தன. அவர் அமைதியாக அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார். தனது வாழ்க்கையின் அந்திமத்தில் இருக்கும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். எல்லா நாளும் மரணங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக் கின்றன. வாழ்க்கைப் பாடத்தை நிறுத்திவிட்டு யாரோ ஒருவர் வெளியேறிக் கொண்டுதான் இருக்கிறார்.
மறுபடியும் இந்த வாழ்க்கை பற்றி நினைக்கும் போது ஆனந்தமே மேலெழுகி றது. ஏனெனில், இந்த வாழ்க்கையின் புறஅழகில் நாம் வீழ்ந்துபோயிருக்கின் றோம். நினைவுக்கெட்டிய காலத்திலிருந்தே எல்லோரும் மகிழ்ச்சிகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். வாழ்க்கையின் இன்பமான பொழுதுகளை அடிக் கடி நினைவுபடுத்துகிறார்கள். ஒரு விருந்தில் அமர்ந்துகொண்டு அதனை மீட் டிப் பார்க்கிறார்கள். தம் மகிழ்ச்சிகளுக்கு வெற்றிகளுக்கு விழா எடுக்கிறார்கள்.
இந்த வாழ்க்கை இன்னும் சிலருக்கு சொர்க்கத் தையே கொடுத்திருக்கிறது. வாழ்க்கைபற்றிய கனவுகளில் அவர்கள் மிதந்து கொண்டிருக்கி றார்கள். இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு தரு ணத்தையும் இன்பமாக வாழ முயற்சிக்கிறார் கள்.
இன்னும் சிலருக்கு இந்த வாழ்க்கை சோகத் தையே கொடுத்திருக்கின்றது. எப்போதும் அவர் கள் கன்னத்தில் கைவைத்து அமர்ந்து கொண்டி ருப்பார்கள். இந்த வாழ்க்கையை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தமக்கு இன் பத்தைக் கொடுக்கவில்லையென்று நொந்து கொள்கிறார்கள்.
இந்த வாழ்க்கை பற்றி சிந்திக்கும்போது நாம் இந்த வாழ்க்கை முடிந்துபோகும் என்று ஒருபோதும் சிந்திப்பதே இல்லை. அதனது ஆனந்தங்களை மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், இந்த வாழ்க்கை முடிந்து அதற்குப் பின்னால் இருக்கும் வாழ்வின் இன்பம் பற்றி சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள்.
முடிந்துபோகும் வாழ்க்கையை முடிந்தமட்டும் இன்பமாக வாழவே நாம் முயன்றுகொண்டிருக்கிறோம். அதுபற்றியே சதா சிந்தித்துக்கொண்டிருக்கி றோம்.
என்னதான் ஆட்டம்போட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த வாழ்க்கையிலி ருந்து விடைபெற்றுத்தானே ஆகவேண்டும். அந்த நிஜம் நம் சிந்தனையை ஒரு போதும் களைப்பதே இல்லை. இந்த வாழ்க்கைக்கு விடைகொடுக்க நாம் ஒருபோதும் ஆயத்தமாகவே இல்லை.
வாழ்க்கையின் பெறுமானத்தையும் யதார்த்தத்தையும் உணராதவன் இந்த வாழ்க்கையை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். உணர்ந்தவனோ அதனைக் கால்களுக்குக் கீழே வைத்துவிட்டு முடிவில்லாத ஒரு வாழ்க் கைக்கு தயாராகிறான்.
ஒரு குழந்தைக்கு இந்த உலகில் இன்பத்தைச் சொல்லிக் கொடுப்பதுபோல இந்த உலகம் முடியும் என்பதனையும் அதன்பின் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த வாழ்க்கையின் வசீ கரங்களை மட்டும் அதற்குப் போதித்துவிடக் கூடாது. இந்த யதார்த்தம் புரியும் போதுதான் யாரினது மரணத்தையும் தைரியமாக ஏற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.
இனி இந்த வாழ்க்கை பற்றிச் சிந்திக்கும்போது அது முடியும் என்பதும், இந்த வானம், இந்த அந்தி எல்லாமே அழியும் என்பதும் நம் நினைவுக்கு வரட்டும். அதற்காக யாரும் மகிழ்ச்சிகளைத் தொலைத்துக் கொள்ளத் தேவையில்லை. சந்தோஷம் மட்டுமல்ல வாழ்க்கை என்பது மறக்காமல் எம் நினைவில் இருந்தால் போதும்.
(2011 மார்ச் 'வைகறை' இதழில் வெளியானது)