Wednesday, June 6, 2012

அழகியல் ஆன்மீகம்



'கடவுள் நம்பிக்கையற்ற ஒரு செல்வந்தன் ஒரு ஊரில் வாழ்ந்துவந்தான். தன் பிள்ளைகளும் கடவுளை நம்பக்கூடாது என்பதற்காக அவர்களை வெளியே விடாமல் வீட்டின் நான்காவது  மாடியில் வைத்து வளர்த்தான். சில வருடங்கள் சென்றன. கடவுள்  இருக்கிறாரா என பிள்ளைகளிடம் விசாரித்தான். ஆம் இருக்கிறார் என்றார்கள். அவன் அதிர்ந்து போனான். வீட்டின் மேல் மாடியிலிருந்து தம்மைச் சூழவிருக்கும் பிரபஞ்சஅழகியலின் அடியாகவே அவர்கள் கடவுளை அறிந்து கொண்டதாகச் சொன்னார்கள்.'

எம்மைச் சூழவிருக்கும் மகாபிரபஞ்சம் எத்தனையோ விடயங்களை எமக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றது. இருந்தாலும் மனிதன் தனது அன்றாட அலுவல்களுக்கு மத்தியில் மறந்துவிடுகின்றான்.

இப்பிரபஞ்சஅழகியல் இறைவனது இருப்பை உறத்துச் சொல்கின்றது. அந்த அழகியலை ரசிப்பவன் நிச்சயம் இறைவனைத் துதிக்கச் செய்வான்.

'இறைவா இவற்றை நீ வீணுக்காகப் படைக்கவில்லை..நீ தூய்மை யானவன்.. எங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பாயாக !'

படைப்புக்களின் அழகைக் காண்பவன்,ரசிப்பவன் அதன் ஆன்மீக சுகந்தத்தை உணர்ந்து கொள்கிறான். அவன் நாவு 'ஸுப்ஹானல்லாஹ்' என இறைவனைத் துதிக்க ஆரம்பித்துவிடும்.அதனை ரசிப்பதன் ஊடாக நாம் அல்லாஹ்வைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் படிப்பினை பெறவில்லையாயின் நரகநெருப்பு காத்திருப்பதாக முன்னைய அல் குர்ஆன் வசனம் சொல்லி முடிகிறது.

பிரபஞ்ச அழகியல் ஆன்மீகத்தின் அடிநாதமாக இருக்கிறது. எம்முடன் இருக்கும் ஆன்மீக மூலத்தை நாம் மறந்து விட்டோம்.

'இறைவா
பிரபஞ்சம் உன் வேதம்
ஒவ்வொருபடைப்பும்
உன் வார்த்தை'

என ஒரு கவிஞன் எழுதினான். பிரபஞ்ச அழகியலைத் தரிசிக்கும் ஒருவன் ஆன்மீக சுகத்தை இயற்கையான சுவையை அனுபவிக்க முடியும்.        எல்லோரும் ஆன்மீகத்திற்காக எத்தனையோ புத்தகங்களை வாசிக் கிறார்கள். ஆனால் அவர்கள் காணும் உலகை வாசிக்க மறந்து விடுகிறார்கள்.

அழகியலில் ஆன்மீகத்தைத் தரிசிப்பது போலஆன்மீகத்திலும் அழகியல் கலந்திருப்பது அவசியமாகின்றது. அதனால் தான் இஸ்லாம் எதனையும் நேர்த்தியாகச் செய்யச் சொல்கின்றது. நேர்த்தியென்பது எத்தனை பெரிய அழகியல்!

அல்குர்ஆனை அழகிய முறையில் ராகம் எடுத்து ஓதும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள். ஏனெனில் அதனை அழகியலோடு செய்யும் போது அதில் ஆன்மீகத்தை அடைய முடிகிறது.

ஆழகியலற்றவரட்டுச் சிந்தனைகளால் வாழ்க்கை ஒருபோதும் அழகடை வதும் இல்லை,ஆன்மீகம் பிறப்பதுமில்லை. 

ஆன்மீகம் என்பது வெறுமனே பள்ளியினுள் இருப்பதுமட்டுமல்ல. அது நமது இதயத்தினுள் இருப்பது. அழகியல் ஊடாகவும் ,அழகான செயல்களி னூடாகவுமே நாம் அதனைப் பெற்றக் கொள்கிறோம்.

இம்மாத 'இஸ்லாமிய சிந்தனை' இதழில் வெளியானது