Thursday, May 30, 2013

டி.எம்.எஸ்-நம் காலத்தில் இல்லாத குரல்



காலை உணவுக்காக சைவக் கடையில் போய் அமர்ந்தேன்.டி.எம் சௌந்தராஜன் பாடிக் கொண்டிருந்தார்.கடைக்கார அண்ணா உற்சாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அவரது பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பே ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

Wednesday, May 29, 2013

பச்சை இலையின் கருப்பு நிறம்.




பாலாவின் பரதேசி திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் எனக்கு ஏனோ இருக்கவில்லை.அண்மையில் வாங்கிய சஞ்சிகைகளில் அது குறித்த விமர்சனமே அதிகம் இருந்ததால் படத்தை பார்க்க வேண்டியேற்பட்டது. அண்மையில் இலங்கையில் முதலாவது தேயிலை பயிரிடப்பட்ட லூல்கந்த பிரதேசத்திற்கு சென்றுவந்திருந்தேன்.அந்த அனுபவம் பரதேசியை மேலும் பார்க்க ஆவல் தந்தது.

Wednesday, March 27, 2013

பிரார்த்தனை ஆயுதம்


பனி கொட்டும் அதிகாலையில் நிலவின் கலங்கம் தெரியும் வானைப் பார்த்து தன் இரு கரங்களையும் ஏந்திப் புரியும் ஒருவனின் பிரார்த்தனை வீண் போக வாய்ப்பில்லை. எல்லா மனிதரும் தம் நெருக்கடி மிகுந்த பொழுதொன்றில் யாரோ ஒருவனிடம் பிரார்ததனை புரியவே செய்கின்றனர்.கடவுள் நம்பிக்கையற்ற ஒரு நாஸ்திகனும் தன் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள வானத்தைப் பார்த்துக் கொள்கிறான்.

ஓவ்வொரு நாளும் கோடிப் பேரினுடைய குரல்கள் வானத்தின் பக்கம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.வானவர்களும் அல்லாஹ்வும் அதனை செவிமடுக்கிறார்கள்.காற்றின் திசைகளிலும் வானவெளியிலும் அவை அலைந்து கொண்டு அங்கீகரிப்பிற்காக காத்து நிற்கின்றன.

Tuesday, March 19, 2013

Life of Pi -போராட்டத்தின் குறியீடு


Life of Pi (லைப்ஃ ஒப் பை)என்ற புதின நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை அண்மையில் புத்தகசாலை ஒன்றில் பார்த்தேன். இந் நூல் 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (Yann Martel) என்பவரால் எழுதப்பட்டது.விலை ஆயிரத்தையும் தாண்டி இருந்தது.புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவலை அதே பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.இந்திய விலையின் நான்கு மடங்கு செலுத்தித்தான் இலங்கையில் புத்தகம் வாங்க வேண்டும்.இலங்கையின் அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அவ்வளவு பணம் கொடுத்து புத்தகம் வாங்குவது என்னைப் போன்றவர்களுக்கு கஷ்டமானதுதான்.ஒவ்வொரு புத்தகம் வாங்கி வரும் போதும் உம்மாவின் ஏச்சுடன்தான் அதனை புத்தக ராக்கையில் வைக்க வேண்டும்.இதனை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு விடயத்திற்கு வருவோம்.

Tuesday, March 5, 2013

டோனி ஹஸன்-இசைப் பயணத்தின் 50 ஆண்டுகள்



டோனி ஹஸன் அவர்களை எதேர்ச்சையாக ஒரு நாள் மாலையில் பள்ளி வாயலில் சந்தித்தேன்.பின்னர் அவரைச் சந்திக்க ஒரு மழையுடன் கூடிய நாளில் அவரது வீட்டிற்குச் சென்றேன்.அன்று அவருடைய 63 ஆவது பிறந்த நாளாக இருந்தது.இசை உலகில் அவருடைய 50 ஆவது வயதை அன்று அவர் நிறைவு செய்திருந்தார்.வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.அன்று சுகயீனமாக இருந்தாலும் நான் ஒலிப்பதிவுக் கருவியை தயார் செய்யவே தன்னை சுதாகரித்துக் கொண்டு அமர்ந்தார்.வழமை போல நான் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.

எப்போது இசைத்துறைக்கு வந்தீர்கள்.


நான் பத்தரமுல்லஇதலங்கமையை பிறப்பிடமாகக் கொண்டவன்..1962 இல் நான் சங்கீத மேடைக்கு வந்தேன்.அப்போது கொம்பனித் தெருவிலே ஒரு சங்கீதக் கச்சேரி நடைபெற்றது.பெரிய கலைஞர்கள் அதில் பங்கெடுத்தார்கள். அங்குதான் எனது இசைப் பயணத்தின் முதல் எட்டு ஆரம்பமானது.அப்போது சிங்களப் பாடல்கள்தான் அதிகமாகப் பாடினேன்.எனது 16 ஆவது வயதிலே என்னுடைய வித்துவான் ஆர்.முத்துசாமி(மோகன் ராஜின் அப்பா) 'ஒபநெதிநம்' எனும் படத்தில் மூத்த கலைஞர் ஜே.எ மில்டன் பெரேராவுடன் இணைந்து ஒருபாடலைப் பாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.அது நினைத்துப் பார்த்திராத ஒன்றாக இருந்தது.67 இல் ஒடிஷனில் தேறி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பணத்திற்கு வந்தேன்.70 களில் உயர் தரக் கலைஞராக வந்தேன்.அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.பின்னர் தொடர்ச்சியாக சிங்களம்இதமிழ்இஹிந்தி பாடல்களில் 50 ஆண்டுகளாக இயங்கினேன்.

Friday, February 15, 2013

மொஹிதீன் பெய்க்: நகலெடுக்க முடியாத குரல்


அப்போது எனக்கு 14 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனது வாப்பாவின் தங்கை ஒருவர் வெளிநாடு சென்று வந்திருந்தார். இரண்டு பொருட்களைத் தவிர அவர் என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார் என்று எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஒரு விளையாட்டு விமானம் மற்றது மொஹிதீன் பெய்க்கின் பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பேழை). அந்த விமானம் இப்போது இல்லை.ஆனால் ஒலிப்பேழை இருக்கிறது.

மொஹிதீன் பெய்க் இந்தியாவின் தமிழ் நாடு,சேலத்தில் 1919 டிசம்பர் 5 இல் பிறந்தார்.1932 ஆம் ஆண்டு இலங்கைக்கு இடம்பெயர்ந்தார்.இசையின் தேடல் எப்போதும் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.வேறு விடயங்களில் அவர் நாட்டம் கொள்ளவில்லை.கல்வியில் ஆர்வம் இல்லை என்பதை அவரது தலைமை வாத்தியார் ஒரு முறை தந்தையை அழைத்துச் சொல்லிவிட்டார்.அடுத்த நாள் திருச்சியிலுள்ள ஒரு நடனக் கம்பனிக்கு பெய்க் ஓடி விட்டார்.தனது உஸ்தாதுடனே இருக்கப் போவதாக வீட்டுக்குச் சொன்னார்.

Sunday, February 10, 2013

இறந்த வீட்டில் வசிப்பவர்கள்


நண்பர் பகல் நிலவனின், கட்டடக்கலையை எளிமையாகவும் கவித்துவமாகவும் சூழலுக்கு பாதிப்பில்லாமலும் அமைக்கலாம் என்பதனை தெளிவு படுத்தும் ஒரு அருமையான கட்டுரை.அவசியம் அனைவரும் படிக்க வேண்டியது.


'சுவர்களும் அதற்கு கதவுகளும் கொண்ட எனது வீட்டிற்கு நான் செல்ல வேண்டும், எனக்கான குடியிருப்பு என்று உலகின் எந்த ஒரு மூலையில் கிடைத்தாலும் அதைப் பற்றிய கவலை எனக்கில்லை, அது அட்லாண்டிக் கடலின் மீது இருந்தாலும் சரியே......'.

சமீபத்தில்  வாசித்த கட்டுரையில் வரும் வரிகள் அவை.
இந்த நிலப் பரப்பில் தனக்கென சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு வாழ்விடம் வேண்டும் என விரும்பாத மனிதர்களே இல்லை.
பறவைகளும் விலங்குகளும் காட்டில் வசிக்கும் ஆதி வாசி மனிதர்களும் தங்களுக்கான வசிப்பிடத்தை இயற்கையை ஒட்டியே அமைத்துக்கொள்கின்றனர். இயற்கையும் தனது பசுமையான கரங்களைக்கொண்டு அவைகளை ஆதுரத்துடன் பொதிந்து கொள்கின்றது.
ஆனால் நாட்டில் வாழும் மனிதன் தனது இருப்பிடத்தை . காடு, வயல்,மலை , நீர் நிலைகளை அழித்து அமைக்கின்றான்.  இயற்கையின் பேரழிவுகளில்தான் தான் வாழ இயலும் என உறுதியாக நம்பவும் செய்கின்றான்.

Tuesday, January 1, 2013

இங்லிஷ் விங்லிஷ் – மறுக்கப்படும் பெண்மையின் குரல்


இது ஒரு நல்ல திரைப்படமாக இருக்கிறது எனக் கூறி எனது நண்பர் ஒருவர் இத்திரைப்படத்தை என்னிடம் தந்தார்.'இங்லிஷ் விங்லிஷ்' என்ற பெயரைப் பார்த்ததும் நிச்சயம் இத்திரைப்படம் நன்றாக இருக்காது என்றே மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது திரைப்படம்.தமிழ் சினிமாவின் வழக்கமான பள்ளத்தாக்குகளில் விழாமல் வேறு திசையில் படம் பயணிக்கின்றது.

மொழி அறியாமையை மையமாக வைத்து ஒரு குடும்பத்தில் கணவன் இமனைவி,பிள்ளைகளுடனான வாழ்வின் அம்சங்களைச் சுற்றிக் கதை நகர்கிறது.இன்றைய ஆங்கில யுகத்தில் அந்த மொழியை அறியாத சஷி தன் குடும்ப வாழ்வில் கணவனிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் என்னமாதிரியான எதிர்வினைகளை எதிர்நோக்குகிறாள்,அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதுதான் கதையின் சுருக்கம்.

Tuesday, December 18, 2012

மரங்கள்

வைக்கம் முஹம்மது பஷீரின் இக்கதையை எட்டு வருடங்களின் பின்னர் மறுபடியும் வாசித்த போது உங்களுடன் பகிராமல் இருக்க முடியவில்லை


ஒரு அழகிய மரத்தைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். குழந்தைகளெல்லாம் இப்படிப் பக்கத்தில் வந்து இருங்கள். என்னால் சத்தம் போட்டுச் சொல்ல முடியாது. வயசு ரொம்ப ஆயிருச்சல்லையா சீக்கிரம் செத்துப் போயிருவேனென்று தோன்றுகிறது. இதில் ஒன்றும் சங்கடமில்லை. நீங்கள் எல்லோரும் தோன்றுவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே நான் இங்கே வந்துவிட்டேன் என்று ஞாபகமிருக்கட்டும். என்றாலும், அழகான இந்த உலகத்தை விட்டுப் பிரிய கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கிறது. குழந்தைகளே அழகாக இருப்பதற்கு என்ன காரணமென்று, பர்வதங்கள், மலைகள், குன்றுகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள், சமுத்திரங்கள், உயிரினங்கள் இவைகளெல்லாம் விட ரொம்ப ரொம்ப அழகான விஷயம் எதுவென்று தெரியமா? மரங்கள். இவைகளெல்லாம் கடவுளின் தனிப்பட்ட அனுக்கிரகம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனிதர்களை விட மேலானவை மரங்கள். எனக்கு இந்த உலகத்திலுள்ள எல்லா மரங்களைப் பற்றியும் உங்களோடு சொல்ல வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏராளமான மரங்களைப் பார்த்திருக்கிறேன். நானே நிறைய நட்டி வளர்த்துமிருக்கிறேன். நீங்கள் கவனமாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிற கதையை விட அழகான கதைகளை நீங்களும் சொல்ல முடியும்.

அழகான ஒவ்வொரு கதைதான் ஒவ்வொரு மரமும்.
நீங்கள் ஒரு மரத்தைத் தொடும்போது பெரும்பாலும் ஒரு மனிதரைத் தொடுவதாகவே நினையுங்கள்.

உங்களால் பார்க்கவியலாத ஒரு மனிதனின் உழைப்பு ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் இருக்கிறது.

ஒரு மரம் நட்டு வளர்ப்பது ஆயிரம் புண்ணிய ஸ்தலங்களின் தரிசனத்தை விடவும், ஆயிரமாயிரம் பிரார்த்தனைகளை விடவும் மேலானது. நான் சொல்கிற இந்தக் கதையில் நிறைய மகாத்மாக்களுண்டு. இவர்களில் யதார்த்த மகாத்மா யாரென்று நீங்கள் கண்டு பிடியுங்கள்.

கதை இதோ வருகிறது. ஒரு இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பு கதை துவங்குகிறது. அன்று இந்தியா ஒன்றாகவிருந்தது. பாகிஸ்தான் உண்டாகவில்லை. இந்தியாவில் சில பகுதிகளில் சுற்றி கேரளத்திற்கு வந்து ஒரு நகரத்தில்  இலக்கியவாதியாக, வசித்து வருகிறேன். 

பாதையருகில் உள்ள ஒரு சிறய வீடு. அதன் மூலையிலுள்ள ஒரு சிறிய அறை, அதில் பெட்டி, படுக்கை, ஒரு சாய்வு நாற்காலி, ஷூஸ், ஒரு பிரிமஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள் எல்லாம் நானே செய்து கொள்வேன். சமையல், சவரம், துணி துவைத்தல், ஏதோ செய்து சாப்பிடுவேன். நிறைய எழுதுவேன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவில்லையே. ஒரு பைப்பு.

இந்த அறைக்கு அடுத்த ரோட்டிலிருந்து அக்கம் பக்கத்திலுள்ள வீட்டுக்காரர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, ஆனால், என்னுடைய முக்கியமான வேலை பைப்பு பூட்டுவதுதான். யாராவது தண்ணீர் எடுத்துவிட்டு பைப்பை பூட்டாமல் போவார்கள். தண்ணீர் சர்ரென்று வீணாக ஒழுகிக் கொண்டிருக்கும். நான் எழுந்து சென்று பைப்பைப் பூட்டுவேன். இந்த பைப்பு பூட்டலை ஒரு நாளைக்கு பத்து நாற்பது தடவை செய்ய வேண்டியிருக்கும். சில நேரம் பாதி ராத்திரியில் உறக்கதிலிருந்து எழுந்து சென்று பூட்டிவிட்டு போவேன். இது ஜனங்களுடைய கவனக் குறைவால் ஏற்படுகிற நிகழ்ச்சி. கடவுளின் மகத்தான கருணையல்லவா தண்ணீர். இது எல்லா உயிரினங்களுக்கும் மரங்களுக்கும் வேண்டும். இதை வீணாக்கக் கூடாது. 

இந்த அறிவு ஏன் ஜனங்களுக்கு உண்டாகவில்லை. இதைப்போல, குப்பை கூளத்தை அள்ளி சாலையில் போடுவதும் சாலையில் மலஜலம் கழிப்பதும் செய்யாமலிருக்க வேண்டும். வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இங்கிலீஷில் ஏதோ சொல்வார்களே “சிவக் சென்ஸ் என்றோ, வேறோ, அது நமக்கு கொஞ்சம்கூட இல்லை. (இன்று பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் போய் விட்டது.

 இந்தியா சுதந்திரமடைந்து விட்டது. நாம் தான் நம்முடைய நாட்டை ஆட்சி செய்கிறோம். என்றாலும் பொதுச் சொத்துக்களை நஷ்டப்படுத் தாமலிருக்கவும், வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும் நாம் படிக்கவில்லை. மனிதன் மாறாமல், கவர்ன்மெண்ட் மட்டும் மாறியதனால் பெரிய காரியங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை)
அந்த பைப்பு காரணமாய் கடைசியில் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. உறக்கத்திலிருந்து திடுக்கிட்டெழுந்து நான் காதைத் தீட்டிக் கொண்டே கிடப்பேன். எழுந்து சென்று பைப்பைப் பூட்டி வந்து படுப்பேன். உறக்கம் வருவ தில்லை. இந்த முட்டாள் மனிதர்கள் அதைப் பூட்டி விட்டுப் போகக் கூடாதா?

அப்படி ஒரு கடுங்கோடை காலம் வந்தது. மத்தியானம் ரெண்டு மணியிருக்கும். வழக்கம் போல யாரோ ஒரு நீசன் பைப்பைத் திறந்து விட்டான் ஒரு வேளை நீசியோ?

நான் அசையவில்லை. வழியில் போகிறவர்களில் யாராவது பகுத்தறிவுள்ளவன் இருக்கிறானா என்று பார்க்கலாம். திறந்த பைப்பிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆட்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் கவனிக்கவில்லை. நான் அந்த மனிதர்களை எண்ணத் தொடங்கினேன். ஒன்று... இரண்டு.. அப்படி இருபத்தியொரு பேர்களை எண்ணினேன். அவர்களெல்லாம் கடந்து போய்விட்டார்கள். அப்போது தூரத்திலிருந்து இருபத்தியிரண்டாவது ஆள் வந்து கொண்டிருந்தான். வெளி மாநிலத்தவராக இருக்க வேண்டும். நடை ரொம்ப வேகமாயிருந்தது. தலையில் ஒரு தொப்பி, காக்கிச்சட்டை, காக்கி    ஹாஃப் டிரவுசர்ஸ், கால்களில் கான்வாஸ் ஷூ, முதுகில் ஒரு பெரிய காக்கி கிட்பேக், கையில் ஒரு தடி, தாடி மீசை வளர்ந்திருந்தது.

அந்தப் பயணி தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த பைப்பிற்குப் பக்கத்தில் நடந்து போய் விட்டார். இல்லை. அவர் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பின்பு பைபின் அருகில் சென்று பைப்பைப் பூட்டினார். பின்பு ஏதோ யோசித்தார். ஒரு நிமிஷம் தயங்கி, தடியை கீழே வைத்திருந்த கிட்பேக்கின் முதுகில் ஹாட்டுக்கு அருகில் வைத்தார். தலை முழுவதும் வழுக்கை, தலையைத் தடவிக் கொண்டு ஒரு நிமிஷ நேரம் நின்றார். சுற்றிலும் பார்த்துவிட்டு எதிரேயுள்ள கொல்லைப் பக்கமாய் போனார். 

அங்கே ஒரு அஞ்சு தென்னையும், நிறைய குறும்புதர்களும் மண்டியிருந்தன. அங்கே சென்று அவர் ஒண்ணுக்கிருந்தார். அவர் வேகமாய் திரும்பி வந்து கிட்பாக்கைத் திறந்து அதிலிருந்து அலுமினியப் பாத்திரத்தை எடுத்து பைப்பைத் திறந்து குளிர்ந்த நீரைப் பிடித்துக் கொண்டு கொல்லைப் பக்கமாய் போனார். அவர் அந்த வாடி வதங்கிய செடியின் அருகில் அமர்ந்து அதனைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டிப் பாத்தி கட்டி, அந்தச் செடிக்குத் தண்ணீர் விட்டார். ஒரு மூன்று தடவை அவர் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் ஊற்றினார். பின்பு வந்து ஷூஸ் கழற்றி கைகால் முகம் கழுவினார். 

நான் எழுந்து அவருக்கு முன்பாகவே கொல்லைப் பக்கம் சென்று அவர் தண்ணீர் ஊற்றிய செடியைப் பார்த்தேன். ஒரு சிறிய கன்று, ரெண்டு மூன்று கிளைகளிருந்தன. நான் அவருக்கருகில் போய் நின்றேன்.
இந்த மகாத்மா யாரு?

அவர் ஷூஸ் மாட்டி, ஒரு பீடி கொளுத்திப் புகை விட்டுக் கொண்டே என்னைப் பார்த்தார். பின்பு சொன்னார்.

“ஏதோ ஒரு மகாத்மா மாம்பழம் தின்றுவிட்டு கொட்டையை எறிந்து வளர்ந்ததுதான் அந்த மாங்கன்று. அவர் மகாத்மாவேதான். 

இல்லையென்றால் அதைக் கொல்லைப் பக்கமாய் எறியாமலிருந்திருப்பார். அநாதையான ஒரு குழந்தையைப் போல ஆதரவில்லாமல் அது மடியத் தொடங்கியிருந்தது

நான் கேட்டேன், “நீங்கள் யார்?
அவர் சொன்னார், “சுபராம், ஒரு ஊர் சுற்றி ஒன்பது வருஷமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். கேரளம் சுற்றிப் பார்த்து விட்டு சிலோனுக்குப் போக வேண்டும்.

நான் சொன்னேன். “கஷ்டமில்லையென்றால் என் சார்பில் ஒரு டீ குடித்து விட்டுப் போகலாம்.

அதிர்ஷ்டவசமாய் என்னிடம் அப்போது ஒன்பது ரூபாய் இருந்தது. அவர் மூட்டை முடிச்சுகளுடன் என்னுடைய அறைக்கு வந்தார். நான் அவரை என்னுடைய சாய்வு நாற்காலியில் உட்கார வைத்தேன். நான் ஒரு பத்திரிகைத் தாளை விரித்து அதில் அமர்ந்தேன். பின்பு ஸ்டவ்வும், பாத்திரமும் எடுத்தேன். ஸ்டவ் பற்ற வைத்தேன்.

நான் சொன்னேன், “உங்களுடைய பாத்திரத்தில் நீங்களே தண்ணீரெடுத்து ஸ்டவ்வில் வையுங்களேன்.

சுபராம் கேட்டார். “உங்களுடைய பாத்திரத்தில் என்ன கோளாறு?
நான் சொன்னேன். “கோளாறு இருக்கு, இது ஒரு முஸ்லிம் உபயோகப்படுத்துகிற பாத்திரம். அந்த முஸ்லிம் நான்தான் பேர் பஷீர். வைக்கம் முகமது பஷீர் என்று சொல்வார்கள்.

இத்தனையும் சொல்வதற்குக் காரணமிருக்கிறது. நான் இந்த சுபராமினுடைய நாட்டில் வசித்து வருகிறேன். அங்கே இந்துவும், முஸ்லிமும் கீரியும் பாம்பும் போல இருக்கிறார்கள். அங்கே ரெயில்வே ஸ்டேஷன்களில் “இந்து தண்ணீர் “முஸ்லிம் தண்ணீர்இருக்கிறது. இந்து தொட்டதை முஸ்லிமும், முஸ்லிம் தொட்டதை இந்துவும் சாப்பிட மாட்டார்கள்.

சுபராம் கேட்டார், “பஷீர் சாகிப் என்ன வேலை செய்கிறீர்கள்?
நான் சொன்னேன். பெரிய வேலையொண்ணுமில்லை. கொஞ்சம் கதைகள் எழுதுவேன்.

“இலக்கியவாதி இல்லையா?

நான் சொன்னேன், “இலக்கியவாதியில்லை. இலக்கியத்தைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது.

“அப்புறம் என்ன தெரியுமா?

நான் சொன்னேன், “எனக்கெதைப் பற்றியும் எதுவும் தெரியாது. கொஞ்சம் கதைகள் எழுதுவேன்.

“எதைப் பற்றியும் எதுவும் தெரியாதென்றால் எப்படி எழுதுகிறீர்கள்?

நான் எழுதுவதை யார் வேண்டுமானாலும் எழுத முடியும். கொஞ்சம் அனுபவங்கள் வேண்டும். எனக்குத் தாராளமாய் அனுபவங்களிருக்கின்றன. நானும் உங்களைப் போல ஒரு ஊர் சுற்றியாய் இருந்திருக்கிறேன். அனுபவங்களிருந்தால் எந்த மடையனும் கதைகள் எழுத முடியும்.

பின்பு நாங்கள் அப்படியே பேசிக் கொண்டிருந்தோம் ரவீந்திரநாத் தாகூர், காந்தி, முகமது அலி சர்தார். பகத் சிங், மௌலானா அப்துல் கலாம் படேவ், பிரிட்டிஷ் கவர்ன்மெண்;ட், பாகிஸ்தான் வாத் என்றில்லை ஏகப்பட்ட மனிதர்களைப் பற்றியும், ஏகப்பட்ட ராஜ்யங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டவ்வில் சும்மா எரிந்து தீர்ந்து ஸ்டவ் கெட்டுப் போன விஷயம் தெரிந்ததே திடீரென அந்த இரைச்சல் நின்ற போதுதான். மௌனமாக நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தோம்.

“அதோ போகிறது டீஆகாரம் சாப்பிட்டால் என்ன?

நான் சொன்னேன். “நாம் ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்.

சுபராம் சொன்னார், “என்னுடைய பையில் கோதுமை மாவும், கல்லும் இருக்கின்றன. சப்பாத்தி செய்யலாம். சப்பாத்தி செய்தது நான் தான். பச்சைமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பச்சைத் தணணீர் கொஞ்சம் ஊற்றினேன். பின்பு கைவிரல்களினால் மாவைப் பிசைந்து பதமாக்கி சிறிய உருண்டைகளாக்கி, ஒரு தாளில் மாவு போட்டு ஒரு சிறிய தடியினால் உருட்டிப் பரத்தி அவருடைய கரியடுப்பில் கல்லை போட்டு சப்பாத்தி சுட்டேன். அவர் என்னுடைய ஸ்டவ்வில் என்னுடைய பாத்திரத்தில் பருப்புப் போட்டு அடுப்பில் வைத்தார். கூடவே கொஞ்சம் பச்சை மிளகாயும் போட்டார். பருப்பு வெந்தபோது உருளைக் கிழங்கும் வெங்காயமும், மிளகாய்த் தூளும் கொஞ்சம் கொத்தமல்லிப் பொடியும், சிறிது மஞ்சள் பொடியும் போட்டு எல்லாம் நன்றாக வெந்த பிறகு, நான் கீழேயிறக்கி ஒரு கரண்டி தேங்காயெண்ணெய் விட்டேன். கொஞ்சம் கறிவேப்பிலையும் போட்டேன். நாங்கள் சப்பாத்தியை தின்று விட்டு தாராளமாய் தண்ணீர் குடித்துவிட்டு ஊர் பார்க்கப் போனோம். நாங்கள் நகரத்தில் அங்குமிங்கும் நடந்த பின்பு நகரத் திற்கு வெளியிலுள்ள ஒரு மரத்தினடியில் சென்று அமர்ந்தோம்.

(கே.எம். சந்தோஷ் எடுத்து அனுப்பிய கதை
நன்றி : சமிகாலிக மலையாளம்.
வாரிக, ஜூலை 98)
வைகறை-2005



 

Monday, December 17, 2012

நீர்ப்பறவை - விளிம்புநிலை மனிதர்களின் கதையாடல்

நண்பர் பகல் நிலவன் நீர்ப்பறவை குறித்து எழுதிய திரைப்பார்வை உங்கள் வாசிப்பிற்கு...


' பற பற  பறவை ஒன்று'  என துரித கதியில் ஷ்ரேயா கோசலின் குரலில் ஒலிக்கும் பாடலில் துயரும் மகிழ்ச்சியும் மெலிதாக இளங்காற்று போல் அலையலையாய் வந்து கொண்டே இருக்கின்றது. மொத்த படத்தின் குறியீடாகவும் இந்த பாடல் விளங்குகின்றது.

 மீனவர்கள் அல்லாத தமிழர்களாலும் ஏன் ராமேஸ்வரம் இதஞ்சை மாவட்ட மீனவர்களைத்தாண்டி தமிழகத்தின் மற்ற பகுதி மீனவர்களாலும் பொது மக்களாலும் அவ்வளவாக சிந்திக்கப்படாத ஒரு அரசியலை துணிந்து வணிக சினிமாவாக எடுத்துக்காட்டிய சீனு ராமசாமியை பாராட்டத்தான் வேண்டும்.

'கடலுக்கு போய் பிழைக்கத்தெரியாதவன் ஊருக்குள்ள போய் ஓட்டல்ல எச்சி தட்டையா கழுவுவான் ? ' என்கின்ற லூர்துவின் கேள்வியில் கடல் மீதான அவரின் நம்பிக்கையின் ஆழமும் நகரத்தின் மீதான  கசப்பும் பளீரென தெறிக்கின்றது. மனிதனின் இயல்புக்கெதிராக அவன் மீது  வலிந்து  திணிக்கப்படும் வாழ்வியல் வன்முறைக்கெதிரான அருவருப்பு அந்த கேள்வியில் கசிகின்றது. இது ஒன்றே இன்னொரு கதைக்கான கருவாகத்தான்படுகின்றது.

 மகன் அருளப்ப சாமியின் குடிப்பழக்க சீரழிவினால் ஏற்படும் வேதனையில் நெஞ்சு நொறுங்கும் தந்தையாக நிற்கும்போதும் இ மகனுக்காக கட்டிய கணவனை கூட மண விலக்கு செய்ய துணியும் மனைவியின் கொந்தளிக்கும் உணர்வுக்கெதிரே கணவனாக தளர்ந்து நிற்கும்போதும்   இ அதே மகனின் சேட்டைகளினால் அன்றாடம் கூலிக்காக மீன் பிடிக்கும் வேலை பறிபோகும்போது ஏற்படும் அவமானத்தில் ஒரு வேலையாளாக உறைந்து நிற்குமிடத்திலும்  கையாலாகாத உணர்வின் பல முகங்களை தகப்பன் லூர்துவாக நடிக்கும் ராம் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தனது மகனை குடிப்பழக்கத்திலிருந்து மீட்ட அந்த மருத்துவருக்கு நன்றிசெலுத்தும் முகமாக லூர்து தனது இரு கைகளிலும் பெரிய மீன் ஒன்றை எடுத்து மெதுவாக நடந்து செல்கின்றார்.



அதை மருத்துவ மனையின் படியில் கிடத்தும்போது கண்களில் நீர் நிறைந்து விட்டது. அவர் தனது கையில் ஏந்தியிருந்தது அவரது ஆன்மாவின் ஆக உயர்ந்த உன்னதமான நன்றி காணிக்கை .

மகன் அருளப்பசாமி சொந்தமாக ஒரு மீன்பிடி படகை வாங்கி அதில் தனது தகப்பன் லூர்து சாமியின் பெயரை பொறித்துள்ளான்.


அந்த பெயரை தனது கண்களை இறுக மூடிக்கொண்டு உழைப்பின் தழும்பேறிய தனது முதிய விரல்களால் மெல்ல வருடுகின்றார் லூர்து. அந்த வருடலில் அவரின் மன நொறுங்கல் இ தளர்ச்சி இ அவமானம் அனைத்தும் மெல்ல அழிந்து போகின்றது.

கடவுளுக்கு அடுத்தபடியாக இந்த அளவிற்கு கடலையும் மீனையும் தனது ஆன்மாவோடு இரண்டற கலந்துள்ள அந்த மீனவர்களின் வாழ்வை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

அப்போதுதான் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் இ பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் மீன்பிடி இ இந்திய அரசின் சிறப்பு கடலோர மண்டல சட்டம் இகூடன் குளம் அணு உலை என கடலிலும் கரையிலும் மீனவர்களின் ஆன்மாவின் மீதும் வாழ்வின் மீதும்  தொடுக்கப்படும் தொடர் தாக்குதலை தீவிரமாக எதிர்க்க முடியும்.

15 வருடங்களுக்கு முன்னால் வங்க மொழியில்  வெளியான பழைய கறுப்பு வெள்ளை திரைப்படம் ஒன்றை காண நேர்ந்தது. அதில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக திகழும் நதியானது ஒரு நாள் வறண்டு காணாமல் போய் விடுகின்றது. நிர்க்கதியாக நிற்கும் அந்த மக்களை கந்து வட்டி மூலம் மார்வாடி பனியாக்கள்  சுரண்டுகின்றனர். வாழ்வில் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தையும் இ திட்டமிட்ட சுரண்டலையும்  அந்த உழைக்கும் மக்கள் ஹிந்து – முஸ்லிம் என்ற மத பேதமின்றி தங்க ளுக்குள் உதவிகள் செய்து கொள்வதின் மூலம் கடந்து செல்கின்றனர்.

 அந்த படத்தை பார்த்ததும் சிறுபான்மையினரை குறி வைத்து ஏவப்படும் கேமிராரூவெள்ளித்திரையின் வன்முறைக்கு எதிரான படங்கள் என்பது வெறும் கனவுதானா ? என்ற ஏக்கம் நிலைத்தது.

அந்த ஏக்கத்தின் விடையாகத்தான் நீர்பறவையில் உதுமான் கனியின் பாத்திரத்தைக்காண முடிகின்றது.

உதுமான் கனியாக நடிக்கும் சமுத்திரக்கனி சிறுபான்மை அரசியலை தர்க்க நியாயத்தோடு சொல்லிடும்போது  சீருடையில் நிற்கும் காவலரை பார்த்து  நீயும் சம்பளம் வாங்கும் ஒரு உழைப்பாளிதான் என்பதையும் சேர்த்து நினைவூட்டுகின்றார்.


அத்துடன் பொது மக்களின் வரிப்பணத்தில் வாழ்பவர்கள்தான் காவலர்கள் என்ற உதுமான் கனியின் வசனம் மூலம் காவல்துறையின் வானாளாவிய வரம்பற்ற அதிகாரத்திற்கு ஒரு எல்லைக்கோடு வரையப்படுகின்றது.

காவலர்களை அதி மனிதர்களாக உயர்த்திப் பிடித்திடும் மாய பிம்பத்தை கட்டமைத்து அதன் வழியே ஒரு கெடு பிடி பாணியிலான ஃபாஸிச ஆட்சிக்கு  முன்னுரைக்கும் விஜயகாந்த் இ அர்ஜுன் ஆகியோரின் நுண்ணரசியலுக்கு மாற்று இவ்வாறுதான் இருக்க வேண்டும்.

உப்பள முதலாளி இமான் அண்ணாச்சியின் தங்கையாக நடிக்கும் மனோ சித்ரா அருளப்ப சாமியின் மீதான தனது காதலை பூரிப்புடன் வெளிப்படுத்துகின்றார். அந்த காதல் மறுக்கப்படும்போது முகத்தில் வாட்டத்தை காட்டுகின்றார். அவன் வேறொருத்திக்கு உரிமையானவன் என்பதை சட்டென  புரிந்து கொண்டு இயல்பாக பழகுகின்றார். மூன்று வகையான முரணான உணர்வுகளை அவர் இயல்பாக வெளிப்படுத்துகின்றார்.

உப்பளத்திற்கு புதியதாய் வேலைக்கு வந்த இரண்டு மீனவ வாலிபர்களும் வேலையில் தாக்குபிடிப்பார்களா?  என்பதை சோதித்தறிய முதலாளி வேடத்தில் உள்ள இமான் ' உப்பள தொழிலாளிகளுக்கு காலில் ரத்தமொழுகும் . உப்பளத்தின் வெண் நிற எதிரொளியில் கண் பார்வை மங்கி விடும் ' என்கின்றார்.

உடனேயே குண்டு பையனும் இ அருளப்ப சாமியும்  ' ஏற்கனவே உப்பளத்தில் வேலை பார்ப்பவர்களின் நிலை என்ன ? ' என எதிர் வினா எழுப்பும்போது அவர்களுக்கு பழகி விட்டது என முதலாளி அசடு வழிகின்றார்.

கறுப்புக் கண்ணாடியும் இ கனத்த காலுறையுமின்றி வருடக்கணக்கில் பணிபுரியும் உப்பள தொழிலாளர்களின் அவலமும் அங்கே உடைந்து வெளியாகின்றது.

எஸ்தரின் காதலும் இ மனோ சித்திராவின் தோற்ற காதல் முயற்சியும் இ திருமணமும் படத்தின் கருவான  அரசியலை மிகைத்து விடாமல் இருக்க அது தொடர்பான கட்டங்களை அளவோடு நகர்த்துகின்றார் இயக்குனர். நகைச்சுவையும் அதே அளவில்தான் கையாளப்பட்டுள்ளது.

அருளப்ப சாமி இ எஸ்தர் தம்பதியரின் பிரிவிற்கு முந்தைய காட்சியில் காமம் சொற்களில் வழிந்தோடுகின்றது. சொற்கள் பரப்பும் நெடியை தாள முடியவில்லை. ஹாலிவுட் படங்களில் கண்ட இடத்திலும் காமமிருக்காது. ஒரு காட்சியில் மொத்த படத்திற்கும் போதுமான காமத்தால் நிரப்பி விடுவார்கள். அது போல்தான் இங்கும் உள்ளது.

அருளப்ப சாமியை எஸ்தர் நிரந்தரமாக பிரியப்போகின்றாள் என்ற நிகழ்வின் மேல் கனத்தை கூட்டுவதற்காகவும் இ பிரிவை முன்னறிவிக்கும் முகமாகவும்  மசாலாவை விரும்பும் தமிழ் மனதை நிறைவு படுத்துவதற்காகவும் காமம் மிகையாக பயன்படுத்தப்பட்டி ருக்கின்றது என்ற சமாதானத்தை இயக்குனர் சொல்லக்கூடும்.

இனி வரும் படங்களில் இந்த நெருடும் நிகழ்வை இயக்குனர் கடந்து வருவார் என நம்புவதற்கான சான்றுகள் இந்த படத்தில் நிறைய உள்ளது

வயதான எஸ்தரை விசாரணை செய்யும் பெண் காவல் அலுவலராக நடிப்பவரோடு அந்த பாத்திரம் ஒட்டவேயில்லை. அவரது நடிப்பிலும் உடல் மொழியிலும்  காவல்தன்மை மிகக்குறைவாகவே இருந்தது.

கோபத்திலும் இ நேசத்திலும் இரு எதிர் துருவ முனைகளை கண நேரத்தில் மாறி மாறி தொடுவதில் மீனவர்களுக்கு நிகர் மீனவர்கள்தான். இந்த குணாம்சமும் மீனவர் வாழ்வின் மேல் தேவாலயத்தின் ஆதிக்கம் இ மீனவரிடையே உள்ள உள்முரண்கள் ஆகியனவும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடல் உள்ளிட்ட இயற்கை வடிவங்களை நாம் கண்ணில் காண்பது போல் கேமிராவிற்குள் உள்வாங்குவது என்பது அத்தனை எளிதல்ல. அது இங்கு சாத்தியப்பட்டுள்ளது. மேலிருந்து கீழ் காணும் காட்சிகளில் கடலும் இ காயலும் இ கரை மணலும் மாறி மாறி நிகழ்த்தும் வண்ண கலவை மனதில் நிற்கின்றது

படப்பிடிப்பு நடந்த தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு இ கூடுதாழை இ பெரிய தாழை உள்ளிட்ட கிராமங்களில் தாரங்கதாரா வேதியியல் ஆலை கழிவுகளினால் கடல் ரத்த சிவப்பில் மாறியிருந்தது. பச்சையும் நீலமுமாக எழிலூட்டும் கடல் சிவந்து போயிருந்தது என்பது மீனவர் வாழ்வின் துயரத்தை சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தது.

மகன் அருளப்ப சாமியின் படகை தந்தை லூர்து நெருங்கும் போது மகனின் படகிலிருந்த பல துளைகளின் வழியே கடல் நீர் வெளியேறிக்கொண்டிருந்தது. அருளப்ப சாமியின் உயிரற்ற உடலை நாம் திரையில் காணும் முன்னரே இந்த படிமம் அந்த துயரை நமக்கு முன்னறிவிப்பு செய்கின்றது.

 படிமங்கள் காட்சிகளோடும் நிகழ்வுகளோடும் இயல்பாக ஒட்டியிருந்தது.

எளிய கிராமக்  காட்சிகளும் அங்கு வாழும் நிஜ மனிதர்களும் திரைப்படத்தை அவர்கள் பங்கிற்கு செழுமைப்படுத்துகின்றார்கள். மீதி பங்கு செழுமையை தொழில் முறை கலைஞர்களிடமிருந்து சீனு ராமசாமி  கறந்துள்ளார்.

இயற்கை வளங்களுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பு இ விளிம்பு நிலை மனிதர்களுக்கும் இ சமூகச்சீரழிவில் உழல்வோருக்கும் மதத்தின் ஆறுதல் இ வர்க்க அரசியல் இ ஒடுக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிரான போரில் அடித்தள மக்களிடையே காணப்பட வேண்டிய ஒற்றுமை என திரைப்படம் நெடுக கதையாடல்  நிகழ்த்தப்படுகின்றது.

படத்தை பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது பரபரப்பான அண்ணா சாலையின் ஓரத்தில் 65 வயதிற்கும் மேற்பட்ட வயதுடைய மூதாட்டி சரிந்து விழுந்து கிடந்தார்.அவரின் உதடுகளில் உயிர் தனது இறுதி துளிகளில் துடித்து கொண்டிருந்தது.

அவரை சுற்றிலும் உலகம் எந்த நெருடலுமின்றி தனது போக்கில் போய்க்கொண்டே இருந்தது.

வங்காள விரி குடாவிலோ  அண்ணா சாலையிலோ  அல்லது மனிதர்கள் கூடும் பொது வெளிகளிலோ நிகழ்த்தப்படும்  மரணங்கள் மனித  நேயம் வறண்ட மனிதர்களால் எளிதில் கடக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் .

அவற்றை கலை வடிவிலும் களச்செயற்பாட்டின் உருவிலும் ஆவணப்படுத்துபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வறண்ட பாலை நடுவில் உள்ள சோலை போன்றவர்கள்.