Wednesday, December 12, 2012

நாம் கண்ணை மூடிக்கொள்கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். சீ. ரஸ்மின்  அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்






எம். சீ. ரஸ்மின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் விசேட பட்டம் பெற்று அதே பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தை அபிவிருத்திக்கான தொடர்பாடல் (Developmental Communication) துறையில் பூர்த்திசெய்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராகக் கடமையாற்றி வரும் இவர் 8 நூல்களை சிங்கள மொழியிலிருந்து பெயர்த்துத்தந்துள்ளார். ஊடகம், ஒலிபரப்புத் துறை குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் இவர் சமர்ப்பித்துள்ளதோடு அபிவிருத்திக்கான ஒலிபரப்பு, வானொலி நாடகம், பன்மைத்துவத்திற்கான ஒலிபரப்பு, ஒலிபரப்பு மொழியியல் (Broadcasting Linguistics)  மற்றும் பால்நிலையும் ஒலிபரப்பும் ஆகிய துறைகளில் ஈடுபட்டுவருகின்றார். சமூக வானொலி- மனித வலுவாக்கத்திற்கான ஊடகம் என்ற ஆய்வு நூலை அண்மையில் வெளியிட்டார். இந்தியா, மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வானொலி நாடகப் பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் எம். அஷ்ரப்கானின் வானொலி நாடகப் பாசறையில் வளர்ந்தவராவார். BBC யின் முன்னாள் வானொலி நாடகத் தயாரிப்பாளர் லூசிஹானா விடம் ஒரு மாதகால வானொலி நாடகப் பயிற்சியை பூர்த்தி செய்ததோடு வானொலி நாடகம் தொடர்பான சர்வதேசப் பயிற்சி நெறிகளிலும் பங்குபற்றியுள்ளார். தற்போது இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.

சந்திப்பு-இன்ஸாப் ஸலாஹுதீன்


வானொலி நாடகம் முஸ்லிம் சேவையில் ஏன் கைவிடப்பட்டது?


முஸ்லிம் சேவையில் சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு வானொலி நாடகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல செய்தி. உண்மையில் முஸ்லிம் வானொலி நாடகம் எமது சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய தனித்துவமான கலை. சமூகத்தில் பேசப்படாமலிருந்த பல பிரச்சினைகளின் குரலாக அமைந்தது. நாடகம் கேட்பதற் கென்று மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வானொலிப் பெட்டி தேடிப்போன ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் மீண்டும் வரப்போகின்றது என்கின்ற நம்பிக்கையோடு சொல்வதாக இருந்தால், நாடகம் கைவிடப்பட்டமைக்கு நிறையக் காரணங்கள் உண்டு. 


முஸ்லிம் நாடகங்களை எழுதியவர்கள் நாடு பூராகவும் இருந்தாலும் அதனை நடித்தவர்கள் பெரும்பாலும் கொழும்பையண்டியவர்கள். இதனால், நாடகத்தின் ஒரு பகுதி கொழும்பை அண்டியதாகவே வளர வேண்டியிருந்தது. சுமார் அறுபது ஆண்டு வரலாற்றில் சுமார் ஆறு பேர் மாத்தரமே முழு நேரத் தயாரிப்பாளர்களாக இருந்துள்ளார்கள். 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடகம் எழுத ஆட்கள் இல்லை என்ற நிலை உருவானது. சிறந்த பிரதிகளே வருவதில்லை. சில மூத்த எழுத்தாளர்கள் வேறு சிலரின் பெயர்களில் நாடகங்களை எழுதினர்.

தொடர்ந்து எழுதுவற்கு இளம் தலை முறையினர் தயாராக இருக்கவில்லை. இளம் தலைமுறையினர் தயார்படுத்தப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து நடிப்பதற்கும் இளம் தலைமுறை இருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில் என் போன்ற சிறுவர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அது தவிர, மூத்தவர்கள் வயோதிபத்தை அடைந்தபோது, வானொலி நாடகமும் அநாதையாகத் தொடங்கியது என்றுதான் சொல்வேன். இந்த பரம்பரை இடைவெளி நாடகம் கைவிடப் பட ஒரு முக்கிய காரணம். 


பரம்பரை இடைவெளியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞையும், முஸ்லிம் வானொலி நாடக பண்பாட்டினை பாதுகாக்க வேண்டும் என்ற நாட்டமும் உரியவர்கள் இடத்தில் இருந்திருந்தால் நாடகம் தொடர்ந்தும் ஒலித்திருக்கும். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன் - இறுதியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட அஸ்மி சாலியின் வரலாற்று நாடகம் ஒலிபரப்பாகாத நிலையில் நாடகத்தின் வரலாறு முடி வுக்கு வந்தது. இதன் பின்னர், நாடகம் ஒரு அநாதைக் குழந்தையைப் போலதான் பார்க்கப்பட்டது. 


ஒரு கட்டத்தில் அஷ்ரப்கான் போன்ற முன்னோடிகள் மன உழைச்சலுக்கு உட்பட்டனர். சமூகத்தின் நலன் கருதியாவது நாடகங்களை தயாரிக்க முயன்றாலும் கடைசிகால அனுபவங்கள் அவரின் உள்ளத்துக்கு அமைதியைக் கொடுக்கவில்லை. நாடகம் தயாரிக்கும் அவரது அர்ப்பணிப்பில் சிலர் குறுக்குமறுக்காக விழுந்ததை நான் கண்டிருக்கின்றேன். அத்தோடு, நாடகத் தயாரிப்பானது அதிகம் உழைப்பை வேண்டி நிற்கும் ஒன்று. அதற்கு அர்ப்பணிப்புடன், விடயதானம், சமூகத்தை நோக்கிய உண்மையான தரிசனம் மற்றும் நாடகத்தில் புத்தாக்க ஆளுமை என்பன வேண்டும். இதனால், இதில் விரும்பிக் கைவைப்பது பலருக்கு பிரச்சினைக்குரியது. நாடகம் தொடங்கப்படாமலிருக்க இதுவும் ஒரு காரணம். 


இலங்கை வானொலி கொடுப்பனவுகளை நிறுத்தியதால் நாடகம் கைவிடப்பட்டது என்ற ஒரு காரணமும் சொல்லப்படுகிறதே?  


சொல்லப்படுகின்றது. இதில் எனக்கு உடன்பாடில்லை. முஸ்லிம் நாடகத்தை உயிராக நினைத்து, ஒரு சமூகத்திற்கான சேவையாக நினைத்து பல்லாண்டு காலம் நடித்த முதியவர்களின் முதுகில் குத்துவதாவே இக்காரணம் உள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட 100 ரூபாய் சிலநேரம் அவர்களின் போக்குவரத்துக்குக் கூட போவதில்லை. சமூகத்தில் விழுமியங்களுக்கு உயிர்கொடுக்க தமது குரல்களை ஆண்டான்டு காலமாகத் தேய்த்துக் கொண்ட மூத்த கலைஞர்களின் உழைப்பு நூறு ரூபாய் இல்லாமல் நிறுத்தப்பட்ட தென்றால் இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். 


கொடுப்பனவே வேண்டாம் நாங்கள் ஒரு குடும்பமாகச் சேர்ந்து நடித்துத் தருகின்றோம் என்று பலர் முன்வந்தனர். நீங்கள் நாடகத்தை தொடங்குங்கள் நாங்கள் எழுதுகின்றோம் என பலர் துணிந்து சொன்னார்கள். வெறும் புகழினை சம்பாதித்துக் கொடுக்கும் தாக்கமற்ற நிகழ்ச்சிகளுக்காக கோடிகளை அள்ளியிறைக்கும் எத்தனையோ பேருக்கு இந்த நூறு ரூபாய் பெரியதல்லவே. 


நாடகம் நிறுத்தப்பட்ட காலப் பகுதியில் ஜாமியா நளீமியா, கொழும்புப் பல்கலைக் கழகம் மற்றும் வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் முஸ்லிம் நிழ்ச்சிகளில் குரல் கொடுத்தனர். அவர்கள் கொடுப்பனவை நாடி வந்தவர்கள் அல்லர். இத்தகைய ஒரு பரம்பரையினரை நாடகத்தின் பேரில் உருவாக்கியிருக்கலாம். எனவே, கொடுப்பன வுக்கும் நாடகம் நிறுத்தப்பட்ட மைக்கும் முடிச்சுப் போடத் தேவையில்லை. நாடகத்தை நிறுத்தப்பட் டது முஸ்லிம் ஒலிபரப்பின் இயலாமை. முஸ்லிம் சமூகத்தின் இயலாமை. இவ்விட யத்திலே  இலங்கை வானொலி உயர் நிர்வாகத்தை பிழை சொல்வது அதை விட இயலாமை.  


முஸ்லிம் ஒலிபரப்பை வயிற்றுப் பிழைப்புக்காக, அரசியல் இருப்புக்காக, சுய இலாபத்திற்காக பயன்படுத் துவர்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகமனது. இதனால், ஆளுமை மிக்க சிலர் ஒதுங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது. சிலர் தமிழ் சேவை தமது பெயருக்கு பாதுகாப்பு என்று நினைக்க வேண்டி ஏற்பட்டது. வரலாற்றுப் பொக்கிசங்களான நாடக ஒலிப் பதிவு நாடாக்கள் உள்ளடக்கப் பெறுமாண மற்ற, நிதியீட்டல் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவுக்காக அழிக்கப்பட்டன. 


இதனை அழித்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்களின் தேவை என்ன என்பதும் எல்லோருக்கும் தெரியும். இவர்களின் இந்த செயற்பாடு முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு வளத்திற்கும் வரலாற்றுக்கும் எதிரான யுத்தம் என்றே நான் கருதுகின்றேன். இந்த நிலையில் நாடகம் கைவிடப் பட்டதும் ஒன்றரை தசாப்தமாக தொடங்கப்படாமல் இருந்ததும் ஆச்சரியமல்ல. 


இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் என்ற கருத்தை எப்படி நோக்குகிறீர்கள்.


இப்போதைக்கு இக்கருத்தியலில் எனக்கு உடன்பாடில்லை.

ஏனைய சமூகங்களுக்கு தனியான ஊடகம் இருப்பது போல எங்களுக்கும் ஒரு ஊடகம் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழலில் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகம் ஒன்று வருவது ஆபத்தானது. 


முதலில் நமது ஊடகப் பாரம் பரியம் அதிகாரத்தின் செல்லப் பிள்ளைகள் சிலரிடமும், அரசியல் வர்த்தகர்கள் சிலரிடமும், இயக்க முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒருமித்து நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்களிடமும், சமூகத்தை உணர்ச்சி வசப்படுத்தி, ஆத் திரமூட்டி அவர்களை எடுடா பிடிடா என்று வைத்துக் கொள்ள நினைப்பவர்களிடமும், ஊடகத்தை வைத்து தமது புகழையும், சுய இருப்பினையும் பேணிக் கொள்ள நினைப்பவர்களிடமும் சிக்கியுள்ளது. இந்த சிக்கலைப் பிரிக்க முடியும் என்று நீங்கள் கருதினால், முஸ்லிம்களுக்காகத் தனியான ஊடகத்தை தொடங் கலாம்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேச வலுவான தளங்கள் இல்லை என்பதால் தனியான ஊடகம் தேவை என்பது சிலரின் கருத்து. முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஏனைய ஊடங்களில் மூடி மறைக்கப்படுவதால் தனியான உடகம் தேவை என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால்,  இன்றைய நிலையில் எமக்கு ஏராளமான தளங்கள் உண்டு. தொகுத்துப் பார்த்தால் ஏனைய சமூகங்களுக்கு நிகரான ஊடகம் முஸ்லிம்களின் கையில் இருக்கிறது. 


600 முஸ்லிம் உடகவியலாளர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ பத்திரிகைகள் வெளிவருகின்றன. சகோதர சமய சஞ்சிகைகளை விட மிகத் தகுதியான முறையில் இஸ்லாமிய சமய சஞ்சிகைகள் வெளி வருகிறன. பல மணி நேரங்கள் வானொலி நிகழ்ச்சி இருக்கின்றது. முஸ்லிம்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் பேசுகின்ற பல  இணையத்தளங்கள் வந்து விட்டன. இவை முஸ்லிம் ஊடகந்தான். இவற்றை விட வேறு என்ன வேண்டும்? இவற்றில் பேச முடியாத எந்த புதிய பிரச்சினையை தனியான ஊடகத்தில் பேசப் போகின்றோம். இது ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலை. முற்றிலும் சமூக நலன் கொண்ட நிலைப்பாடு அல்ல. 


இருக்கின்ற ஊடகங்களில் நாம் செயற்படும் முறைகளில் பல சிக்கல்கள் உண்டு. முதலில், எமது பிரச்சினை என்ன என்பதில் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. அத்தோடு,  பிரச்சினைகளைப் பேசுவதில் நாம் ஒருமைப்பட்டு நிற்க இன்னும் தயங்குகின்றோம். நாட்டில் எந்த சமூகத்திற்கும் வழங்கப் பட்டிராத ஒலிபரப்புக்கால எல்லை முஸ்லிம்களின் கையில் உள்ளது. இதில் 78 சதவீதம் வெறும் பயான்களை ஒலிபரப்பித் தள்ளுகின்றோம், அதிலும் ஆயிரத்து எட்டுப் பிரச்சினைகள். 


பொதுநலனை பேணிக்கொள்ள இன்னும் நாம் நமது தனிப்பட்ட சித்தாந்தங்கள் இடமளிப்பதில்லை. நமது பொதுவான பலயீனத்தை வெளிப்படுத்துவதில் நாம் அவசரப் படுகின்றோம். நமக்குள் நியதியாகி இருக்கின்ற கருத்து வேற்றுமைகளை நாம் விலை பேசுவதில் கூச்சப்படுவதில்லை. இப்படியிருக்கும் போது, தனியான ஊடகம் தொடங்கவது ஆபத்தானது. அதனை யார் தொடங்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்து, சமூகம் இன்னும் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட இது வழியாகிவிடும். 

அல்லது முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஊடகம் தொடங்க ஒரு வழி இருக்கின்றது. அது அதி காரத்திற்கு சலாம் போடாத, இனவாத அரசியலுக்குள் தம்மை பிடி கொடுக்காத, இயக்க சார்பினை சக முஸ்லிம் கௌரவத்திற்கு எதிராக பயன்படுத்தாத, உண்மையை சமூகத்தின் நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு பேசக்கூடிய ஒரு புத்தம் புதிய பரம்பரை தேவை. ஊடகத்தை ஒரு சமூக விடுதலைக்கான வன்முறையற்ற கருவியாக பயன்படுத்தக் கூடிய ஒரு இளம் பரம்பரை தேவை. இப்போதைக்கு அது தான் உடனடித் தேவை. அது உருவானால் தனியான ஊடகம் இல்லாமலும் அவர்கள் சாதிப்பார்கள்.


தற்போதைய முஸ்லிம் ஒலி பரப்பின் போக்கு மற்றும் அதன் தாக்கம் பற்றிச் சொல்ல முடியுமா?



இது பிரச்சினைக்குரிய கேள்வி. இருந்தாலும் நான் பேசுகின்றேன். 

உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன் ஒரு விடயத்தை நான் கூற வேண்டும். தென்னாசியாவில் சாதனை புரிந்த ஒரு வானொலி சேவை இருந்தது. அது பற்றி நான் கூற வேண்டும். வெறும் ஒரு மணி நேர நிகழ்ச்சியின் வாயிலாக, சில சர்வதேச வானொலிகளின் அடைவினை விஞ்சியது அந்த வானொலி சேவை. சமயத்தை இசை, நாடகம், கவிதை, சிறுகதை, கிராமியம், வரலாறு, அறிவியல், சமூக மேம்பாடு என வெற்வேறு மொழிகளால் அது பேசியது. 


அந்த ஒரு மணி நேரம் ஒலிபரப்பினால், எத்தனையே உலமாக்களை இனிமையான சொற்பொழிவாளர் களாக மாற்றினார்கள். பல நூறு கவிஞர்களை உருவாக்கினர். பலநூறு எழுத்தாளர்கள் உருவானார்கள். நீண்ட இசைப் பாரம்பரியம் உரு வானது. பல நூறு இசை, நாடக, கலைஞர்களும் உரைஞர்களும் உருவானார்கள். பல நூறு ஒலிபரப் பாளர்கள், தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.


கற்றுத் தேறிய சமூக விஞ்ஞானிகள் எல்லாம் அதில் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். பெண் கலைஞர்கள் எழுத்தாளர்கள், சிறு கதையா சிரியர்களை உருவானார்கள். ஒரு சிறுபான்மை சமூகத்தின் வாழ்க்கை முறை, வரலாறு, பண்பாட்டு பதிவு, மொழி என பலவும் பதியப்பட்டன. மொழி ரீதியான சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் நிகழ்சிகள் படைக்கப்பட்டன. முஸ்லிமல்லாதவர்களும் அதனை விரும்பிக் கேட்டார்கள். அந்த ஒரு மணி நேரத்தை வைத்து இந்தியாவைச் சேர்ந்த மூன்றுக்கும் அதிக மான கலாநிதிப் பட்ட ஆய்வுகள் வந்துள்ளன.

அக்கால அரசியல் இதற்கு சாதமாக இருந்தது. அந்த சேவைதான் 90 களுக்கு முந்திய முஸ்லிம் சேவை. அந்த நினைப் பில்தான் இப்போதும் மக்கள் முஸ்லிம் சேவையைக் கேட்கின்றார்கள்.  


இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன். இப்போது பல மணி நேர இஸ்லாமிய ஒலிபரப்பு இடம் பெறுகின் றது. முஸ்லிம் சேவை நேரத்திலும் தமிழ் சேவை நேரத்திலும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றில், 78 வீதமானவை முற்றிலும் பயான் நிகழ்ச்சிகள். 


ஆன்மீக சொற் பொழிவுகள். இவை மக்களை வெறும் நுகர்வோராக மாத்திரம் மாற்றி வருகின்றன. அதிகரித்த உபதேசங்கள் மக்களை செயற்படுகின்றவர்களாக ஒரு போதும் மாற்றப் போவதில்லை. சமூகத்தில் சோம்பேறித்தனத்தை விதைக்கின்றன. செயலாற்றலைத் தூண்டாத ஆன்மீகத்தை விதைக் கின்றன. சிக்கல் நிறைந்த இந்த உலகில், மக்களை ஈர்க்க சொற் பொழிவுகள் எனும் உத்தி ஒரளவுக் குத்தான் தாக்கம் செலுத்த முடியும். எனவே இஸ்லாமிய எண்ணக்கருத் துக்கள் சொற் பொழிவுகளாக மாத் திரமன்றி, வேறு தாக்கமான வடி வங்களிலும் வழங்கப்பட வேண்டும். 
  

அத்தோடு, உள்ளடக்கத்திற்கும் விளம்பரங்களுக்கும் இடையில் மக்களின் ரசனை புண்பட்டுப் போயிருக்கின்றது. இது முதலில் சட்ட விரோதமானது. தவறை நாம் செய்வதால் யாரிடமும் நியாயம் கேட்க முடியாது. விளம்பரங்கள் வேண்டாம் என்பது எனது கருத் தல்ல. விளம்பரங்கள் நிழ்ச்சிகளின் தரத்தை பாதிக்க வேண்டாம் என் கின்றேன். நிகழ்ச்சிகளில் பல்வகையை அழிக்க வேண்டியதில்லை. விளம்பரங்களை வைத்துக் கொண்டே, நிகழ்ச்சிகளின் தரத்தைப் பேணும் உத்திகளை கையாளலாம். மணித்தியாலங்களை நிமிடங்களாக அரிந்து சில்லறை யாவாரம் செய்வதை விட, விளம்பரமும் உள்ளடக்கமும் தரத்தில் உயர்ந்திருக்கலாம். 

முஸ்லிம் ஒலிபரப்பைப் பொருத்தவரை, இது இலங்கை வானொலி நிர்வாத்தின் கடமையோ, அல்லது சந்தைப் படுத்தல் பிரிவின் கடமையோ மாத்திரமல்ல. இதில் முக்கிய பங்கு முஸ்லிம் சேவைக்கு உண்டு.

இப்போது கட்டணம் அதிகரிக் கப்பட்டதென்று உயர் நிர்வாகத்தில் குறை ண முடியாது. இதே நிர்வாகத்தின் கீழ்தான் தமிழ் சேவையும் இயங்குகின்றது. அங்கு இந்த மல்லுக்கட்டல்கள் இல்லை. முஸ்லிம் சேவையில் காரியங்களை நிர்வாகத்தினர் தீர்மானிக்கின்றார் கள் என்றிருந்தால் அதற்கு சகப்பான ஒரு உண்மை இருக்கின்றது. காலத்தின் தேவையை ஈடுசெய்யாமல், தனிப்பட்ட முதலீட்டலுக்காவும், அற்ப சுய புகழுக்காகவும் ஊடகத்தை பயன்படுதும் ஆர்வ த்தை சில முன்னைய அதிகாரிகள் வெளிப்படையாகக் காட்டினார்கள். முஸ்லிம் ஒலிபரப்புக்குப் பின்னால் அதிகம் சுய நலம் இருப்பதை நிர்வாகம் கண்டு கொண்டது. ரமழான் கால ஒலிபரப்புகளின் போது சிலர் ஒலிபரப்பினை புண் படுத்திய விதத்தை அவர்கள் பார்த்தார்கள். அங்கு இயக்கச் சண்டைகளை விலத்தி விட்டார்கள். நாம் எடுத் ததற்கெல்லாம் அரசியலை இழுப்பவர்கள் என்று அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தித்தான் விடயங்களை சாதிக்கின்றோம் என்றால் நாம் நமது தகுதியை இழந்து விட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும். இவை எல்லாவற்றையும் செய்து, நிர்வாகத்திடம் பிடியைக் கொடுத்து விட்டு இனி அவர்களை குற்றம் சொல்ல முடியாது. இப்போது புதிதாக முஸ்லிம் சேவையை பொறுப் பேற்றவர்களுக்கு ஒரு சுமூகமான சூழ்நிலை அமையவில்லை எனலாம். 


தயாரிப்பு உத்தி, நிகழ்ச்சி உள்ளடக்கம், பொது மக்களின் பங்கு பற்றல், நிகழ்ச்சிப் பல்வகைமை, காலப் பொருத்தமுடைமை, தயாரிப் பாளர்களின் ஒலிபரப்பு ஆற்றல், சமூகத்தின் சமூகப் பொருளாதார நகர்வு குறித்த பிரக்ஞை மற்றும் சிறந்த பின்னூட்டலுக்கான உத்திகள் என பலவற்றைப் பேசவேண்டும். அதற்கு இது பொருத்தமான இடமல்ல. இறுதியாக, நல்ல நிகழ்ச்சிகள் பல இப்போதைய முஸ்லிம் சேவையில் உள்ளன. அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் சூழ்நிலை மலினப்பட்ட, ஒழுங்கு முறை தவறிய விளம்பரங்களால் இல்லாது போயுள்ளன. 


வானொலியில் அதான் ஒலி பரப்பாவது பற்றி? 


உண்மையில் இதில் ஒரு பக்கத்தில் உள்ளது அரசியல் நலன். அடுத்த பக்கத்தில் உள்ளது பொருளாதார நலன். காசு கொடுத்து அதான் விற்கப்படுகின்றது என்பதுதான் உண்மை. இதில் சமூக நலன் என்று எதுவும் இல்லை. வானொலியில் அதான் ஒலிப்பது முஸ்லிம்களின் உரிமையல்ல. வானொலியில் அதான் ஒலிபரப்பாகவில்லை என்பதற்காக வழமையாக தொழுபவர்கள் தொழாமல் இருக்கப் போவது மில்லை. அதான் ஒலிக்கவில்லை என்பதற்காக நாம் எந்த உரிமையையும் இழக்கப் போவதும் இல்லை. 


இது முஸ்லிம்களை பெருமைப் படுத்துவற்கான ஒரு ஏற்பாடு. பெருமை மட்டும் போதுமானவர்களுக்கு இது பெரிய விடயம். அதனால், சகோரதர சமயத்தின் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அதான் ஒலிபரப்பாவதுண்டு. இது இஸ்லாத்தின் முன்மாதிரிக்கு இழுக்கா னது. இதனை முன்னர் ஒரு தடைவை சுட்டிக்காட்டிய போது நமது சொந்த விடயங்களை வெளியில் பேசக்கூடாது என்றார் ஒரு சகோதரர். நாம் கண்ணை முடிக்கொள் கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல. 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சமாளித்துக் கொண்டு காப்பாற்ற வேண்டியதில்லை. பொருத்தமற்ற சினிமாப்பாடல்களுக்கு மத்தியில் சிலநேரம் அதான் ஒலிக்கும். இன்று அரசியல் மேடைகளில் இது பெரிய தலைப் பாகியிருக்கின்றது. இது முக்கியமானது - பெருமையை விரும்பு கின்றவர்களுக்கு - அதான் ஒலிக்கச் செய்து பெருமைப்படுத்தியவர்களுக்கு பள்ளிவாசல்கள் உடைக்கப்டுவதை தடுக்க முடியல்லை. இது ஒரு பகட்டு என்பதற்கு இன்னும் என்ன வேண்டும்.



 .

 


Wednesday, November 14, 2012

காயல் ஏ.ஆர் ஷேக் முஹம்மத். காயல் நகரின் மங்காத குரல்...




ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளையில்...

காயல் ஷேக் முஹம்மத் என்றதும் நினைவுக் வரும் பாடல் இது. சின்ன வயதில் அவரைப் போல உச்சஸ்தாயில் இப் பாடலை பாட முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். உச்சஸ்தாயிலும் இயல்பு மாறாமல் முகபாவனையை மாற்றி மாற்றி அவர் பாடும் அழகு மிகுந்த ரசிப்பிற்குரியது. அவரது குரலில் ஒரு துள்ளல் தன்மையுடன் கூடிய குதூகலம் இருக்கிறது. அப்பாடலோடு எம்மை லயிக்க வைக்கும் சக்தி அக்குரலுக்குள் மறைந்திருக்கிறது. அதுவே எம் எல்லோரையும் பரவசப்படுத்துகிறது.

தமிழ் நாட்டைவிட இலங்கையில் அவரின் பாடல்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஈ.எம். ஹனீபாவின் பாடல்களைப் போலவே இவரது பாடல்களும் இங்கு மிகவும் ரசித்துக் கேட்கப்படுகின்றது. இவரது பாடல்களில் பாடும் முறை, இசை, வரிகள் என அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கின்றன. 

ஷேக் முஹம்மத் அவர்கள் தமிழ் நாட்டில், காயல்பட்டினம் நகருக்கு அருகில் அமைந்துள்ள குலசேகரன் பட்டினம் கிராமத்தில் 1947 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதல் இசையில் ஈடுபாடு கொண்டவராக இருந்த இவரின் இசைத் திறமைகள் பள்ளிக்கூடத்து விழாக்களில் வெளிப்பட்டன. இவரது திறமைகளை நன்கு கவனித்த இவரது தந்தை அப்துர் ரஹ்மான் கர்நாடக சங்கீதம் பயில்வதற்கு திருச்சேந்தூரில் பொன்னுசாமி பாகவதரிடம் சேர்த்தார்.

அவரிடம் இரண்டு வருடம் படித்த பிறகு நாகர் கோவிலில் உள்ள இரணியல் சங்கீதப் பள்ளி செல்லப்பா பாகவதரிடம் 3 வருடம் முறையாக சங்கீதம் கற்றுத் தேர்ந்தார். 7 வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய ஏ.ஆர். ஷேக் முஹம்மத் அவர்கள் பல அரசியல் மேடைகளில், அறிஞர் அண்ணா, கலைஞர் என பலருக்காக பாடல்களைப் பாடி அவர்களிடமிருந்து பரிசில்களையும் நன்மதிப்பையும் பெற்றார்.

அரசியல் கட்சிகளை வளர்க்கவும், அவர்களது பிரச்சாரத்திற்கும் நாகூர் ஹனீபாவும் காயல் ஷேக் முஹம்மதும் பெரிதும் உழைத்திருக்கிறார்கள். இது போன்ற கலைஞர்களது பணி அரசியல் மேடையோடு முடிவடைவதுதான் சோகமானது.

‘சிரித்து வாழ வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆரின் படத்தில் டீ.எம். சௌந்தராஜனுடன் சேர்ந்து ‘உலகமெனும் நாடக மேடையில்’ பாடலைப் பாட எம்.எஸ். விஸ்வநாதன் சந்தர்ப்பம் அளித்தார். இப்படத்தின் மூலம் காயல் ஷேக் முஹம்மத் பிரபல்யம் ஆனார். எச்.எம்.வி. நிறுவனம் இவரை நாடியது. ‘ஈச்சை மரத்து...’ பாடல் பல இலட்சம் ஒலி நாடாக்கள் விற்பனையாகின.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளில் இவரது இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இசைக் கச்சேரிகளை தனது வாழ்நாளில் இவர் நடாத்தி இருக்கிறார்.
ஈ.எம். ஹனீபா அவர்களுக்கு பாடல் எழுதிய நாகூர் ஸலீம் அவர்கள் 750 இற்கும் மேற்பட்ட பாடல்களை இவருக்காக எழுதியுள்ளார். 

நாகூர் ஸலீம் இயற்றிய ‘கப்பலுக்குப் போனமச்சான்...’ எனும் கிராமிய பாடல் மரபில் அமைந்த பாடல் வெளிநாட்டில் இருக்கும் கணவனை நினைத்துப் பாடும் ஒரு மனைவியின் துயர் கீதமாகும். ரீ.கே. ராம மூர்த்தியின் இசையில் அமைந்துள்ள இப்பாடல் ஷேக் முஹம்மத்தின் மிகவும் புகழ் பெற்ற ஒரு பாடலாகும்.

1996 ஆம் ஆண்டு எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அழைப்பை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைகளில் பாடினார். முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைப் பாடல்கள் அடங்கிய ‘புதிய வெளிச்சங்கள்’ ஒலி நாடாவின் பாடல்களைப் பாடினார்.


கட்சியின் வேகத்திற்கு அவரது பாடல்களும் உந்து சக்தியாக அமைந்தன. ‘புதிய வெளிச்சங்கள்’ ஒலி நாடா வெளியீடு கொழும்பு எல்பிஸ்டன் அரங்கில் 19997 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒரே நாளில் 25 இலட்சம் ரூபா வசூலை அது தேடிக் கொடுத்தது.

உச்சஸ்தாயில் பிசிறில்லாத தொனியில் அற்புதமாகப் பாடக் கூடிய ஒரு பாடகராக காயல் ஷேக் முஹம்மத்   இருந்தார். இதுதான் சினிமா இசை மேதைகளையும் அவர் பக்கம் ஈர்க்கச் செய்தது. இதனால் 20 க்கும் மேற்பட்ட படங்களில் பாடும் வாய்ப்பை இவர் பெற்றார்.

இவரது பாடலில் இருக்கும் துள்ளலும் வசீகரமும் எல்லோரையும் ஒரு நிமிடம் நிற்கவைக்கிறது. ஒரேபாடலில் கூட பல்வேறு இடங்களில் ஒரு புதிய ரசனையை அவர் வைத்திருக்கிறார். அது மெட்டிலும் அவரது குரலிலும் வெளிப்படும்போது நாம் ஒரு புதிய இன்பத்தில் பயணிக்க முற்படுகிறோம். மறுபடி ஒரு புதிய இன்பம் அடுத்த வரிகளில் எமக்குக் காத்திருக்கிறது. ஈ.எம். ஹனீபாவின் பாடல்களிலிருந்து இவரது பாடல்கள் வித்தியாசப்படும் புள்ளி இதுதான் என்பது எனது அபிப்பிராயம்.

ஈ.எம். ஹனீபாவின் மூன்று பாடல்களைக் கேட்கும்போது நான்காவது பாடலை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இவரது ஒவ்வொரு பாடலும் ஒரு புது அனுபவமாகவே இருக்கும். 

நாகூர் ஹனீபா, காயல் ஷேக் முஹம்மத் இருவருமே இஸ்லாமிய கீதத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்தாம். இருவரும் தமது இசை வடிவங்களால் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இதய அறை எங்கும் வாழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எமது இஸ்லாமிய கீதம் இவர்களது காலத்துடன் முற்றுப் பெற்று விட்டதுதான் மிகப் பெரும் சோகமாகும். புதிய திசை வழிகளில் அவை பயணிக்கவே இல்லை. தலைமுறை வழியாக புதிய போக்குகளில் அவை பயணிக்கவும் இல்லை. எமக்கான ஒரு பாடல் மரபை ஷேக் முஹம்மத்திடமிருந்தோ, ஈ.எம். ஹனீபாவிடமிருந்தோ நாம் வரித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், அது நடைபெறவில்லை. 1300 இற்கும் அதிகமான பாடல்களை ஷேக் முஹம்மத் பாடி இருந்தும் அனைத்துப் பாடல்களும் அவரது வீட்டில் இல்லாத சூழ்நிலையில்தான் நாம் இதனை பேசிக்கொண்டிருக்கிறோம்.

இவர்களின் இசை பங்களிப்பின் வாயிலாக தமிழகத்தின் இரண்டு இடுக்குகளில் சிதறி தனித்து வாழும் பாமர முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களை ஓரளவாவது அறியும் வாய்ப்பு இருந்தது.

அத்துடன் பெரும்பான்மை ஹிந்து சமூகத்தினரும் மெய் மறந்து தலையசைக்கும் வகையில் அமைந்திருந்த இஸ்லாமிய இன்னிசை பாடல்கள் வாயிலாக மதங்களுக்கிடையேயான ஒரு மௌனமான நல்லிணக்க உரையாடல் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தது.
அதே போல் இவ்விரு பாடகர்களின் பாடல் மரபிலிருந்து மொத்தமாக  நுண் கலை அல்லது கவின் கலைக்கான வாயில் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு  திறக்காமல் போனதற்கும் இவ்விருவரின் பாடல்களிலிருந்து  கிடைத்து வந்த பலன்கள் தொடராமல் நின்றதற்கும் இஸ்லாத்தை தட்டையாக விளங்கப்படுத்திய ஒரு சிலரின் அணுகுமுறையும் ஒரு காரணம் எனலாம்.

ஈச்சை மரம் இருக்கும் காலம் எல்லாம் ஷேக் முஹம்மத் அவர்களின் நினைவும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒரு கிராமத்தில் பிறந்து இசையினதும் பாடலினதும் வழியே அக்கிராமத்தின் குரலை காற்றெங்கும் பரவச் செய்து மனிதர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துக் கொண்ட காயல் ஷேக் முஹம்மத் அவர்கள் 2009.06.09 அன்று இந்த உலகில் இருந்து நிரந்தரமாக மறைந்து போனார்.

காயல் நகரத்தின் வீதிகளில் மட்டுமல்லாது தன் குரல் ஒலிக்கும் தேசத்தில் எல்லாம் தன் பாடல்களால் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாம் வாழும் உலகத்தில் இன்று அவர் இல்லை. புதிய தென்றலுக்காக அவர் பாடிய பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகள் போல.

நாளைக்கும் நிலவு வரும்
நாம் இருக்க மாட்டோம்
நாளைக்கும் பூ மலரும்
நாம் இருக்க மாட்டோம்...

(இம்மாத வைகறை இதழில் வெளியானது.காயல் ஷேக் முஹம்மது பற்றிய தகவல்களைப் பெற்றுத் தந்த நண்பர் பஷீர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்)

 

Saturday, October 20, 2012

மழைக் குறிப்பு




நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை நாள் ஒன்றில் வீட்டில் இருக்கிறேன்.நீண்ட கோடைக்குப் பின் வந்த மழை என்பதால் யாரும் மழையை கடிந்து கொள்ளவில்லை.எல்லோர் மனதிலும் ஒரு ஆனந்தம் மிதந்து கொண்டிருக்கிறது.ஒரு மழை நாளில் அமைதியாய் வீட்டில் இருப்பதற்கு இப்போது அரிதாகத்தான் சந்தர்ப்பம் கிடைக்கிறது.வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டு மழையைக் காண்பது ஒவ்வொரு வயதிலும் நடப்பதுதான்.ஆனால் அது ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு அனுபவங்களாக நிகழ்கிறது.

சிறுவனாக இருந்த நாட்களில் மழை பெய்யும் போது காகிதக் கப்பல் செய்து விளையாடும் நினைவு எப்போது மழை பெய்தாலும் நினைவுக்கு வருகிறது.ஆனால் இந்த வயதில் ஒரு காகிதக் கப்பலை செய்து நீரில் விட மனது நினைப்பதேயில்லை.வீட்டில் திட்டு வாங்குவோம் எனத் தெரிந்தும்,கைகளில் குடையிருந்தும் நனைந்து கொண்டே இந்த வானத் திற்குக் கீழ் திரிந்த நாட்களைத் தொலைத்து எத்தனை வருடங்க ளாகின்றன.இருந்தும் அப்படிச் செய்து பார்க்க மறுபடி நினைத்ததில்லை. வெறித்தபடி மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அவ்வளவுதான்.



பேரூந்து அல்லது ரயிலில் இருந்து மழையைப் பார்ப்பது மழையோடு பயணிப்பதைப் போன்றது.பயணம் முழுக்க “இறங்கும் போது எப்படியாவது மழை நின்று விட வேண்டும்“ என்ற பிரார்த்தனையோடே மனது இருக்கும்.வேகமாக ஜன்னலில் பட்டுத் தெரிக்கும் ஒரு துளி மழையானது எம்மைப் பாதிக்கும் ஒரு கவி வரி போலவே இருக்கின்றது.ஜன்னலில் படிந்திருக்கும் துவானத்தில் நம் பெயரையோ நமக்குப் பிடித்தவர்களின் பெயரையோ யாரும் காணாத வன்னம் எழுதி அழித்து விடுகிறோம்.ஆனால் குழந்தைகள் அதன் பாட்டிற்கு எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மழைநாளில் இந்தப் பிரபஞ்சமே நனைகிறது.மனிதர்கள் எப்படியாவது தம்மை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.ரயிலுக்குள் அமர்ந்திருக்கிறேன் முழு ரயிலும் நனைகிறது.ரவிக்குமாரின் இந்தக் கவிதை வரிகளோடு என் நினைவும் அதன் பயணத்தைத் தொடர ஆரம்பிக்கிறது.

மழையில் நிற்கும் ரயிலை விட
சோகமானது வேறெதுவும் உண்டா
என்று கேட்கிறாய்
தண்டவாளம் எப்படி மறந்தது உனக்கு.



Tuesday, October 9, 2012

இறந்த பின்பும் வாழ்தல்...

சின்ன வார்த்தைகள்.சலனம் தரும் அர்த்தங்கள்.நண்பர் பகல்நிலவனின் மொழிபெயர்ப்பில் கீற்றில் வெளியானது.உங்களுடனும் பகிர நினைத்தேன்.


ஆனந்த் பட்வர்தன் பல பட்டைகள் கொண்ட வைரம் போல ஒரு மின்னும் போராளி. ஆங்கில இலக்கியம், சமூக வியல், தொடர்பாடல் (communication) துறை களில் பட்டம் பெற்றவர்.தனது மாண வப்பருவம் தொட்டே வல்லாதிக்க எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, சனநாயகம் & குடிமக்கள் உரிமைக்கான போராட்டம், அணுகுண்டு தேசியவாத எதிர்ப்பு, ராணு வமயமாக்க எதிர்ப்பு, ஹிந்துத்வ ஃபாஸிச எதிர்ப்பு, தொடர்ச்சியற்ற நிலையற்ற மேம் பாட்டு எதிர்ப்பு, வகுப்பு நல்லிணக்கம், நகர்ப்புற சேரிவாசி களுக்கான வாழ்விட உரிமை, கிராமப்புறம் & கல்வி வளர்ச் சிக்காக உழைத்தல் என அவரது பொது வாழ்வின் பட்டியல் நீள் கின்றது.

தெருவில் இறங்கி மக்களுக்காகவும், நீதிக்காகவும் போராடிய ஆனந்த் பட்வர்தன் அவற்றை கீழ்க்கண்ட திரைப்படங்களின் வாயிலாக வரலாற்று ஆவணங்களாகவும் பதிந்து விட்டார்.

ராம் கே நாம் {கடவுளின் பெயரால்1992},
பித்ர புத்ர தர்ம யுத்த (தந்தை மகன் புனிதப்போர் 1995)
நர்மதா டயரி[1995)
ஜங்க் அவ்ர் அமன்{ போரும் அமைதியும் 2002}

அவரின் மிக சமீபத்திய வெளியீடான ஜய் பீம் காம்ரேட் என்ற படமானது 1997 ஆம் ஆண்டு நடந்த காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தலித்கள் தொடர்பானது.அவர் மொத்தம் 16 ஆவணப் படங்களை எடுத்துள்ளார். அவைகள் 31 உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளை பெற்றுள்ளன.
நடுவண் திரைப்பட தணிக்கை வாரியம், தூர்தர்ஷன் ஆகிய அரசு நிறுவனங்கள் விதித்த தடைகளை உடைத்தெறிந்து அவரின் பிரபலமான எட்டுப்படங்கள் (ராம் கே நாம், ஜங்க் அவ்ர் அமன், பித்ர புத்ர தர்ம யுத்த அடங்கலாக) வெற்றிகரமாக நாடெங்கும் திரையிடப்பட்டது.
அவருடனான நேர்காணல் The Hindu, Metroplus, September 29,2012 நாளிதழில் வெளி வந்தது. அதன் மொழியாக்கத்தை தருகின்றோம்.

வரலாற்று நாயகர்களில் எவரோடு நீங்கள் உங்களை கூடுதலாக அடை யாளப்படுத்துவீர்கள்?

யாரை முன்னோடியாகக் கொள்கின்றோம் என்பதும் யாருடன் அடையாளப் படுகின்றோம் என்பதும் வெவ்வேறானவை. இரண்டு வகையானவை. காந்தியுடன் நான் வளர்ந்தேன். மார்க்ஸையும் அம்பேத்கரையும் பின்னர் கண்டடைந்தேன். எனது முன்மாதிரி என்பது இவர்களின் கலவைதான் என்றாலும் அவர்களில் வரலாற்றின் புரிதல் வழியாக தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் வலிமை படைத்தவரே எனது முழுமையான முன் மாதிரியாகும்.
தன்னுடைய மனசாட்சியை நச்சரிக்கக்கூடிய, இன்பத்தையே நோக்கமாகக் கொண்ட ஒருவரோடுதான் என்னை நான் அடையாளப்படுத்த முடியும். இதற் கு எடுத்துக்காட்டாக சாப்ளினைக் கூறலாம்.

வாழும் மனிதர்களில் யாரை நீங்கள் மிகவும் மதிக்கின்றீர்கள்?

தற்சமயம் சுப.உதய குமாரைத்தான் மிகவும் மதிக்கின்றேன். இவர் நீதி நியாயத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் கூடன்குளம் அரக்கனுக் கெதிராகவும் வலுவான சமரை முன்னெடுத்து செல்லுகின்றார்.
  
உங்களுக்குள்ளேயே நீங்கள் மிகவும் வருந்தும் தனித்த பண்புக்கூறுகள் எவை?

தன்னலமும் தன்னை மையப்படுத்துதலும்தான். மிகக்குறைந்த அளவில்தான் என்றாலும் பொறாமைக்கு எதிராகவும் சிந்தனையற்ற விமர்சனத்திற்கு எதிரா கவும் கூடுதல் கூருணர்வுடன் இருத்தலும்தான். அதை விட்டு விட்டு நான் லட்சக்கணக்கான உடன்பாடான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக என்னிடம் உள்ள வருத்தமளிக்கக்கூடிய பண்பாக சோம் பேறித்தனம்தான் என சொல்ல நான் முனைந்தாலும் இவ்வுலகிற்கு சோம் பேறித்தனம்தான் சிறந்தது.

நாம் எல்லோரும் வேகத்தை குறைக்க வேண்டும். அத்துடன் குறைவாக செயல்பட வேண்டும்.

பிறரிடம் இருக்கக்கூடிய வருந்தக்கூடிய அம்சங்களாக நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள்?

மனிதாபிமானமின்மை, கொடூரம், மனக்காழ்ப்பு ஆகும். இவ்வகையான வக்கிரங்களுக்கு நுணுகிக் காணக்கூடிய ஒரு சார்பு நலம் அல்லது மதி கெட்ட நடத்தை இயல்பாகவே இருக்கும். ஆனால் துயர் தரும் தரும் விடயம் என்னவெனில் இவைகளுக்கு ஒரு விளைவு இருக்கும். அத்துடன் அந்த வளை யம் நீடித்ததாகவும் இருக்கும்.

உங்களின் மிகப்பெரும் ஊதாரித்தனம் எது?

காலாவதியாகக் கூடிய சாதனங்களை எனது திரைப்படங்களை முடிக்கும் முன்னர் வாங்குவதாகும். நவீன தொழில் நுட்ப விஷயங்களில் நான் பின் தங்காமல் இருப்பதற்குள்ள பொருத்தமான வழி என்னவென்றால் அத்தகைய சாதனங்களை நான் வாடகைக்கு எடுப்பதாகும். ஆனால் ஒரு படத்தயாரிப் பாளாராகிய நான் படப்பிடிப்பை முற்கூட்டியெல்லாம் திட்டமிட இயலாது. நான் எனது போக்கிலேதான் படத்தயாரிப்பு வேலைகளை செய்வதை நான் விரும்புகின்றேன். எனவே நான் தயங்குவதில்லை.


 மகிழ்ச்சி என்கின்ற உணர்வு தொடர்பாக தங்களின் கருத்தென்ன?

மகிழ்ச்சி என்பதை நினைக்கும் பட்சத்திலேயே அது எளிதாக அழியக்கூடியது. சென்ற காலத்தை மீட்டிப் பார்க்கும்போது மகிழ்ச்சி என்பது நினைவிற்கு வரக்கூடியது.
நீண்ட காலத்திற்கு முன் நான் எழுதிய கவிதையின் வரிகள் எனக்கு நினை விற்கு வருகின்றது.

“பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கேட்டார்
எங்களில் மகிழ்வாக இருப்பவர்கள்
கைகளை உயர்த்தட்டும்
நான் எனது கையை உயர்த்தினேன்
வேறெவரும் கைகளை உயர்த்தவில்லை
மகிழ்வாயிருத்தல் என்பது
மிகக்கடினமான ஒன்று என்ற
முடிவிற்கு வந்தேன்”.

உங்களுக்கு பிடித்தமான பயணம் எது?

முதலில் பயணம் என்பது வார இறுதியில் எனது பெற்றோர்களை காணச் செல்வதாக இருந்தது. அவர்கள் காலமான பிறகு அது போன்ற பிடித்தமான பயணங்கள் என்று எதுவும் இல்லை..
நான் முன்னர் கூறியது போன்று மகிழ்ச்சி என்பது சென்ற காலத்தை மீட்டிப் பார்ப்பதில்தான் உள்ளது எனக் கூறுவேன்.
இன்றிலிருந்து சில வருடங்கள் கழித்து என்னிடம் நீங்கள் கேட்டால் தற் காலத்தில் நான் மேற்கொள்ளும் பயணங்கள் பிடித்தமானவையாக இருக்கும் என விடையளிப்பேன்.

உங்களுக்கு பிடித்தமான ஓவியர் யார்?

ஒரே ஒரு ஓவியரையே காலாகாலத்திற்கும் அவர்தான் பிடித்தமானவர் எனக் கூற முடியாது. ஆனால் தற்சமயம் எனக்கு பிடித்த ஓவியர் யாரெனில் ராம்கிங்கெர் பைஜ் என்பவராவார். அவர் சாந்தி நிகேதனில் எனது தாயாரின் ஆசிரியராக இருந்தவர். சாந்தி நிகேதனை சுற்றிலும் வாழ்ந்த தலித்துகளும் ஆதிவாசிகளும்தான் அவரின் படைப்புகளுக்கு தூண்டுதலாக இருந்தார்கள்.

மிகைப்படுத்தப்பட்ட ஒழுக்க பண்புகளாக எவற்றை நீங்கள் கருது கின்றீர்கள்?

உடற் துணிவு, நாட்டுப்பற்று, மத உணர்வு,

எந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் பொய்யுரைப்பீர்கள்?

பிறரை காயப்படுத்தாமலிருக்க அறிந்தே பொய் சொல்லுவேன். நான் காயப்ப டாமலிருக்க என்னையறியாமலே பொய் கூறுவேன்.

உங்களது தோற்றத்தைப் பற்றி மிகக் கூடுதலாக நீங்கள் விரும்பாத விஷயம் எது?

விரும்பாத விஷயம் என எப்போதும் ஏதாவது இருந்து கொண்டேதான் இருக்கின்றது.
நான் இளையவனாக இருந்த போது குள்ளமாக இருந்தது.வயதாகும்போது முடி கொட்டி உடல் தடிமனாகுதல்.
இந்த தேய்மானங்கள் என்னை ஒரு ஒழுங்கிற்கோ அல்லது உடற் பயிற் சிக்கோ இட்டுச் செல்லவில்லை என்பதுதான் துயரமானதாகும்.

நீங்கள் மிகையாக பயன்படுத்தும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எவை?

எதிர்ப்பு, போராட்டம், நீதி, சனநாயகம், வெளிப்படையான தன்மை.
இவை தேய் வழக்குகளைப்போல் ஒலிக்கின்றன. ஒருவர் இந்த கொள் கைகளை புதிய முறையில் வெளிப்படுத்துவதற்கு வழியொன்றை கண்டு பிடிக்காத வரையில் அவைகளை பயன்படுத்துவதற்கு மிகச்சிறிய வாய்ப் புகள்தான் உள்ளன.

உங்களது மிகப்பெரும் அச்சம் எது?

அச்சமென்பது முன்னர் என் பெற்றோர்களின் இறப்பை குறித்து இருந்தது. தற்பொழுது எனக்கு முன்னர் என் நேசத்திற்கு உரியவர்கள் இறப்பது பற்றிய அச்சம் எனக்கு இருக்கின்றது.
அல்லது தலையாய விஷயங்களை செய்யுமுன்னர் அல்லது அவற்றை பாதியில் செய்த நிலையில் நான் இறப்பது என்பதுவும் எனக்கு அச்ச மளிக்கக்கூடியதாகும்.

உங்களது மிகப்பெரும் துயர் என்ன ?

மகிழ்ச்சியென்பது விரைவில் கடந்து செல்லக்கூடியதாக உள்ளது. நீங்கள் நேசிக்கும் ஆட்கள் என்றென்றைக்கும் உயிர் வாழப் போவதில்லை என்ப துதான் எனது மிகப்பெரும் துயரமாகும்.

உங்களது வாழ்வின் மிகப்பெரும் அன்பிற்குரிய விடயம் எது? அல்லது அன்பிற்குரிய ஆளுமை யார்?

94 வயது வரை எவ்வித வன்ம நோக்கமும் இல்லாமல் வாழ்ந்த எனது தந்தைதான் எனது மிகப்பெரும் அன்பிற்குரியவர். முன்னுணர்வுடனும் தன் னையறிந்தும் வாழ்ந்த அவர் எப்பொழுதும் சிரிப்பை இழந்ததேயில்லை.

எப்பொழுது எங்கு நீங்கள் மிகவும் மகிழ்வாக இருந்திருக்கின்றீர்கள்?

இந்த கேள்விக்கு நான் முன்னரே விடையளித்திருக்கின்றேன் என நினைக் கின்றேன். சுருக்கமாக சொல்வதெனில் எனது இரு பெற்றோர்களும் உயி ருடன் இருந்த வரை தாக்குதல்களிலிருந்தும் காயப்படுவதிலிருந்தும் பாது காப்பு பெற்றவனாக என்னை நான் உணர்ந்திருக்கின்றேன்.

தற்பொழுது உங்கள் மன நிலை என்னவாக உள்ளது?

என்னால் முடிந்த அளவு சிறந்ததை செய்தல்.

நீங்கள் எப்படி இறக்க விரும்புகின்றீர்கள்?

உடனடியாக இறப்பைப் பற்றிய கவலையின்றி வலியின்றி எனது இறப்பு என்பது நிகழ வேண்டும்.
நான் காலமான பிறகும் நீண்ட காலத்திற்கு பயனளிக்கக்கூடிய விடயங்களில் பங்களிப்பதற்கு முன்னர் விரைவாக நான் இறந்து போக விரும்பவில்லை.

மொழியாக்கம்: பகல் நிலவன் ( pakalnilavan@gmail.com)

Monday, October 1, 2012

வறுமை

நண்பர், சாளை பஷீரின் கவிதை ஒரு பகிர்விற்காக...






நான் தவழ்ந்த தெருவது
தெருவை மறைக்கும் வீட்டு முகப்புகள்


எல்லா திசைகளையும் மறைத்து நிற்கும்
மலைகளையொத்த கட்டிடங்கள்

வசீகரிக்கும் கம்பீர மலைப்பொதும்பில்
வசிக்கும் குருவியின் கூடு போல
அந்த வீடிருந்தது.

பெருநாள் கொடைக்காக கதவை தட்டினேன்
அறியாத முகமாகயிருக்கும் என எண்ணிய கணத்தில்
அறிந்ததாயிருந்தது அந்த மனிதரின் முகம்

என் பால்யத்திலிருந்தே பார்த்துப் பழகிய முகம்
அவரின் வறுமையின் வேர்களை அறிந்திடாத
அறியாமையை எண்ணி தலை கவிழ்ந்தேன்

விறைத்த பிணமாய் விறகு
வறுமையில் எரிந்து கொண்டிருந்தது

அவரின் ஒற்றையறை வீட்டில்
கரும்புகை எல்லா திசைகளிலும்
துயரின் இருளாய்ப் படிந்திருந்தது

கண்ணியம் மறுக்கப்பட்ட வாழ்வின்
தடயங்கள் அங்கு தெறித்து கிடந்தன

வாழ்வை மறுத்தவர்கள் மீது
அவருக்கு எவ்வித
முறையீடுமில்லை

சேவல்களே கூவாத தேசத்தில்
விடியலே இல்லாமல் போய் விடுமா?
விசும்பல்கள் இல்லையென்றால்
வேதனை இல்லையென்று ஆகி விடுமா?.

தடுமாறும்போதும் தன்மானத்தால்
கண்ணீரை புதைத்து வைத்து தவிக்கிறது
இரக்கத்தை எதிர்பாரா மனசு
ஒரு புன்னகையால் எல்லாவற்றையும்
சமன் செய்யும் அன்பிற்காக!!