இந்த உலகில் வெவ்வேறு மனிதர்களைக் காண்கிறோம்.எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. எல்லா
மனிதர்களும் சேர்ந்து உலகமாக இருப்பது போல ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகமாகவும் இருக்கிறான். உலகத்தைப்
புரிந்து கொள்வதை விட ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதே மிகவும் கஷ்டமான விடயமாக இருக்கிறது. எவ்வளவுதான்
பழகினாலும் புரிந்து கொள்ள முடியாமல் போகும் ஒரு இருண்ட பகுதி எல்லோர் வாழ்க்கையிலும்
இருக்கத்தான் செய்கிறது.
புறத் தோற்றம் ஒருநாளும் நல்ல மனிதனை எமக்கு அடையாளம் காட்டு வதில்லை. ஒருவன் அகம்
சார்ந்து தன்னை வெளிப்படுத்தும் போதே நாம் அவனை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள தயாராகின்றோம். அத்தகைய
தருணங்கள் எப்போதும் வெளிப்படுவதில்லை.அப்படி வெளிப்படும் தருணத்தில் ஒருவனை நல்லவன்,கெட்டவன், சுயநலவாதி,மேதைத்தனம் கொண்டவன்,பொறாமைக்காரன் என ஒவ்வொரு
விதமாக நாம் புரிந்து கொள்கிறோம்.
அதுபோலத்தான் தன்னை விடப் பிறறை முற்படுத்தும்
ஒருவன் போலவே எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு சுயநல மனிதனும் உலகில் இருக்கத்தான்
செய்கிறான்.இந்த இருவர் போல எண்ணற்றவர் களால் ஆகியிருக்கிறது இவ்வுலகு.
பிறறை முன்னிலைப்படுத்தும் ஒருவன் எப்போதாவது ஒரு நாள் தன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லையே
எனக் கவலைப்படுவான்.ஆனால் சுயநலம் மிக்க ஒருவனுக்கு ஒருபோதும் இந்தச் சிந்தனை பிறப்பதில்லை.அவன்
ஒருபோதும் மற்றவறை நினைத்துக் கவலைப்படுவதில்லை.மற்றவரது சங்கடமும் கஷ்டமும் கண்ணீரும்
அவனைப் பாதிப்பதே இல்லை.மற்றவர் மீது அவன் கொள்ளும் அன்பை அவனுடைய ஒரு தேவையே தீர்மானிக்கிறது.
தான் தோற்றுப் போகக் கூடாது என நினைக்கும் சுயநலத்தினால்தான் மனிதன் இப்படிப்பட்ட
பண்புகளுக்கு சொந்தக்காரனாகிறான்.தனது இருப்பை, கதிரையை, நட்சத்திர அந்தஸ்த்தை, மேதைத்தனத்தை என்றைக்கும்
பாதுகாக்க நினைக்கும் போது அன்பு என்பது மெல்லச் சாகத் தொடங்கி விடுகிறது.அதன் பிறகு
உறவென்பது தண்டவாளம் போல் ஆகிவிடுகிறது.கைகுழுக்கிக் கொள்ள முடிவதைத் தவிர உள்ளங்களால்
இணைய முடியாமல் போய்விடுகிறது.
வாழ்க்கையில் பிறரோடு கொள்ளும் உறவானது முழுக்க முழுக்க சுயநலமில்லாத அன்பின் அடியாக
அமையும் போது அங்கு தோற்றுப் போவது பற்றிய பயம் இல்லாமல் போய்விடுகிறது.அது உறவின்
எல்லா வாசல்களையும் திறந்து புதிய சுவாசங்களை உள்ளே அனுமதித்து விடுகின்றது.
எந்த வெறுப்பும் இல்லாமல் நாம் காணும் எவருடனும் உண்மையாகப் புன்னகைக்கும் போது
உள்ளம் பேருவகை கொள்கிறது.அந்தப் புன்னகைக்குத்தான் தர்மம் எனப்படுகிறது.
நாம் எந்த உயரத்தில் இருந்தாலும் வானத்தை அன்னார்ந்துதான் பார்க்க வேண்டும்.வாழ்க்கையும்
அப்படித்தான்.சுயநலமில்லாது நாம் மற்றவர் மீது கொள்ளும் உண்மையான அன்பு மட்டுமே நம்மைப்
பெரிய மனிதர்களாக்குகின்றது...
இம்மாத இஸ்லாமிய சிந்தனை இதழில் வெளியானது