Sunday, July 15, 2012

நேர்காணல்-நந்திதா தாஸ்


நண்பர் பஷீரும் அமீர் அப்பாஸும் நந்திதா தாஸை நேர்கண்டிருந்தனர். இம்மாத உயிர்மையில் அது வெளியாகி இருக்கிறது.உங்களுடனும அதைப் பகிர்ந்து கொள்கிறேன். 

   “பாதுகாப்புணர்வுடன்  செயல்பட்டவர்களால்  உலகம்  மாற்றத்தை      சந்தித்ததில்லை”  நந்திதா தாஸ்.

 
“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே “என முழங்கியதோடு நில்லாது விளிம்பு நிலை மக்களின் குரலை வீதி நாடகங்கள்  வாயிலாக அரசுக்கு சொன்னவரும் அதன் விளைவாகவே அரச பயங்கர வாதத்திற்கு பலியான வருமான ஸஃப்தர் ஹாஷ்மியின் நாடகப்பட்டறையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கியவர்தான் திரைப்பட இயக்குனரும் , நடிகையுமான நந்திதா தாஸ். 
பின்னர் ஃபயர் , வாட்டர் ,ஃபிராக் என சமூக தளத்தில் பேசப்பட்ட, விவாதி க்கப்பட்ட பல திரைப்படங்களின் வாயிலாக பயணித்துக்கொண்டிருக்கும் அவர் நீர்ப்பறவை படப்பிடிப்பிற்காக கடந்த மே மாதம் தமிழகம் வந்தி ருந்தார். 
படப்பிடிப்பு நடந்த மணப்பாடு மீனவ கிராமத்தின் பள்ளிக்கூடத்திடலை மன்னார் வளைகுடாவிலிருந்து வீசும் உப்புக்காற்றும் மே மாதத்தின் கடும் வெயிலும்  கலந்து விரவி நிறைத்திருந்தது..

அத்திடலில்  படப்பிடிப்பிற்கான தடபுடலான ஆயத்தங்களிடையே பிரபல ங்களுக்குரிய எவ்வித துருத்தலுமின்றி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் நந்திதா தாஸ். 

வெறும் நடிகையாகவே பொது தளத்தில் பரவலாக சித்தரிக்கப்பட்டுள்ள நந்திதா தாஸின் மனித குல கரிசனமிக்க செயற்பாட்டுத்தளங்களை  வெளிச்சமிட்டுக்காட்டுவதே இந்நேர்காணலின் நோக்கமாகும்.

.மிகவும் நெருக்கடியான சூழலுக்கு நடுவே நந்திதா தாஸுடனான  நமது  நேர்காணலை சாத்தியமாக்கித்தந்த  தென் மேற்கு பருவக்காற்று என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவரும், தற்போது உருவாகி வரும் நீர்ப்பறவை படத்தின் இயக்குனருமான  சீனு .ராமசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

1. உங்களது குடும்ப பின்னணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

எனது தந்தை  ஓவியக்கலைஞர் ஜதின் தாஸ்.எனது தாயார் ஒரு எழுத்தாளர். அவர் தேசிய புத்தக நிறுவனத்தின்( NATIONAL BOOK TRUST) முன்னாள் இயக்குனர். அதிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னர் தேசீய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனராக இருந்தார்.இப்போது அதிலி ருந்தும் விலகி விட்டார். அவர் நிறைய எழுதுகின்றார்.

எனது  தம்பி ஒரு கைவினை கலைஞர். அவர் அருங்காட்சியகங்களில் தனது பணியைத்தொடர்கின்றார்.எங்களது குடும்பம் ஒரு தாராள சிந்தனை யுடையது. அதில் ஆண், பெண் வேறுபாடுகள் காட்டப்படவில்லை.

நான் எனது வாழ்க்கை முழுவதையும் தில்லியில் வாழ்ந்திருக்கின்றேன். மும்பையில் சந்தித்த ஒருவரை மண முடிப்பதற்காகத்தான் அங்கு  குடி பெயர்ந்தேன். 

எனக்கு 21 மாதமே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நான் குழந்தை பெற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் படப்பிடிப்பு இதுதான். எனது மகனின் பெயர் விஹான். காலைக்கதிரவனின் முதல் ஒளிக்கீற்று என்பது அதன் பொருள்.

நான் அவனை ஒரு விடுதியில் விட்டு விட்டு நான் இங்கு வந்து பணி புரிகின்றேன். இதில் சில பிரச்னைகள் இருக்கின்றன.
படப்பிடிப்பை முடித்து விட்டு நான் செல்லும்போது அவன் என்னை விட்டுப் பிரிய மாட்டான். இது சிரமம்தான். 

நான் எனது அன்னையை மிகவும் மதிக்கின்றேன். அவர் எப்போதும் பணியாற்றி கொண்டே இருப்பார். தன் தாயை எப்பொழுதும் பணி புரிபவராக ஒரு குழந்தை  பார்ப்பதென்பது நல்லதுதான்.

தந்தைதான் பணி புரிய வேண்டும் தாய் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவளல்ல நான். 

தாய் வீட்டில்தான் இருக்க வேண்டும் என மகளிர் விரும்பினாலும் நல்லதுதான்.ஆனால் விருப்பத்தேர்வு அவர்களிடம் விடப்பட வேண்டும்.
நான் பணி புரியவும் செய்கின்றேன் வீட்டிற்கும் வருகின்றேன் சம நிலையைப்பேணுகின்றேன் என்பதை மெல்ல மெல்ல என் மகன் அறிந்து கொள்வான் . எனது தாய்மை எனக்கு மிகவும்  மகிழ்வான அனுபவமாக  உள்ளது.

தாங்கள் கலைத்துறையுடன் நிற்காது மனித உரிமை உள்ளிட்ட பல துறைகளில்  தீவிரமாக செயல்படும் பன்முக ஆளுமையாகத் திகழ் கின்றீர்கள். இந்த பன்முகத்தன்மைகளுக்கிடையே முரண்கள் தோன்றி யதுண்டா ?

திரைப்படம் என்பது எப்போதுமே பொது வெளியில்தான் உள்ளது. நீங்கள் பெரும்பாலும் திரையுலகு சார்ந்தே அடையாளங்காணப்படுவீர்கள். நான் உரை நிகழ்த்த போகும்போது கூட என்னை ஒரு நடிகையாகவே காணுகின்றனர்.
நான் அங்கு நடிகையாகவே செல்கின்றேன்.பின்னர் அந்த அடையாளத்தை துறந்து விட்டு மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற அடையாளத்தை சூடிக்கொண்டு நான் விரும்புவதை உரையாற்றி விட்டு வருகின்றேன்.
இவற்றை நான் பல செயல்பாடுகளுக்கிடையேயான முரணாக  காணவில்லை. அது போலவே நான் தேர்ந்தெடுக்கும்  திரைப்படங்கள் அனைத்தும்  நான் நம்புகின்ற மனித உரிமை விஷயங்களுடன் ஒத்தி சைந்தே போகின்றன.
நான் ஒன்றும் பாடிக்கொண்டும் மழையில் ஆடிக்கொண்டும் தேவை யில்லாமல் ஒரு பையனோடு காதல் வயப்படுவதுமாக இருந்து கொண்டு பின்னர் இங்கு வந்து மனித உரிமையைப்பற்றி பேசவில்லை.
அப்படி செய்தால்  இரட்டை வாழ்க்கையையே நான் வாழ்கின்றேன் என்றாகி விடும்.
நான்  திரைப்படங்களில் பணி புரிகின்றேன். அவற்றை சமூக மாற்றத் திற்காக பயன்படுத்தவும் முயற்சிக்கின்றேன் .அதே நேரம் நான் மனித உரிமை . வேலைகளிலும்  ஈடுபடுகின்றேன். உண்மையில் அவை எனக்கு உதவுகின்றன.
இந்த சிறிய பகுதிக்கு (மணப்பாடு) நான் ஒரு  நடிகையாக வந்துள்ளேன். இங்கு வாழும் மக்களின் வாழ்வியல் போராட்டங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை என்னால் அறிய முடிகின்றது.

 வெவ்வேறு வகையான மக்களை நான் சந்திக்கின்றேன். எனக்கு இதுவும்  ஒரு கல்வியாகும். மனித உரிமை தளத்தில் எனது பணி என்னவென்பதை புரிந்து கொள்ள இது உதவுகின்றது.

நான் மனித உரிமை பணிகளை ஆற்றும்போது இந்த கதை மாந்தர்களை புரிந்து கொள்ள முடிகின்றது.  இது போன்ற கதை மாந்தராக நடிக்கும் போது மக்களை புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறாக ஒன்று மற்றொன்றிற்கு உரமூட்டுகின்றது.

3.அனைவருக்கும்  தரமான சமச்சீரான  இலவச கல்வியை நாம் இந்தி யாவில் சாதிக்க முடியாமல் இருப்பதற்கு உள்ள தடைகள் என்னென்ன?

மொத்த அரசியலமைப்பு, ஊழல் உள்ளிட்ட  ஏராளமான தடைகள் பாதையில் உள்ளன. ஆனால் இவ்விஷயத்தில் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூற முடியாது.அண்ணா ஹஜாரேவின் இயக்கத் தைப்பாருங்கள். ஒவ்வொருவரும் ஊழலுக்கு எதிராக உள்ளனர் ஆனால் அதே சமயம்.நமது விழுமியங்களும் அழுகியுள்ளன. ஒவ்வொரு மனிதனும் நேர்மையற்றவனாகவே உள்ளான்.

ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் பிஞ்சுக்குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய  சோற்றில் கற்களை கலக்க முடிகின்றது எனும்போது யாரை குற்றஞ்சொல்ல?
ஆழிப்பேரலை போன்ற பேரிடர் சமயத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நல்ல போர்வைகளை எடுத்து விட்டு மோசமான போர்வைகள் வைக்கப்பட்டது. இதற்கு யாரை குறை கூற?
ஒவ்வொரு மட்டத்திலும் மனித விழுமியங்கள் மாசடைந்திருக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

நாம் எல்லோருக்கும் கல்வியை வேண்டுகின்றோம். நமக்கு எவ்வகையான பள்ளிக்கூடங்கள் வேண்டும்?
ஆனால் சமூகத்தின் உயர் நிலையிலும் உயர் பதவியிலும் உள்ள படித்தவர்கள்தான் குடும்ப வாழ்வில் வன்முறை, பெண் கருக்கொலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
அண்மையில் பெண் என்பவள் கணவனைப்பின்தொடரும் சீதை போன்றவள் என்றதொரு தீர்ப்பை மும்பை உயர் நீதி மன்றம் வழங்கியது பற்றி கருத்துக்கூறுமாறு என்னிடம் ஊடகங்கள் கேட்டன.

நமது கல்வி முறை என்னவாக இருக்கின்றது?
நாம் நல்ல மனிதனாக இருப்பதை பற்றி அவை கற்பிக்கின்றனவா?
அவை நமக்கு அறிவை அளிக்கின்றனவா?
 நாம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.
என்றாவது ஒரு நாள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என நம்புவோம். ஆனால் அக்கல்வி வெறும் கல்வியாக இல்லாமல் நல்ல தரமான கல்வியாக ,விழுமியங்களைக்கொண்ட கல்வியாக இருக்க வேண்டும். 

4.மாவோயிஸ்டுகளுக்கெதிரான பச்சை வேட்டையை நடத்திக்கொண்டே  மறுபுறம் நம் நாட்டின் கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் அரசு மும்முரமாக உள்ளதே? 

இது மிகவும் சிக்கலான விஷயம். ஊடகங்கள் இதை மிகவும் எளிமையாக்கி பார்க்கின்றன. அவர்கள் மாவோயிஸ்டுகளை பயங்க ரவாதிகள் என்கின்றனர். இது முழுமையான கிறுக்குத்தனம்.
நக்ஸலைட்டுகளைப் பற்றியோ மாவோயிஸ்டுகளைப்பற்றியோ ஆந்தி ராவில்  நீண்ட காலமாகப் பாடி வரும் கத்தரைப்பற்றியோ பழங்குடி யினரின் பிரச்சினைகளைப் பற்றியோ  அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்ப டுகின்றார்கள் என்பதைப்பற்றியோ அங்கு வளர்ச்சி ஏன் இல்லை என்பது பற்றியோ மக்களுக்கு  ஒன்றும் தெரியாது.

திடீரென்று ஒரு நாள் அரசு விழித்தெழுந்து கொண்டு “ஓ அங்கு வளர்ச்சிப்பணி செய்ய வேண்டும்” என்கின்றனர். இது மிகவும் சிக்கலான விஷயம்.இதை அதீத எளிமையாக்கி பார்க்க நாம் முயற்சிப்பதின் விளைவாக  தவறுகளைச்செய்கின்றோம்.

பீஹார். ஒடிஸா, சத்தீஸ்கட், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பெரு நிதி வணிக நிறுவனங்களுக்கு  இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட கனிம வளங்களை அள்ளுவதற்கு  நாம் சுதந்திரம் கொடுத்து விடும்போது அது நிலைமையை மேலும் சிக்கலாகுகின்றது.பொது மக்களாகிய நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால்  நான் தனிப்பட்ட முறையில் வன்செயலை ஆதரிக்கவில்லை. அது நல்ல நோக்கத்திற்காக நடந்தாலும் சரியே. வன்செயலானது நிரந்தரத் தீர்வைத்தரும் என நான் நினைக்கவில்லை.பல சிரமங்க ளிருந்தாலும்  வன்செயலற்ற வழிமுறையை நாம் நம்ப வேண்டும். இல்லையெனில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்.

சி.ஆர்.பி.எஃப். உள்ளிட்ட பாதுகாப்பு படையினரிடமிருந்து ஒரு புறம்  மாவோயிஸ்டுகளிடமிருந்து மறு புறம் என இரு பக்க வன்முறையாலும் பொது மக்கள்  கசக்கப்படுகின்றார்கள்  நசுக்கப்படுகின்றார்கள்.
ஆனால் பினாயக் ஸென் போன்ற செயற்பாட்டாளர்கள் விஷயத்தில் நடந்ததுதான் என்ன? நம் நாட்டில் அவருடையது போல் நூற்றுக் கணக்கான வழக்குகள் உள்ளன. 

சமீபத்தில் ஒரு பெண் அடித்து உதைக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். மனு ஒன்றை ஆயத்தம் செய்து கையெழுத்திட்டளித்தோம்.என்னால் இயன்றது அவ்வளவுதான். ஆனால் அது மாற்றத்தை கொண்டு வரவில்லை.
அத்துடன் நகர * ஊரக பிளவுகள்  அதிகரிக்கின்றன.  நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடக   நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் உள்ள உயர் / நடுத்தர வர்க்கம் போன்ற  மிக சிறிய பிரிவினரின் தேவைகளையே நிறைவு செய்கின்றன. 

அவை உண்மையான பிரச்சினைகளை விட்டும் தங்களை தூரமாக்கிக்கொள்கின்றன.அடுத்தவருடைய பிரச்சினைதானே , இதில் எனக்கென்ன வந்தது ? என்கிற மன நிலை வந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. 

செய்தித்தாள்களில் கிராமப்புறங்களுக்கான பக்கங்கள் மறைந்து வருகின்றன. பரபரப்பான விஷயங்கள் நடந்தால் மட்டுமே ஊரக விஷ யங்கள் வருகின்றன. இல்லையெனில் நாட்டின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கின்றது என்பது  நமக்குத் தெரிவதேயில்லை.
கிரிக்கெட், பாலிவுட், ஊழல்கள், அரசியல் என்பன  மட்டுமே தேசிய செய்திகளாகின்றன. உண்மையான பிரச்னைகள் தொலைந்து விடுகின்றன. இது மிகவும் கடினமான அறைகூவல்கள் நிறைந்த சூழ்நிலையாகும். மீண்டும் இதற்கான தீர்வு எளிமையானதில்லை.

5.சிறந்த ஆளுமைகளின் கதைகளுக்காக தாங்கள் நடிக்கும்போது ஏற்பட்ட உணர்வுகளை பற்றி .....?

மக்ஸீம் கோர்க்கி ,ப்ரேம் சந்த் ,கோவிந்த் நிஹ்லானி,அடூர் கோபால கிருஷ்ணன் ,மஹா ஸ்வேதா தேவி போன்றவர்களின் படைப்புக்கள் வியத்தக்க வளம் வாய்ந்த இலக்கியங்களாகும்
வருத்தமான விஷயம் என்னவென்றால் படத்தயாரிப்பாளர்கள்   நிறைய கதைகளை கண்டுகொள்வதேயில்லை.ஏராளமான நல்ல இலக்கியங்கள் இருக்கின்றன.
உண்மையான கதைமாந்தராக நடிப்பதென்பது அரிய நிகழ்வாகும். ஏனெனில் இவையனைத்தும் அவர்களின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப் பாடாக  வாழ்வியல் அனுபவங்களாக ஏராளமான ஆய்வுகளின் முடிவுக ளாக இருக்கின்றன.
எனவே நான் அவற்றை விரும்புகின்றேன்.

6. வணிக திரைப்படக்கலவையை  மட்டுமே ரசிக்கத்தெரிந்த இந்திய மனங்களை  எப்படி மனித உணர்வுகளை, சிக்கல்களை சித்தரிக்கும் தரமான  திரைப்படங்களின் பக்கம் ஈர்ப்பது?

நான் ஏற்கனவே சொன்னபடி இது மிகவும் கடினமான ஒன்று.இது  பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோக ஸ்தர் என அனைவரையும் உள்ளடக்கிய  ஒரு பெரிய பிணைப்பு.
பெரிய கெடு நோக்குடைய வளையம்.  இதனை யாராவது முறிக்க வேண்டும். அனைவரும் இதற்கான பொறுப்பை எடுக்க வேண்டும்.
நீங்கள் ஒரு  ஊடகவியலாளராக இருந்தால் , நான் நல்ல திரைப்படத்தை ஆதரிக்கும் முகமாக  அதைப்பற்றி கூடுதல் எழுதுவேன் எனக்கூற வேண் டும்.

நான் ஒரு பார்வையாளனாக இருந்தால் இந்த நல்ல திரைப்படங்களை அவை குறுந்தகட்டில் வரும் வரை காத்திருக்காமல் நானே திரையரங்கிற்கு சென்று காண்பேன் எனக்கூற வேண்டும்.
ஒரு தயாரிப்பாளர் , நான் நல்ல திரைப்படத்தை தயாரித்து அதை நல்ல விதம் சந்தைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவேன் என்று முன் வர வேண்டும்.
இல்லையெனில் நல்ல திரைப்படங்கள் உருவாக்கப்படுவதும், திரையரங்கிற்கு வருவதும் நின்று விடும்.
நல்ல கலை வாழ வேண்டும் மறு பக்க கதை கொண்டு வரப்பட வேண்டும் என நாம் உண்மையாக நம்பும் பட்சத்தில் அதன் பொறுப்பு எந்த ஒரு தனியாளுடையதாகவும் இருக்காது மாறாக அது நம்மனைவரையுமே சாரும்.
நான்  குழந்தைகள் திரைப்படக்கழகத்தின்  (children film society) தலைவியாகவுள்ளேன்.
நாங்கள்  “கட்டூ” என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை எடுத்தோம். அதனை பார்த்த அனைவரும் ஆகா!! என்ன அருமையான படம் எனப்பாராட்டினர்.அது பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
ஆனால் அதன் வினியோகஸ்தரை கண்டுபிடிப்பதென்பது மிகவும் சிரமமாக இருந்தது.
 நாங்கள் சந்தித்த ஒவ்வொரு வினியோகஸ்தரும் இது அழகான நல்ல படம்தான். ஆனால் பெரிய நடிகர்கள் யாரும் நடிக்கவில்லையே? ,பாடல்களுமில்லையே? இது குழந்தைகள் படமாயிற்றே? நாங்கள் எப்படி வெளியிடுவது?
ஆக மீண்டும் அதே பிரச்னைகள்தான். யாரும் சிக்கலை சந்திக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் பாதுகாப்புணர்வுடன் செயல்படவே விரும்புகின்றனர்.
 துணிவுள்ளர்களால்தான், சிக்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களால்தான் உலகம் மாற்றங்களைச்சந்தித்துள்ளதே தவிர பாதுகாப்புணர்வுடன் செயல் பட்டவர்களால் இல்லை.
எல்லைகளை மோதித்தள்ளியவர்களே உலகத்தை மாற்றியுள்ளனர். பாது காப்புணர்வுடன் இருந்தவர்களின் வாழ்வோ அப்படியேதான் தொடர் கின்றது. எனவே நாம்தான்  இதற்கு பொறுப்பெடுத்தாக வேண்டும்.



7.காந்தியைப்பற்றி எழுதியதற்காக அவர்மீதான  நச்சு  தோய்ந்த விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டி வந்தது என தங்களது இணைய தளத்தில் தெரிவித்திருந்தீர்கள்.என்ன வகையான விமர்சனங்கள் அவை?

2005 இல் காந்திஜியின் “சத்திய சோதனை” நூலை நான் ஒலி வடிவ நூலாக கொண்டு வந்தேன்.
அதை குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில் வெளியிட தீர்மானித்திருந்தேன்..

காந்திஜியை நாம் அக்டோபர் 2 அன்று மட்டும் நினைவு கூறுகின்றோம்.
வருடத்தின்  மீதி  நாட்களில்  அவரை  மறந்து விடுகின்றோம்.
காந்திஜீ இக்காலகட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமானவர் என்பதையும் காந்திஜீயின் ஆசிரமத்தில் தங்கியிருப்பது தொடர்பான இனிய அனுபவங்களையும்   நான் எனது வலைப்பூவில் பதிந்தேன்.
உடனடியாக கடுமையான எதிர்வினைகள் வரத்தொடங்கின.
காந்திஜீ பெண்களுடன் இருந்தார்.அவர் இக்காலகட்டத்திற்கு பொருத்தமற்றவர். முஸ்லிம்களை தாஜா செய்தார்.மதத்தில் அதீத பற்றுடையவர் என வித்தியாசமான விமர்சனங்களாக அவை இருந்தன.
அவரை நாமும் கடவுள் என்று சொல்லவில்லை. அவரை தன்னை அப்படி சொல்லிக்கொள்ளவுமில்லை. அவரும் நம்மைப்போலவே நல்லதும் அல்லதும் கலந்த ஒரு மனிதர்தான். மக்களின் பரந்துபட்ட நலனுக்காக வேண்டி தனது சொந்த வாழ்வையே  அவர் பரிசோதனைக்களமாக மாற்றினார் .
காந்திஜீயை  நாம் அறியாமல் அறிய விழையாமல் அவரை கற்காமல் அவரைப்பற்றி விமர்சிக்க நமக்கு என்ன உரிமை இருக்கின்றது?
அவரைப்பற்றிய விமர்சனங்களுக்கு நான் காந்திஜீ, மார்டின் லூதர் கிங் உடைய மேற்கோள்களையே எனது விடையாக முன்வைத்தேன். அத்துடன் அது பற்றிய எனது வலைப்பூ பதிவை நிறுத்தி விட்டேன்.

8.காந்திஜீ மீதான காழ்ப்புணர்வையும் , ஃபாஸிசத்திற்கெதிரான  முயற்சி களுக்கு கிடைக்கும் எதிர்ப்புகளையும், சிறுபான்மையினர், பழங்குடியினர் போன்ற விளிம்பு நிலை மனிதருக்கெதிரான வன்முறை களையும் பார்க்கும்போது  நாடு ஃபாஸிசத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக் கின்றது என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியும்.
ஃபாஸிசத்தை நோக்கிய  ஒரு பின்னடைவு இருக்கத்தான் செய்கின்றது. .நம் நாட்டு மக்கள் சில பகுதிகளில் மதச்சார்பற்றவர்களாகவும் சில பகுதிகளில் ஜனநாயகப்பூர்வமாகவும் உள்ளனர்.சில பகுதிகளில் மனிதாபிமானமிக்கவர்களாகவும் உள்ளனர். அதனால்தான் இந்நாடு இன்னும் இயங்குகின்றது.
கருத்துருவாக்கக்கூடியவர்கள், அதிக ஓசை எழுப்புவர்கள், ஆகியோர் ஃபாஸிசம் இங்கு இருப்பதை போன்று ஒரு உணர்வை  நமக்கு  உண்டு பண்ணலாம். மக்கள் சில  வேளை இவற்றினால் திசை திருப்பப் படலாம்.
உண்மையில் நம் நாடு மனிதாபிமானத்துடன் கூடிய ஜன நாயகத் தன்மை மிக்கது. மதச்சார்பின்மையின் அடிப்படையிலானது. நமக்கு இதில் நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையை நாம் கைவிடலாகாது. அப்படி கைவிட்டால் அது ஃபாஸிஸ்டுகள் விரித்த வலையில் நாமே விழுந்த மாதிரி ஆகி விடும். அதைத்தான் ஃபாஸிஸ்டுகளும் விரும்பு கின்றனர்.
தாராள எண்ணமுடையவர்களும் நேரிய திசையில் சிந்திப்பவர்களும்  தங்கள் நம்பிக்கையை கைவிட வேண்டும் என ஃபாஸிஸ்டுகள் எதிர்பார்க்கின்றனர். அதன் மூலம் மக்களை தாங்கள் விரும்பிய வண்ணம் கையாள விரும்புகின்றனர்.
தாராள சிந்தனை போக்குடைய மதச்சார்பின்மை வாதிகளாகிய நாம் நம்பிக்கையை இழந்து விடலாகாது.

நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கும் சராசரி ஆண்களும் பெண்களும் தாங்கள் தவறாக கையாளப்படுவதையும் திசை திருப்பப்படுவதையும் விரும்பவில்லை. 

அவர்களுக்கு அவர்களுடைய அன்றாட வாழ்வாதார சிக்கல்கள் உள்ளன. மத, இன ,மொழி அரசியல் அடையாளங்களுக்குள் சிக்கிட அவர்கள் விரும்புவதில்லை.  அவர்கள் ஒவ்வொருவரும்  தங்கள் குடும்பத்தினருடன் உண்டு  உழைத்து வாழவே விரும்புகின்றனர்.
எனவே நாம் அத்தகைய ஒரு மானுடச்சமூகத்தைத்தான் உருவாக்க வேண்டுமேயல்லாது ஃபாஸிசத்தை நோக்கி  நாம் நகர்கின்றோம் என்பதாக எண்ணத்தேவையில்லை.


9.சமூக சேவைக்கான குரல்களை வலுவாக கொண்டு சேர்க்கும் ஒரு உத்தியாகத்தான் திரைத்துறையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.பொதுவில் இந்திய ஊடகவெளி ஜனநாயகத்தன்மை மிக்கதாக உள்ளதா?

எனவேதான் நான் பிராந்திய மொழிப்படங்களை பண்ணியுள்ளேன் . நான் சிறிய அளவில் செயல்படுகின்றேன்.  சொல்லியாக வேண்டிய தலையாய  கதைகள் என எனக்கு  தோன்றுபவற்றை திரைப்பட வடிவில் சொல்கின்றேன்.

மீனவர் பிரச்சினை பற்றிய இந்த ( நீர் பறவை ) படமாகட்டும் அல்லது ஃபிராக் ஆகட்டும் நான் இது வரை 30 திரைப்படங்களை பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் செய்துள்ளேன்.

.அவற்றிற்கு பிராந்தியம் என பெயரிடுவது பொருத்தமன்று. மற்ற ஹிந்திப்படங்கள் பாலிவுட் படங்கள் போல இவைவையனைத்துமே இந்தியப்படங்கள்தான்.

ஹிந்திப்படங்களும் பாலிவுட் படங்களுமே  இந்தியப்படங்கள் என நாம் நம்புகின்றோம்.

 எல்லா இடங்களிலும் எல்லா வகையான கதைகள் உள்ளன.

மொத்த நாட்டிற்குள்ளேயே ஏராளமான இந்தியாக்கள் வாழ்கின்றன. இவையனைத்தும் நமக்கு இன்றியமையாதவை. நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகின்றேன்.


ஊடகங்கள் பொதுவாக ஜனநாயகத்தன்மையோடுதான்            இருக்கின்றன. இங்கு யாரும் நினைப்பதை எழுத முடியும்.

 ஆனால் இன்னொன்றும் உள்ளது. இது பெரு வணிக உலகம்.

எனவே நாம் எழுதுவதில் சஞ்சிகையின் ஆசிரியர் கை வைப்பார். ஆசிரியருக்கு சரி  எனப்படுவது ஊடகத்தின் உரிமையாளருக்கு பிடிக்காது. இவை சுதந்திர சமூகத்தின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகளாகும்.

ஜன நாயகத்தில் எல்லாவித பயனற்ற கருத்துக்குப்பைகளும் இருக்கும்.

எனினும் நல்ல விஷயத்தை நீங்கள் கொடுக்கும்போது மக்கள் மெது மெதுவாக அதை பற்றிக்கொள்வார்கள்.

ஆனால் நீங்கள் மாற்றீடைக்கொடுக்கவில்லையெனில் மக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்? ஏற்கனவே இருப்பவற்றைத்தான் தேர்ந்தெடுப்பர்.
ஜனநாயகத்தில் நுகர்வியம், பெருவணிக மயமாக்கம், அரசியல் ஃபாஸிசம் என பல சிக்கல்கள் இருப்பதனால் உங்களுக்கான குரலை ஒலிப்பதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன.
 எனினும்  நல்ல ராணுவ அரசை விட கெட்ட ஜன நாயகம் சிறந்ததுதானே?
ஜன நாயகத்தில் நாம் நம்பிக்கையிழக்க முடியாது. ஜன நாயக கருவியின் மூலமாகவும் சுதந்திர வெளியின் வாயிலாகவும் மட்டுமே  மக்களுக்கு நல்லறிவு நிலையை நாம் கொடுக்க முடியும்.

10.இங்கு பெரு வணிக உலகின்( கார்ப்பரேட்) குரல்வளையாக பெரும்பான்மை ஊடகங்கள் அதி தீவிரமாக  இயங்கும்போது மானுடத்திற்கான வெளியை  விரிவுபடுத்துவதென்பது அறைகூவல்கள் நிறைந்ததொன்றாயிற்றே?

ஆமாம். பெரும் அறைகூவல்கள் உள்ளன. திரைப்படத்துறையை பாருங்கள். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் மைய நீரோட்ட படங்களின் சந்தை முதலீட்டை பார்க்கும்போது சுயேச்சையாகவும் சிறிய அளவிலும் எடுக்கப்படும் படங்களின்  உருவாக்க செலவுகள் அவற்றினருகில் கூட வர முடியாது.
எனினும் அந்த குட்டையில்தான்  போராடி நீந்தி அந்த திரைப்படங்களை வெளியிடவும் வேண்டியுள்ளது.

நான் எடுத்த ஃப்ராக் படத்தை பாருங்களேன். படத்தின் தயாரிப்பாளர் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தார். மீதமுள்ள பணத்திற்கு நான் என் மீதுள்ள நல்லெண்ணம் மூலமாகவும், இரந்து,  கை மாற்று வாங்கி ,  நட்பு வட்டாரத்தை அணுகி என  அனைத்தையும் செய்துதான் அந்த படத்தை வெளியிட முடிந்தது .

அதன் பிறகு அதனை சந்தைப்படுத்துவதற்கு பெரும் முதலீடு வேண்டும். ஊடக விளம்பரங்கள்,பதாகைகள் என செலவு பண்ணினால்தான் படம் வசூலில் வாகை சூடும். வசூலில் வெற்றி பெற்றால்தான் அது மக்களிடையே எடுபடும். சராசரி மனிதனுக்கு இப்படி ஒரு படம் வெளியாகின்றது என்பதும் தெரிய வரும்.

இந்த சந்தை முதலீடு செய்யவில்லையெனில் இது எதுவும் நடக்காது. படம் பெரு வாரியான மக்களுக்கு சென்றடையாது. மக்களை சென்றடைந் தால்தானே அவர்கள் இதை விரும்புகின்றார்களா? இல்லையா ?என்பது தெரிய வரும்.
கடைசியில் இது போல  படங்களை விருது படம் , விழா படம் என மக்கள் கூறி விடுவார்கள்.

ஆகவே ஊடகத்தில் சுயேச்சையான சுதந்திரமான குரல் என்பது  பெரும் அறைகூவலான விடயம்தான். இது கடினமான சங்கதிதான். ஆனால் சாத்தியமற்றது என நான் நினைக்கவில்லை.
இதற்கு மக்களிடையே ஆழ்ந்த பற்றுறுதி வேண்டும்.ஆனால் கவலை தரத்தக்க விடயமென்வென்றால் இளைய தலைமுறையினரிடையே ஆழ்ந்த பற்றுறுதி இல்லை. 

படத்தை எடுக்குமுன்னரேயே இந்த படம் எப்படி ஓடும்? பணம் எங்கிருந்து வரும்? நான் எப்படி இதை பண்ணுவேன்? எனக்கேட்கின்றனர்.உலகெங்கும் சுயேச்சையான் குரல் என்பது அறை கூவலானதொன்றுதான்.
ஆனால் இரான்,தாய்வான் ரோமானியா போன்ற சிறிய நாடுகளிலும்  பெரிய நாடுகளான அமெரிக்கா போன்ற இதர பல இடங்களிலும் மக்கள் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் இங்கு இந்தியாவில் எவ்வகையிலாவது பொருளாதாரம் கலையில் குறுக்கிடுகின்றது.இங்குள்ளவர்கள் பொருளாதார ரீதியாக எங்ஙனம் ஒப்பேறும் எனப்பார்க்கின்றனர்.
 நான் எவ்வாறு இந்த கதையைச்சொல்வது? அதற்கு எப்படியாவது ஒரு வழியை கண்டுபிடிப்பேன் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டும்.அப்படி ஒரு பேரார்வம் வேண்டும்.

நான் கல்லூரிகளுக்கு உரையாற்ற செல்லும்போது அங்கு இளைய சமூகம் என்னிடம் கேட்கும் கேள்வி இதுதான் ,”” நாங்கள் இதில் எப்படி பணம் உண்டாக்க முடியும்?இது எங்களுக்கு எப்படி உதவும்? “”
இருபது வருடங்களில் நிறைய மாற்றம் வந்துள்ளதை நான் காண்கின்றேன். நாங்களும் இளமையாக இருந்தபோது  சஃப்தர் ஹாஷ்மியின் தெரு நாடகங்களில் பங்கேற்றுள்ளோம். பணமும் இல்லை ஒன்றுமில்லை. அப்போதெல்லாம் நாங்கள் பணத்தைப்பற்றி சிந்தித்ததே இல்லை.
நாங்கள் ஃபாஸிசத்தைப்பற்றியும் மதச்சார்பின்மையைப்பற்றியும்  நாட கங்களை  நடத்தியுள்ளோம். உலகை மாற்றிடுவோம் என நம்பிய அதே சமயம் நாங்கள் வெகுளியாகவும் இருந்தோம் .ஆனால் இலட்சியக் கனவுடன் இருந்தோம். 

ஆனால் இன்று நகர்ப்புறங்களில் உள்ள இளைய சமூகத்தினைடையே இலட்சியக்கனவை காண்பது மிக அரிதாக உள்ளது. பணம் சம்பாதிப்பதெப்படி? எப்படி நல்லதொரு வேலையை பெறுவது? என்று மட்டுமே சிந்திக்கின்றனர்
நல்ல கதையுடன் வருகின்ற திரையுலக இளம்  படைப்பாளிகள் ,””எனது தயாரிப்பாளர் இரண்டு பாடல் இதில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என விரும்புகின்றார், எந்த நடிகைகளை போட்டால் சரியாக வரும்? பணம் எப்படி சம்பாதிக்கலாம்?”.” எனக்கேட்கின்றனர்.
பற்றுறுதி இருந்தால் துணிவு வரும். 
சிலர் என்னிடம் வந்து கேட்டனர் ,”” நீங்கள் எப்படி ஃபிராக் படத்தை எடுத்தீர்கள்? எப்படி இந்த துணிவு உங்களுக்கு வந்தது?
 நான் கூறினேன் ,” துணிவை கண்டுபிடிப்பதென்பது கடினமல்ல. அது ஆழ்ந்த பற்றுறுதியிலிருந்து வரக்கூடியது.
நான் ஃபிராக் படத்தை எடுத்த பிறகு கடும் விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டி வந்தது.
என்னை முஸ்லிம் ஆதரவாளர்,
பாகிஸ்தானை ஆதரிக்கக்கூடியவர்,
ஹிந்துக்களின் எதிரி என்றனர்.
 கோத்ரா தொடர்வண்டி எரிப்பைப்பற்றி நீ ஏன் எடுக்கவில்லை? அதன் எதிர்வினையைப்பற்றி மட்டும்தானே எடுத்துள்ளாய். நீ ஏன் கஷ்மீர் பற்றி எடுக்கவில்லை? என மடத்தனமாக கேட்டனர்.
“பிரச்சினையில்லை. என்னைப்பற்றி என்னென்ன எதிர்மறையான கேள்விகளெல்லாம் கேட்க முடியுமோ அவையனைத்தையும் கேளுங்கள். அவற்றிற்கு விடை தருகின்றேன். அப்பொழுதுதான் நான் சொல்ல வேண்டியதை சொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் “ எனக்கூறினேன்.
அதாவது மிகவும் ஆழ்ந்த பற்றுறுதி இருக்க வேண்டும். என்னிடம் நீங்கள் உன் பெயரென்ன என 20 தடவை  அடித்து கேட்டாலும் நான் நந்திதாதாஸ் என்றுதான் சொல்வேனே தவிர அனிதா என சொல்லமாட்டேனல்லவா? .இதற்கு நான் அஞ்சமாட்டேன்தானே?
 இதே போல்தான் நாம் மனித விழுமியங்களிலும் பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் .அப்போதுதான்  நீங்கள் துணிவை காணவியலும். சில பொழுது அவை காணப்படுவதில்லை. எனினும் அது இருக்கின்றது. அது மறைந்தும், குறைவாகவும் காணப்படுகின்றது. நாம் இந்த புள்ளிகளை  இணைக்க வேண்டும்.
இது நிறைய பேரிடம் ஒசையின்றி காணப்படுகின்றது. நாம் அதை தெரிந்து கொள்வதில்லை ஊடகங்களும் இது போன்றவற்றை வெளிக்கொணருவதில்லை . எனவே நாம்  நம்பிக்கை இழக்கின்றோம். நன்மையில் நம்பிக்கையற்றவர்களாகி விடுகின்றோம்
 எனவே நாம் அது போன்ற  மாணிக்கங்களை கண்டு பிடித்து இணைக்க வேண்டும். நாம் அவர்களிடம் கூற வேண்டும்,” நீங்கள் தனித்தவர்களல்ல உங்களைப்போல் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். “
எனினும் இது கடினமானதுதான் ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. நான் எதிலும் நன்னம்பிக்கையையே காணுபவள். நான் எப்போதும் அப்படித்தான்.

.11.அரச பயங்கரவாதத்திற்கெதிராக நிற்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை  தனிமைப்படுத்தி தண்டிக்க எடுக்கப்படும்  முயற்சி யை எப்படி எதிர்கொள்வது?

முதலில் இது குறித்து நாம் பொது மக்களிடையே கருத்தை ஏற்படுத்த வேண்டும்.அதன் பிறகு இவர்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களே சிந்திப்பர். இவர்களை நல்லவர்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் போதுமான தகவல்களில்லை. அதன் விளைவாக, 

” பினாயக் ஸென்னா? அவர் மாவோயிஸ்டாயிற்றே?” முடிந்தது கதை.
“அருந்ததி ராயா? அவர் அரசிற்கெதிராக எழுதுபவராயிற்றே!”
“தீஸ்தா செதல்வாட் எப்பொழுதும் வழக்குகளைப்பற்றிப்பேசுவார். 10 வருடத்திற்கு முன்னால்  நடந்தவற்றைப் பற்றியே இப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றார். எப்பொழுதும் குஜராத்தைப்பற்றியே பேசுவார்”.

நாம் இன்னும் நாட்டுப்பிரிவினையைப்பற்றிப் பேசிக் கொண்டுதானி ருக்கின்றோம்.
ஜர்மனி இன்னும் ஹோலோகாஸ்ட் பற்றி பேசிக் கொண்டுதா னிருக்கின்றது.

பத்து வருடங்கள் என்பது எற்கனவே தாமதம்.  மக்கள் நீதியைப்பெற்றால் நாம் அதைப்பற்றிப் பேசத்தேவையில்லை. மோசமான காலங்களைப்பற்றி நாம் நினைவுபடுத்திக்கொண்டிருக்கத்தேவையில்லை .நாம் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும். ஆனால் நாம் நமது தவறுகளிலிருந்து பாடங் கற்பதில்லை.
ஒடிசாவின் கந்தமாலிலும் அதையேதான் செய்தோம்.எண்ணற்ற பழங்குடி பகுதிகளிலும் அதையேதான் செய்கின்றோம்.
இன்னமும் குஜராத்தின் சிறந்த முதலமைச்சராகவும், திரு உருவாகவும் நரேந்திர மோதி  அழைக்கப்படுகின்றார். அவருக்கு விருதுகள் கொடுக்கப்ப டுகின்றன.சிறப்பு புலனாய்வு குழு அவரை எல்லா குற்றங்களிலிருந்தும் விடுவிக்கின்றது.
நாம் எப்படி போராடாமல் இருக்க முடியும்?

                                  நேர் காணல்: அமீர் அப்பாஸ்,  பஷீர்.
                                                                                               

                                                                                                                                                                                    






.