Wednesday, November 14, 2012

காயல் ஏ.ஆர் ஷேக் முஹம்மத். காயல் நகரின் மங்காத குரல்...




ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளையில்...

காயல் ஷேக் முஹம்மத் என்றதும் நினைவுக் வரும் பாடல் இது. சின்ன வயதில் அவரைப் போல உச்சஸ்தாயில் இப் பாடலை பாட முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். உச்சஸ்தாயிலும் இயல்பு மாறாமல் முகபாவனையை மாற்றி மாற்றி அவர் பாடும் அழகு மிகுந்த ரசிப்பிற்குரியது. அவரது குரலில் ஒரு துள்ளல் தன்மையுடன் கூடிய குதூகலம் இருக்கிறது. அப்பாடலோடு எம்மை லயிக்க வைக்கும் சக்தி அக்குரலுக்குள் மறைந்திருக்கிறது. அதுவே எம் எல்லோரையும் பரவசப்படுத்துகிறது.

தமிழ் நாட்டைவிட இலங்கையில் அவரின் பாடல்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஈ.எம். ஹனீபாவின் பாடல்களைப் போலவே இவரது பாடல்களும் இங்கு மிகவும் ரசித்துக் கேட்கப்படுகின்றது. இவரது பாடல்களில் பாடும் முறை, இசை, வரிகள் என அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கின்றன. 

ஷேக் முஹம்மத் அவர்கள் தமிழ் நாட்டில், காயல்பட்டினம் நகருக்கு அருகில் அமைந்துள்ள குலசேகரன் பட்டினம் கிராமத்தில் 1947 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதல் இசையில் ஈடுபாடு கொண்டவராக இருந்த இவரின் இசைத் திறமைகள் பள்ளிக்கூடத்து விழாக்களில் வெளிப்பட்டன. இவரது திறமைகளை நன்கு கவனித்த இவரது தந்தை அப்துர் ரஹ்மான் கர்நாடக சங்கீதம் பயில்வதற்கு திருச்சேந்தூரில் பொன்னுசாமி பாகவதரிடம் சேர்த்தார்.

அவரிடம் இரண்டு வருடம் படித்த பிறகு நாகர் கோவிலில் உள்ள இரணியல் சங்கீதப் பள்ளி செல்லப்பா பாகவதரிடம் 3 வருடம் முறையாக சங்கீதம் கற்றுத் தேர்ந்தார். 7 வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய ஏ.ஆர். ஷேக் முஹம்மத் அவர்கள் பல அரசியல் மேடைகளில், அறிஞர் அண்ணா, கலைஞர் என பலருக்காக பாடல்களைப் பாடி அவர்களிடமிருந்து பரிசில்களையும் நன்மதிப்பையும் பெற்றார்.

அரசியல் கட்சிகளை வளர்க்கவும், அவர்களது பிரச்சாரத்திற்கும் நாகூர் ஹனீபாவும் காயல் ஷேக் முஹம்மதும் பெரிதும் உழைத்திருக்கிறார்கள். இது போன்ற கலைஞர்களது பணி அரசியல் மேடையோடு முடிவடைவதுதான் சோகமானது.

சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் படத்தில் டீ.எம். சௌந்தராஜனுடன் சேர்ந்து உலகமெனும் நாடக மேடையில் பாடலைப் பாட எம்.எஸ். விஸ்வநாதன் சந்தர்ப்பம் அளித்தார். இப்படத்தின் மூலம் காயல் ஷேக் முஹம்மத் பிரபல்யம் ஆனார். எச்.எம்.வி. நிறுவனம் இவரை நாடியது. ஈச்சை மரத்து... பாடல் பல இலட்சம் ஒலி நாடாக்கள் விற்பனையாகின.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளில் இவரது இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இசைக் கச்சேரிகளை தனது வாழ்நாளில் இவர் நடாத்தி இருக்கிறார்.
ஈ.எம். ஹனீபா அவர்களுக்கு பாடல் எழுதிய நாகூர் ஸலீம் அவர்கள் 750 இற்கும் மேற்பட்ட பாடல்களை இவருக்காக எழுதியுள்ளார். 

நாகூர் ஸலீம் இயற்றிய கப்பலுக்குப் போனமச்சான்... எனும் கிராமிய பாடல் மரபில் அமைந்த பாடல் வெளிநாட்டில் இருக்கும் கணவனை நினைத்துப் பாடும் ஒரு மனைவியின் துயர் கீதமாகும். ரீ.கே. ராம மூர்த்தியின் இசையில் அமைந்துள்ள இப்பாடல் ஷேக் முஹம்மத்தின் மிகவும் புகழ் பெற்ற ஒரு பாடலாகும்.

1996 ஆம் ஆண்டு எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அழைப்பை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைகளில் பாடினார். முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைப் பாடல்கள் அடங்கிய புதிய வெளிச்சங்கள் ஒலி நாடாவின் பாடல்களைப் பாடினார்.


கட்சியின் வேகத்திற்கு அவரது பாடல்களும் உந்து சக்தியாக அமைந்தன. புதிய வெளிச்சங்கள் ஒலி நாடா வெளியீடு கொழும்பு எல்பிஸ்டன் அரங்கில் 19997 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒரே நாளில் 25 இலட்சம் ரூபா வசூலை அது தேடிக் கொடுத்தது.

உச்சஸ்தாயில் பிசிறில்லாத தொனியில் அற்புதமாகப் பாடக் கூடிய ஒரு பாடகராக காயல் ஷேக் முஹம்மத்   இருந்தார். இதுதான் சினிமா இசை மேதைகளையும் அவர் பக்கம் ஈர்க்கச் செய்தது. இதனால் 20 க்கும் மேற்பட்ட படங்களில் பாடும் வாய்ப்பை இவர் பெற்றார்.

இவரது பாடலில் இருக்கும் துள்ளலும் வசீகரமும் எல்லோரையும் ஒரு நிமிடம் நிற்கவைக்கிறது. ஒரேபாடலில் கூட பல்வேறு இடங்களில் ஒரு புதிய ரசனையை அவர் வைத்திருக்கிறார். அது மெட்டிலும் அவரது குரலிலும் வெளிப்படும்போது நாம் ஒரு புதிய இன்பத்தில் பயணிக்க முற்படுகிறோம். மறுபடி ஒரு புதிய இன்பம் அடுத்த வரிகளில் எமக்குக் காத்திருக்கிறது. ஈ.எம். ஹனீபாவின் பாடல்களிலிருந்து இவரது பாடல்கள் வித்தியாசப்படும் புள்ளி இதுதான் என்பது எனது அபிப்பிராயம்.

ஈ.எம். ஹனீபாவின் மூன்று பாடல்களைக் கேட்கும்போது நான்காவது பாடலை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இவரது ஒவ்வொரு பாடலும் ஒரு புது அனுபவமாகவே இருக்கும். 

நாகூர் ஹனீபா, காயல் ஷேக் முஹம்மத் இருவருமே இஸ்லாமிய கீதத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்தாம். இருவரும் தமது இசை வடிவங்களால் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இதய அறை எங்கும் வாழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எமது இஸ்லாமிய கீதம் இவர்களது காலத்துடன் முற்றுப் பெற்று விட்டதுதான் மிகப் பெரும் சோகமாகும். புதிய திசை வழிகளில் அவை பயணிக்கவே இல்லை. தலைமுறை வழியாக புதிய போக்குகளில் அவை பயணிக்கவும் இல்லை. எமக்கான ஒரு பாடல் மரபை ஷேக் முஹம்மத்திடமிருந்தோ, ஈ.எம். ஹனீபாவிடமிருந்தோ நாம் வரித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், அது நடைபெறவில்லை. 1300 இற்கும் அதிகமான பாடல்களை ஷேக் முஹம்மத் பாடி இருந்தும் அனைத்துப் பாடல்களும் அவரது வீட்டில் இல்லாத சூழ்நிலையில்தான் நாம் இதனை பேசிக்கொண்டிருக்கிறோம்.

இவர்களின் இசை பங்களிப்பின் வாயிலாக தமிழகத்தின் இரண்டு இடுக்குகளில் சிதறி தனித்து வாழும் பாமர முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களை ஓரளவாவது அறியும் வாய்ப்பு இருந்தது.

அத்துடன் பெரும்பான்மை ஹிந்து சமூகத்தினரும் மெய் மறந்து தலையசைக்கும் வகையில் அமைந்திருந்த இஸ்லாமிய இன்னிசை பாடல்கள் வாயிலாக மதங்களுக்கிடையேயான ஒரு மௌனமான நல்லிணக்க உரையாடல் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தது.
அதே போல் இவ்விரு பாடகர்களின் பாடல் மரபிலிருந்து மொத்தமாக  நுண் கலை அல்லது கவின் கலைக்கான வாயில் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு  திறக்காமல் போனதற்கும் இவ்விருவரின் பாடல்களிலிருந்து  கிடைத்து வந்த பலன்கள் தொடராமல் நின்றதற்கும் இஸ்லாத்தை தட்டையாக விளங்கப்படுத்திய ஒரு சிலரின் அணுகுமுறையும் ஒரு காரணம் எனலாம்.

ஈச்சை மரம் இருக்கும் காலம் எல்லாம் ஷேக் முஹம்மத் அவர்களின் நினைவும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒரு கிராமத்தில் பிறந்து இசையினதும் பாடலினதும் வழியே அக்கிராமத்தின் குரலை காற்றெங்கும் பரவச் செய்து மனிதர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துக் கொண்ட காயல் ஷேக் முஹம்மத் அவர்கள் 2009.06.09 அன்று இந்த உலகில் இருந்து நிரந்தரமாக மறைந்து போனார்.

காயல் நகரத்தின் வீதிகளில் மட்டுமல்லாது தன் குரல் ஒலிக்கும் தேசத்தில் எல்லாம் தன் பாடல்களால் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாம் வாழும் உலகத்தில் இன்று அவர் இல்லை. புதிய தென்றலுக்காக அவர் பாடிய பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகள் போல.

நாளைக்கும் நிலவு வரும்
நாம் இருக்க மாட்டோம்
நாளைக்கும் பூ மலரும்
நாம் இருக்க மாட்டோம்...

(இம்மாத வைகறை இதழில் வெளியானது.காயல் ஷேக் முஹம்மது பற்றிய தகவல்களைப் பெற்றுத் தந்த நண்பர் பஷீர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்)