Sunday, July 15, 2012

நேர்காணல்-நந்திதா தாஸ்


நண்பர் பஷீரும் அமீர் அப்பாஸும் நந்திதா தாஸை நேர்கண்டிருந்தனர். இம்மாத உயிர்மையில் அது வெளியாகி இருக்கிறது.உங்களுடனும அதைப் பகிர்ந்து கொள்கிறேன். 

   “பாதுகாப்புணர்வுடன்  செயல்பட்டவர்களால்  உலகம்  மாற்றத்தை      சந்தித்ததில்லை”  நந்திதா தாஸ்.

 
“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே “என முழங்கியதோடு நில்லாது விளிம்பு நிலை மக்களின் குரலை வீதி நாடகங்கள்  வாயிலாக அரசுக்கு சொன்னவரும் அதன் விளைவாகவே அரச பயங்கர வாதத்திற்கு பலியான வருமான ஸஃப்தர் ஹாஷ்மியின் நாடகப்பட்டறையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கியவர்தான் திரைப்பட இயக்குனரும் , நடிகையுமான நந்திதா தாஸ். 
பின்னர் ஃபயர் , வாட்டர் ,ஃபிராக் என சமூக தளத்தில் பேசப்பட்ட, விவாதி க்கப்பட்ட பல திரைப்படங்களின் வாயிலாக பயணித்துக்கொண்டிருக்கும் அவர் நீர்ப்பறவை படப்பிடிப்பிற்காக கடந்த மே மாதம் தமிழகம் வந்தி ருந்தார். 
படப்பிடிப்பு நடந்த மணப்பாடு மீனவ கிராமத்தின் பள்ளிக்கூடத்திடலை மன்னார் வளைகுடாவிலிருந்து வீசும் உப்புக்காற்றும் மே மாதத்தின் கடும் வெயிலும்  கலந்து விரவி நிறைத்திருந்தது..

அத்திடலில்  படப்பிடிப்பிற்கான தடபுடலான ஆயத்தங்களிடையே பிரபல ங்களுக்குரிய எவ்வித துருத்தலுமின்றி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் நந்திதா தாஸ். 

வெறும் நடிகையாகவே பொது தளத்தில் பரவலாக சித்தரிக்கப்பட்டுள்ள நந்திதா தாஸின் மனித குல கரிசனமிக்க செயற்பாட்டுத்தளங்களை  வெளிச்சமிட்டுக்காட்டுவதே இந்நேர்காணலின் நோக்கமாகும்.

.மிகவும் நெருக்கடியான சூழலுக்கு நடுவே நந்திதா தாஸுடனான  நமது  நேர்காணலை சாத்தியமாக்கித்தந்த  தென் மேற்கு பருவக்காற்று என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவரும், தற்போது உருவாகி வரும் நீர்ப்பறவை படத்தின் இயக்குனருமான  சீனு .ராமசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

1. உங்களது குடும்ப பின்னணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

எனது தந்தை  ஓவியக்கலைஞர் ஜதின் தாஸ்.எனது தாயார் ஒரு எழுத்தாளர். அவர் தேசிய புத்தக நிறுவனத்தின்( NATIONAL BOOK TRUST) முன்னாள் இயக்குனர். அதிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னர் தேசீய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனராக இருந்தார்.இப்போது அதிலி ருந்தும் விலகி விட்டார். அவர் நிறைய எழுதுகின்றார்.

எனது  தம்பி ஒரு கைவினை கலைஞர். அவர் அருங்காட்சியகங்களில் தனது பணியைத்தொடர்கின்றார்.எங்களது குடும்பம் ஒரு தாராள சிந்தனை யுடையது. அதில் ஆண், பெண் வேறுபாடுகள் காட்டப்படவில்லை.

நான் எனது வாழ்க்கை முழுவதையும் தில்லியில் வாழ்ந்திருக்கின்றேன். மும்பையில் சந்தித்த ஒருவரை மண முடிப்பதற்காகத்தான் அங்கு  குடி பெயர்ந்தேன். 

எனக்கு 21 மாதமே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நான் குழந்தை பெற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் படப்பிடிப்பு இதுதான். எனது மகனின் பெயர் விஹான். காலைக்கதிரவனின் முதல் ஒளிக்கீற்று என்பது அதன் பொருள்.

நான் அவனை ஒரு விடுதியில் விட்டு விட்டு நான் இங்கு வந்து பணி புரிகின்றேன். இதில் சில பிரச்னைகள் இருக்கின்றன.
படப்பிடிப்பை முடித்து விட்டு நான் செல்லும்போது அவன் என்னை விட்டுப் பிரிய மாட்டான். இது சிரமம்தான். 

நான் எனது அன்னையை மிகவும் மதிக்கின்றேன். அவர் எப்போதும் பணியாற்றி கொண்டே இருப்பார். தன் தாயை எப்பொழுதும் பணி புரிபவராக ஒரு குழந்தை  பார்ப்பதென்பது நல்லதுதான்.

தந்தைதான் பணி புரிய வேண்டும் தாய் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவளல்ல நான். 

தாய் வீட்டில்தான் இருக்க வேண்டும் என மகளிர் விரும்பினாலும் நல்லதுதான்.ஆனால் விருப்பத்தேர்வு அவர்களிடம் விடப்பட வேண்டும்.
நான் பணி புரியவும் செய்கின்றேன் வீட்டிற்கும் வருகின்றேன் சம நிலையைப்பேணுகின்றேன் என்பதை மெல்ல மெல்ல என் மகன் அறிந்து கொள்வான் . எனது தாய்மை எனக்கு மிகவும்  மகிழ்வான அனுபவமாக  உள்ளது.

தாங்கள் கலைத்துறையுடன் நிற்காது மனித உரிமை உள்ளிட்ட பல துறைகளில்  தீவிரமாக செயல்படும் பன்முக ஆளுமையாகத் திகழ் கின்றீர்கள். இந்த பன்முகத்தன்மைகளுக்கிடையே முரண்கள் தோன்றி யதுண்டா ?

திரைப்படம் என்பது எப்போதுமே பொது வெளியில்தான் உள்ளது. நீங்கள் பெரும்பாலும் திரையுலகு சார்ந்தே அடையாளங்காணப்படுவீர்கள். நான் உரை நிகழ்த்த போகும்போது கூட என்னை ஒரு நடிகையாகவே காணுகின்றனர்.
நான் அங்கு நடிகையாகவே செல்கின்றேன்.பின்னர் அந்த அடையாளத்தை துறந்து விட்டு மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற அடையாளத்தை சூடிக்கொண்டு நான் விரும்புவதை உரையாற்றி விட்டு வருகின்றேன்.
இவற்றை நான் பல செயல்பாடுகளுக்கிடையேயான முரணாக  காணவில்லை. அது போலவே நான் தேர்ந்தெடுக்கும்  திரைப்படங்கள் அனைத்தும்  நான் நம்புகின்ற மனித உரிமை விஷயங்களுடன் ஒத்தி சைந்தே போகின்றன.
நான் ஒன்றும் பாடிக்கொண்டும் மழையில் ஆடிக்கொண்டும் தேவை யில்லாமல் ஒரு பையனோடு காதல் வயப்படுவதுமாக இருந்து கொண்டு பின்னர் இங்கு வந்து மனித உரிமையைப்பற்றி பேசவில்லை.
அப்படி செய்தால்  இரட்டை வாழ்க்கையையே நான் வாழ்கின்றேன் என்றாகி விடும்.
நான்  திரைப்படங்களில் பணி புரிகின்றேன். அவற்றை சமூக மாற்றத் திற்காக பயன்படுத்தவும் முயற்சிக்கின்றேன் .அதே நேரம் நான் மனித உரிமை . வேலைகளிலும்  ஈடுபடுகின்றேன். உண்மையில் அவை எனக்கு உதவுகின்றன.
இந்த சிறிய பகுதிக்கு (மணப்பாடு) நான் ஒரு  நடிகையாக வந்துள்ளேன். இங்கு வாழும் மக்களின் வாழ்வியல் போராட்டங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை என்னால் அறிய முடிகின்றது.

 வெவ்வேறு வகையான மக்களை நான் சந்திக்கின்றேன். எனக்கு இதுவும்  ஒரு கல்வியாகும். மனித உரிமை தளத்தில் எனது பணி என்னவென்பதை புரிந்து கொள்ள இது உதவுகின்றது.

நான் மனித உரிமை பணிகளை ஆற்றும்போது இந்த கதை மாந்தர்களை புரிந்து கொள்ள முடிகின்றது.  இது போன்ற கதை மாந்தராக நடிக்கும் போது மக்களை புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறாக ஒன்று மற்றொன்றிற்கு உரமூட்டுகின்றது.

3.அனைவருக்கும்  தரமான சமச்சீரான  இலவச கல்வியை நாம் இந்தி யாவில் சாதிக்க முடியாமல் இருப்பதற்கு உள்ள தடைகள் என்னென்ன?

மொத்த அரசியலமைப்பு, ஊழல் உள்ளிட்ட  ஏராளமான தடைகள் பாதையில் உள்ளன. ஆனால் இவ்விஷயத்தில் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூற முடியாது.அண்ணா ஹஜாரேவின் இயக்கத் தைப்பாருங்கள். ஒவ்வொருவரும் ஊழலுக்கு எதிராக உள்ளனர் ஆனால் அதே சமயம்.நமது விழுமியங்களும் அழுகியுள்ளன. ஒவ்வொரு மனிதனும் நேர்மையற்றவனாகவே உள்ளான்.

ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் பிஞ்சுக்குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய  சோற்றில் கற்களை கலக்க முடிகின்றது எனும்போது யாரை குற்றஞ்சொல்ல?
ஆழிப்பேரலை போன்ற பேரிடர் சமயத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நல்ல போர்வைகளை எடுத்து விட்டு மோசமான போர்வைகள் வைக்கப்பட்டது. இதற்கு யாரை குறை கூற?
ஒவ்வொரு மட்டத்திலும் மனித விழுமியங்கள் மாசடைந்திருக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

நாம் எல்லோருக்கும் கல்வியை வேண்டுகின்றோம். நமக்கு எவ்வகையான பள்ளிக்கூடங்கள் வேண்டும்?
ஆனால் சமூகத்தின் உயர் நிலையிலும் உயர் பதவியிலும் உள்ள படித்தவர்கள்தான் குடும்ப வாழ்வில் வன்முறை, பெண் கருக்கொலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
அண்மையில் பெண் என்பவள் கணவனைப்பின்தொடரும் சீதை போன்றவள் என்றதொரு தீர்ப்பை மும்பை உயர் நீதி மன்றம் வழங்கியது பற்றி கருத்துக்கூறுமாறு என்னிடம் ஊடகங்கள் கேட்டன.

நமது கல்வி முறை என்னவாக இருக்கின்றது?
நாம் நல்ல மனிதனாக இருப்பதை பற்றி அவை கற்பிக்கின்றனவா?
அவை நமக்கு அறிவை அளிக்கின்றனவா?
 நாம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.
என்றாவது ஒரு நாள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என நம்புவோம். ஆனால் அக்கல்வி வெறும் கல்வியாக இல்லாமல் நல்ல தரமான கல்வியாக ,விழுமியங்களைக்கொண்ட கல்வியாக இருக்க வேண்டும். 

4.மாவோயிஸ்டுகளுக்கெதிரான பச்சை வேட்டையை நடத்திக்கொண்டே  மறுபுறம் நம் நாட்டின் கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் அரசு மும்முரமாக உள்ளதே? 

இது மிகவும் சிக்கலான விஷயம். ஊடகங்கள் இதை மிகவும் எளிமையாக்கி பார்க்கின்றன. அவர்கள் மாவோயிஸ்டுகளை பயங்க ரவாதிகள் என்கின்றனர். இது முழுமையான கிறுக்குத்தனம்.
நக்ஸலைட்டுகளைப் பற்றியோ மாவோயிஸ்டுகளைப்பற்றியோ ஆந்தி ராவில்  நீண்ட காலமாகப் பாடி வரும் கத்தரைப்பற்றியோ பழங்குடி யினரின் பிரச்சினைகளைப் பற்றியோ  அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்ப டுகின்றார்கள் என்பதைப்பற்றியோ அங்கு வளர்ச்சி ஏன் இல்லை என்பது பற்றியோ மக்களுக்கு  ஒன்றும் தெரியாது.

திடீரென்று ஒரு நாள் அரசு விழித்தெழுந்து கொண்டு “ஓ அங்கு வளர்ச்சிப்பணி செய்ய வேண்டும்” என்கின்றனர். இது மிகவும் சிக்கலான விஷயம்.இதை அதீத எளிமையாக்கி பார்க்க நாம் முயற்சிப்பதின் விளைவாக  தவறுகளைச்செய்கின்றோம்.

பீஹார். ஒடிஸா, சத்தீஸ்கட், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பெரு நிதி வணிக நிறுவனங்களுக்கு  இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட கனிம வளங்களை அள்ளுவதற்கு  நாம் சுதந்திரம் கொடுத்து விடும்போது அது நிலைமையை மேலும் சிக்கலாகுகின்றது.பொது மக்களாகிய நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால்  நான் தனிப்பட்ட முறையில் வன்செயலை ஆதரிக்கவில்லை. அது நல்ல நோக்கத்திற்காக நடந்தாலும் சரியே. வன்செயலானது நிரந்தரத் தீர்வைத்தரும் என நான் நினைக்கவில்லை.பல சிரமங்க ளிருந்தாலும்  வன்செயலற்ற வழிமுறையை நாம் நம்ப வேண்டும். இல்லையெனில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்.

சி.ஆர்.பி.எஃப். உள்ளிட்ட பாதுகாப்பு படையினரிடமிருந்து ஒரு புறம்  மாவோயிஸ்டுகளிடமிருந்து மறு புறம் என இரு பக்க வன்முறையாலும் பொது மக்கள்  கசக்கப்படுகின்றார்கள்  நசுக்கப்படுகின்றார்கள்.
ஆனால் பினாயக் ஸென் போன்ற செயற்பாட்டாளர்கள் விஷயத்தில் நடந்ததுதான் என்ன? நம் நாட்டில் அவருடையது போல் நூற்றுக் கணக்கான வழக்குகள் உள்ளன. 

சமீபத்தில் ஒரு பெண் அடித்து உதைக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். மனு ஒன்றை ஆயத்தம் செய்து கையெழுத்திட்டளித்தோம்.என்னால் இயன்றது அவ்வளவுதான். ஆனால் அது மாற்றத்தை கொண்டு வரவில்லை.
அத்துடன் நகர * ஊரக பிளவுகள்  அதிகரிக்கின்றன.  நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடக   நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் உள்ள உயர் / நடுத்தர வர்க்கம் போன்ற  மிக சிறிய பிரிவினரின் தேவைகளையே நிறைவு செய்கின்றன. 

அவை உண்மையான பிரச்சினைகளை விட்டும் தங்களை தூரமாக்கிக்கொள்கின்றன.அடுத்தவருடைய பிரச்சினைதானே , இதில் எனக்கென்ன வந்தது ? என்கிற மன நிலை வந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. 

செய்தித்தாள்களில் கிராமப்புறங்களுக்கான பக்கங்கள் மறைந்து வருகின்றன. பரபரப்பான விஷயங்கள் நடந்தால் மட்டுமே ஊரக விஷ யங்கள் வருகின்றன. இல்லையெனில் நாட்டின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கின்றது என்பது  நமக்குத் தெரிவதேயில்லை.
கிரிக்கெட், பாலிவுட், ஊழல்கள், அரசியல் என்பன  மட்டுமே தேசிய செய்திகளாகின்றன. உண்மையான பிரச்னைகள் தொலைந்து விடுகின்றன. இது மிகவும் கடினமான அறைகூவல்கள் நிறைந்த சூழ்நிலையாகும். மீண்டும் இதற்கான தீர்வு எளிமையானதில்லை.

5.சிறந்த ஆளுமைகளின் கதைகளுக்காக தாங்கள் நடிக்கும்போது ஏற்பட்ட உணர்வுகளை பற்றி .....?

மக்ஸீம் கோர்க்கி ,ப்ரேம் சந்த் ,கோவிந்த் நிஹ்லானி,அடூர் கோபால கிருஷ்ணன் ,மஹா ஸ்வேதா தேவி போன்றவர்களின் படைப்புக்கள் வியத்தக்க வளம் வாய்ந்த இலக்கியங்களாகும்
வருத்தமான விஷயம் என்னவென்றால் படத்தயாரிப்பாளர்கள்   நிறைய கதைகளை கண்டுகொள்வதேயில்லை.ஏராளமான நல்ல இலக்கியங்கள் இருக்கின்றன.
உண்மையான கதைமாந்தராக நடிப்பதென்பது அரிய நிகழ்வாகும். ஏனெனில் இவையனைத்தும் அவர்களின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப் பாடாக  வாழ்வியல் அனுபவங்களாக ஏராளமான ஆய்வுகளின் முடிவுக ளாக இருக்கின்றன.
எனவே நான் அவற்றை விரும்புகின்றேன்.

6. வணிக திரைப்படக்கலவையை  மட்டுமே ரசிக்கத்தெரிந்த இந்திய மனங்களை  எப்படி மனித உணர்வுகளை, சிக்கல்களை சித்தரிக்கும் தரமான  திரைப்படங்களின் பக்கம் ஈர்ப்பது?

நான் ஏற்கனவே சொன்னபடி இது மிகவும் கடினமான ஒன்று.இது  பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோக ஸ்தர் என அனைவரையும் உள்ளடக்கிய  ஒரு பெரிய பிணைப்பு.
பெரிய கெடு நோக்குடைய வளையம்.  இதனை யாராவது முறிக்க வேண்டும். அனைவரும் இதற்கான பொறுப்பை எடுக்க வேண்டும்.
நீங்கள் ஒரு  ஊடகவியலாளராக இருந்தால் , நான் நல்ல திரைப்படத்தை ஆதரிக்கும் முகமாக  அதைப்பற்றி கூடுதல் எழுதுவேன் எனக்கூற வேண் டும்.

நான் ஒரு பார்வையாளனாக இருந்தால் இந்த நல்ல திரைப்படங்களை அவை குறுந்தகட்டில் வரும் வரை காத்திருக்காமல் நானே திரையரங்கிற்கு சென்று காண்பேன் எனக்கூற வேண்டும்.
ஒரு தயாரிப்பாளர் , நான் நல்ல திரைப்படத்தை தயாரித்து அதை நல்ல விதம் சந்தைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவேன் என்று முன் வர வேண்டும்.
இல்லையெனில் நல்ல திரைப்படங்கள் உருவாக்கப்படுவதும், திரையரங்கிற்கு வருவதும் நின்று விடும்.
நல்ல கலை வாழ வேண்டும் மறு பக்க கதை கொண்டு வரப்பட வேண்டும் என நாம் உண்மையாக நம்பும் பட்சத்தில் அதன் பொறுப்பு எந்த ஒரு தனியாளுடையதாகவும் இருக்காது மாறாக அது நம்மனைவரையுமே சாரும்.
நான்  குழந்தைகள் திரைப்படக்கழகத்தின்  (children film society) தலைவியாகவுள்ளேன்.
நாங்கள்  “கட்டூ” என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை எடுத்தோம். அதனை பார்த்த அனைவரும் ஆகா!! என்ன அருமையான படம் எனப்பாராட்டினர்.அது பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
ஆனால் அதன் வினியோகஸ்தரை கண்டுபிடிப்பதென்பது மிகவும் சிரமமாக இருந்தது.
 நாங்கள் சந்தித்த ஒவ்வொரு வினியோகஸ்தரும் இது அழகான நல்ல படம்தான். ஆனால் பெரிய நடிகர்கள் யாரும் நடிக்கவில்லையே? ,பாடல்களுமில்லையே? இது குழந்தைகள் படமாயிற்றே? நாங்கள் எப்படி வெளியிடுவது?
ஆக மீண்டும் அதே பிரச்னைகள்தான். யாரும் சிக்கலை சந்திக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் பாதுகாப்புணர்வுடன் செயல்படவே விரும்புகின்றனர்.
 துணிவுள்ளர்களால்தான், சிக்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களால்தான் உலகம் மாற்றங்களைச்சந்தித்துள்ளதே தவிர பாதுகாப்புணர்வுடன் செயல் பட்டவர்களால் இல்லை.
எல்லைகளை மோதித்தள்ளியவர்களே உலகத்தை மாற்றியுள்ளனர். பாது காப்புணர்வுடன் இருந்தவர்களின் வாழ்வோ அப்படியேதான் தொடர் கின்றது. எனவே நாம்தான்  இதற்கு பொறுப்பெடுத்தாக வேண்டும்.



7.காந்தியைப்பற்றி எழுதியதற்காக அவர்மீதான  நச்சு  தோய்ந்த விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டி வந்தது என தங்களது இணைய தளத்தில் தெரிவித்திருந்தீர்கள்.என்ன வகையான விமர்சனங்கள் அவை?

2005 இல் காந்திஜியின் “சத்திய சோதனை” நூலை நான் ஒலி வடிவ நூலாக கொண்டு வந்தேன்.
அதை குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில் வெளியிட தீர்மானித்திருந்தேன்..

காந்திஜியை நாம் அக்டோபர் 2 அன்று மட்டும் நினைவு கூறுகின்றோம்.
வருடத்தின்  மீதி  நாட்களில்  அவரை  மறந்து விடுகின்றோம்.
காந்திஜீ இக்காலகட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமானவர் என்பதையும் காந்திஜீயின் ஆசிரமத்தில் தங்கியிருப்பது தொடர்பான இனிய அனுபவங்களையும்   நான் எனது வலைப்பூவில் பதிந்தேன்.
உடனடியாக கடுமையான எதிர்வினைகள் வரத்தொடங்கின.
காந்திஜீ பெண்களுடன் இருந்தார்.அவர் இக்காலகட்டத்திற்கு பொருத்தமற்றவர். முஸ்லிம்களை தாஜா செய்தார்.மதத்தில் அதீத பற்றுடையவர் என வித்தியாசமான விமர்சனங்களாக அவை இருந்தன.
அவரை நாமும் கடவுள் என்று சொல்லவில்லை. அவரை தன்னை அப்படி சொல்லிக்கொள்ளவுமில்லை. அவரும் நம்மைப்போலவே நல்லதும் அல்லதும் கலந்த ஒரு மனிதர்தான். மக்களின் பரந்துபட்ட நலனுக்காக வேண்டி தனது சொந்த வாழ்வையே  அவர் பரிசோதனைக்களமாக மாற்றினார் .
காந்திஜீயை  நாம் அறியாமல் அறிய விழையாமல் அவரை கற்காமல் அவரைப்பற்றி விமர்சிக்க நமக்கு என்ன உரிமை இருக்கின்றது?
அவரைப்பற்றிய விமர்சனங்களுக்கு நான் காந்திஜீ, மார்டின் லூதர் கிங் உடைய மேற்கோள்களையே எனது விடையாக முன்வைத்தேன். அத்துடன் அது பற்றிய எனது வலைப்பூ பதிவை நிறுத்தி விட்டேன்.

8.காந்திஜீ மீதான காழ்ப்புணர்வையும் , ஃபாஸிசத்திற்கெதிரான  முயற்சி களுக்கு கிடைக்கும் எதிர்ப்புகளையும், சிறுபான்மையினர், பழங்குடியினர் போன்ற விளிம்பு நிலை மனிதருக்கெதிரான வன்முறை களையும் பார்க்கும்போது  நாடு ஃபாஸிசத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக் கின்றது என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியும்.
ஃபாஸிசத்தை நோக்கிய  ஒரு பின்னடைவு இருக்கத்தான் செய்கின்றது. .நம் நாட்டு மக்கள் சில பகுதிகளில் மதச்சார்பற்றவர்களாகவும் சில பகுதிகளில் ஜனநாயகப்பூர்வமாகவும் உள்ளனர்.சில பகுதிகளில் மனிதாபிமானமிக்கவர்களாகவும் உள்ளனர். அதனால்தான் இந்நாடு இன்னும் இயங்குகின்றது.
கருத்துருவாக்கக்கூடியவர்கள், அதிக ஓசை எழுப்புவர்கள், ஆகியோர் ஃபாஸிசம் இங்கு இருப்பதை போன்று ஒரு உணர்வை  நமக்கு  உண்டு பண்ணலாம். மக்கள் சில  வேளை இவற்றினால் திசை திருப்பப் படலாம்.
உண்மையில் நம் நாடு மனிதாபிமானத்துடன் கூடிய ஜன நாயகத் தன்மை மிக்கது. மதச்சார்பின்மையின் அடிப்படையிலானது. நமக்கு இதில் நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையை நாம் கைவிடலாகாது. அப்படி கைவிட்டால் அது ஃபாஸிஸ்டுகள் விரித்த வலையில் நாமே விழுந்த மாதிரி ஆகி விடும். அதைத்தான் ஃபாஸிஸ்டுகளும் விரும்பு கின்றனர்.
தாராள எண்ணமுடையவர்களும் நேரிய திசையில் சிந்திப்பவர்களும்  தங்கள் நம்பிக்கையை கைவிட வேண்டும் என ஃபாஸிஸ்டுகள் எதிர்பார்க்கின்றனர். அதன் மூலம் மக்களை தாங்கள் விரும்பிய வண்ணம் கையாள விரும்புகின்றனர்.
தாராள சிந்தனை போக்குடைய மதச்சார்பின்மை வாதிகளாகிய நாம் நம்பிக்கையை இழந்து விடலாகாது.

நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கும் சராசரி ஆண்களும் பெண்களும் தாங்கள் தவறாக கையாளப்படுவதையும் திசை திருப்பப்படுவதையும் விரும்பவில்லை. 

அவர்களுக்கு அவர்களுடைய அன்றாட வாழ்வாதார சிக்கல்கள் உள்ளன. மத, இன ,மொழி அரசியல் அடையாளங்களுக்குள் சிக்கிட அவர்கள் விரும்புவதில்லை.  அவர்கள் ஒவ்வொருவரும்  தங்கள் குடும்பத்தினருடன் உண்டு  உழைத்து வாழவே விரும்புகின்றனர்.
எனவே நாம் அத்தகைய ஒரு மானுடச்சமூகத்தைத்தான் உருவாக்க வேண்டுமேயல்லாது ஃபாஸிசத்தை நோக்கி  நாம் நகர்கின்றோம் என்பதாக எண்ணத்தேவையில்லை.


9.சமூக சேவைக்கான குரல்களை வலுவாக கொண்டு சேர்க்கும் ஒரு உத்தியாகத்தான் திரைத்துறையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.பொதுவில் இந்திய ஊடகவெளி ஜனநாயகத்தன்மை மிக்கதாக உள்ளதா?

எனவேதான் நான் பிராந்திய மொழிப்படங்களை பண்ணியுள்ளேன் . நான் சிறிய அளவில் செயல்படுகின்றேன்.  சொல்லியாக வேண்டிய தலையாய  கதைகள் என எனக்கு  தோன்றுபவற்றை திரைப்பட வடிவில் சொல்கின்றேன்.

மீனவர் பிரச்சினை பற்றிய இந்த ( நீர் பறவை ) படமாகட்டும் அல்லது ஃபிராக் ஆகட்டும் நான் இது வரை 30 திரைப்படங்களை பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் செய்துள்ளேன்.

.அவற்றிற்கு பிராந்தியம் என பெயரிடுவது பொருத்தமன்று. மற்ற ஹிந்திப்படங்கள் பாலிவுட் படங்கள் போல இவைவையனைத்துமே இந்தியப்படங்கள்தான்.

ஹிந்திப்படங்களும் பாலிவுட் படங்களுமே  இந்தியப்படங்கள் என நாம் நம்புகின்றோம்.

 எல்லா இடங்களிலும் எல்லா வகையான கதைகள் உள்ளன.

மொத்த நாட்டிற்குள்ளேயே ஏராளமான இந்தியாக்கள் வாழ்கின்றன. இவையனைத்தும் நமக்கு இன்றியமையாதவை. நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகின்றேன்.


ஊடகங்கள் பொதுவாக ஜனநாயகத்தன்மையோடுதான்            இருக்கின்றன. இங்கு யாரும் நினைப்பதை எழுத முடியும்.

 ஆனால் இன்னொன்றும் உள்ளது. இது பெரு வணிக உலகம்.

எனவே நாம் எழுதுவதில் சஞ்சிகையின் ஆசிரியர் கை வைப்பார். ஆசிரியருக்கு சரி  எனப்படுவது ஊடகத்தின் உரிமையாளருக்கு பிடிக்காது. இவை சுதந்திர சமூகத்தின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகளாகும்.

ஜன நாயகத்தில் எல்லாவித பயனற்ற கருத்துக்குப்பைகளும் இருக்கும்.

எனினும் நல்ல விஷயத்தை நீங்கள் கொடுக்கும்போது மக்கள் மெது மெதுவாக அதை பற்றிக்கொள்வார்கள்.

ஆனால் நீங்கள் மாற்றீடைக்கொடுக்கவில்லையெனில் மக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்? ஏற்கனவே இருப்பவற்றைத்தான் தேர்ந்தெடுப்பர்.
ஜனநாயகத்தில் நுகர்வியம், பெருவணிக மயமாக்கம், அரசியல் ஃபாஸிசம் என பல சிக்கல்கள் இருப்பதனால் உங்களுக்கான குரலை ஒலிப்பதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன.
 எனினும்  நல்ல ராணுவ அரசை விட கெட்ட ஜன நாயகம் சிறந்ததுதானே?
ஜன நாயகத்தில் நாம் நம்பிக்கையிழக்க முடியாது. ஜன நாயக கருவியின் மூலமாகவும் சுதந்திர வெளியின் வாயிலாகவும் மட்டுமே  மக்களுக்கு நல்லறிவு நிலையை நாம் கொடுக்க முடியும்.

10.இங்கு பெரு வணிக உலகின்( கார்ப்பரேட்) குரல்வளையாக பெரும்பான்மை ஊடகங்கள் அதி தீவிரமாக  இயங்கும்போது மானுடத்திற்கான வெளியை  விரிவுபடுத்துவதென்பது அறைகூவல்கள் நிறைந்ததொன்றாயிற்றே?

ஆமாம். பெரும் அறைகூவல்கள் உள்ளன. திரைப்படத்துறையை பாருங்கள். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் மைய நீரோட்ட படங்களின் சந்தை முதலீட்டை பார்க்கும்போது சுயேச்சையாகவும் சிறிய அளவிலும் எடுக்கப்படும் படங்களின்  உருவாக்க செலவுகள் அவற்றினருகில் கூட வர முடியாது.
எனினும் அந்த குட்டையில்தான்  போராடி நீந்தி அந்த திரைப்படங்களை வெளியிடவும் வேண்டியுள்ளது.

நான் எடுத்த ஃப்ராக் படத்தை பாருங்களேன். படத்தின் தயாரிப்பாளர் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தார். மீதமுள்ள பணத்திற்கு நான் என் மீதுள்ள நல்லெண்ணம் மூலமாகவும், இரந்து,  கை மாற்று வாங்கி ,  நட்பு வட்டாரத்தை அணுகி என  அனைத்தையும் செய்துதான் அந்த படத்தை வெளியிட முடிந்தது .

அதன் பிறகு அதனை சந்தைப்படுத்துவதற்கு பெரும் முதலீடு வேண்டும். ஊடக விளம்பரங்கள்,பதாகைகள் என செலவு பண்ணினால்தான் படம் வசூலில் வாகை சூடும். வசூலில் வெற்றி பெற்றால்தான் அது மக்களிடையே எடுபடும். சராசரி மனிதனுக்கு இப்படி ஒரு படம் வெளியாகின்றது என்பதும் தெரிய வரும்.

இந்த சந்தை முதலீடு செய்யவில்லையெனில் இது எதுவும் நடக்காது. படம் பெரு வாரியான மக்களுக்கு சென்றடையாது. மக்களை சென்றடைந் தால்தானே அவர்கள் இதை விரும்புகின்றார்களா? இல்லையா ?என்பது தெரிய வரும்.
கடைசியில் இது போல  படங்களை விருது படம் , விழா படம் என மக்கள் கூறி விடுவார்கள்.

ஆகவே ஊடகத்தில் சுயேச்சையான சுதந்திரமான குரல் என்பது  பெரும் அறைகூவலான விடயம்தான். இது கடினமான சங்கதிதான். ஆனால் சாத்தியமற்றது என நான் நினைக்கவில்லை.
இதற்கு மக்களிடையே ஆழ்ந்த பற்றுறுதி வேண்டும்.ஆனால் கவலை தரத்தக்க விடயமென்வென்றால் இளைய தலைமுறையினரிடையே ஆழ்ந்த பற்றுறுதி இல்லை. 

படத்தை எடுக்குமுன்னரேயே இந்த படம் எப்படி ஓடும்? பணம் எங்கிருந்து வரும்? நான் எப்படி இதை பண்ணுவேன்? எனக்கேட்கின்றனர்.உலகெங்கும் சுயேச்சையான் குரல் என்பது அறை கூவலானதொன்றுதான்.
ஆனால் இரான்,தாய்வான் ரோமானியா போன்ற சிறிய நாடுகளிலும்  பெரிய நாடுகளான அமெரிக்கா போன்ற இதர பல இடங்களிலும் மக்கள் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் இங்கு இந்தியாவில் எவ்வகையிலாவது பொருளாதாரம் கலையில் குறுக்கிடுகின்றது.இங்குள்ளவர்கள் பொருளாதார ரீதியாக எங்ஙனம் ஒப்பேறும் எனப்பார்க்கின்றனர்.
 நான் எவ்வாறு இந்த கதையைச்சொல்வது? அதற்கு எப்படியாவது ஒரு வழியை கண்டுபிடிப்பேன் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டும்.அப்படி ஒரு பேரார்வம் வேண்டும்.

நான் கல்லூரிகளுக்கு உரையாற்ற செல்லும்போது அங்கு இளைய சமூகம் என்னிடம் கேட்கும் கேள்வி இதுதான் ,”” நாங்கள் இதில் எப்படி பணம் உண்டாக்க முடியும்?இது எங்களுக்கு எப்படி உதவும்? “”
இருபது வருடங்களில் நிறைய மாற்றம் வந்துள்ளதை நான் காண்கின்றேன். நாங்களும் இளமையாக இருந்தபோது  சஃப்தர் ஹாஷ்மியின் தெரு நாடகங்களில் பங்கேற்றுள்ளோம். பணமும் இல்லை ஒன்றுமில்லை. அப்போதெல்லாம் நாங்கள் பணத்தைப்பற்றி சிந்தித்ததே இல்லை.
நாங்கள் ஃபாஸிசத்தைப்பற்றியும் மதச்சார்பின்மையைப்பற்றியும்  நாட கங்களை  நடத்தியுள்ளோம். உலகை மாற்றிடுவோம் என நம்பிய அதே சமயம் நாங்கள் வெகுளியாகவும் இருந்தோம் .ஆனால் இலட்சியக் கனவுடன் இருந்தோம். 

ஆனால் இன்று நகர்ப்புறங்களில் உள்ள இளைய சமூகத்தினைடையே இலட்சியக்கனவை காண்பது மிக அரிதாக உள்ளது. பணம் சம்பாதிப்பதெப்படி? எப்படி நல்லதொரு வேலையை பெறுவது? என்று மட்டுமே சிந்திக்கின்றனர்
நல்ல கதையுடன் வருகின்ற திரையுலக இளம்  படைப்பாளிகள் ,””எனது தயாரிப்பாளர் இரண்டு பாடல் இதில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என விரும்புகின்றார், எந்த நடிகைகளை போட்டால் சரியாக வரும்? பணம் எப்படி சம்பாதிக்கலாம்?”.” எனக்கேட்கின்றனர்.
பற்றுறுதி இருந்தால் துணிவு வரும். 
சிலர் என்னிடம் வந்து கேட்டனர் ,”” நீங்கள் எப்படி ஃபிராக் படத்தை எடுத்தீர்கள்? எப்படி இந்த துணிவு உங்களுக்கு வந்தது?
 நான் கூறினேன் ,” துணிவை கண்டுபிடிப்பதென்பது கடினமல்ல. அது ஆழ்ந்த பற்றுறுதியிலிருந்து வரக்கூடியது.
நான் ஃபிராக் படத்தை எடுத்த பிறகு கடும் விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டி வந்தது.
என்னை முஸ்லிம் ஆதரவாளர்,
பாகிஸ்தானை ஆதரிக்கக்கூடியவர்,
ஹிந்துக்களின் எதிரி என்றனர்.
 கோத்ரா தொடர்வண்டி எரிப்பைப்பற்றி நீ ஏன் எடுக்கவில்லை? அதன் எதிர்வினையைப்பற்றி மட்டும்தானே எடுத்துள்ளாய். நீ ஏன் கஷ்மீர் பற்றி எடுக்கவில்லை? என மடத்தனமாக கேட்டனர்.
“பிரச்சினையில்லை. என்னைப்பற்றி என்னென்ன எதிர்மறையான கேள்விகளெல்லாம் கேட்க முடியுமோ அவையனைத்தையும் கேளுங்கள். அவற்றிற்கு விடை தருகின்றேன். அப்பொழுதுதான் நான் சொல்ல வேண்டியதை சொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் “ எனக்கூறினேன்.
அதாவது மிகவும் ஆழ்ந்த பற்றுறுதி இருக்க வேண்டும். என்னிடம் நீங்கள் உன் பெயரென்ன என 20 தடவை  அடித்து கேட்டாலும் நான் நந்திதாதாஸ் என்றுதான் சொல்வேனே தவிர அனிதா என சொல்லமாட்டேனல்லவா? .இதற்கு நான் அஞ்சமாட்டேன்தானே?
 இதே போல்தான் நாம் மனித விழுமியங்களிலும் பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் .அப்போதுதான்  நீங்கள் துணிவை காணவியலும். சில பொழுது அவை காணப்படுவதில்லை. எனினும் அது இருக்கின்றது. அது மறைந்தும், குறைவாகவும் காணப்படுகின்றது. நாம் இந்த புள்ளிகளை  இணைக்க வேண்டும்.
இது நிறைய பேரிடம் ஒசையின்றி காணப்படுகின்றது. நாம் அதை தெரிந்து கொள்வதில்லை ஊடகங்களும் இது போன்றவற்றை வெளிக்கொணருவதில்லை . எனவே நாம்  நம்பிக்கை இழக்கின்றோம். நன்மையில் நம்பிக்கையற்றவர்களாகி விடுகின்றோம்
 எனவே நாம் அது போன்ற  மாணிக்கங்களை கண்டு பிடித்து இணைக்க வேண்டும். நாம் அவர்களிடம் கூற வேண்டும்,” நீங்கள் தனித்தவர்களல்ல உங்களைப்போல் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். “
எனினும் இது கடினமானதுதான் ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. நான் எதிலும் நன்னம்பிக்கையையே காணுபவள். நான் எப்போதும் அப்படித்தான்.

.11.அரச பயங்கரவாதத்திற்கெதிராக நிற்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை  தனிமைப்படுத்தி தண்டிக்க எடுக்கப்படும்  முயற்சி யை எப்படி எதிர்கொள்வது?

முதலில் இது குறித்து நாம் பொது மக்களிடையே கருத்தை ஏற்படுத்த வேண்டும்.அதன் பிறகு இவர்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களே சிந்திப்பர். இவர்களை நல்லவர்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் போதுமான தகவல்களில்லை. அதன் விளைவாக, 

” பினாயக் ஸென்னா? அவர் மாவோயிஸ்டாயிற்றே?” முடிந்தது கதை.
“அருந்ததி ராயா? அவர் அரசிற்கெதிராக எழுதுபவராயிற்றே!”
“தீஸ்தா செதல்வாட் எப்பொழுதும் வழக்குகளைப்பற்றிப்பேசுவார். 10 வருடத்திற்கு முன்னால்  நடந்தவற்றைப் பற்றியே இப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றார். எப்பொழுதும் குஜராத்தைப்பற்றியே பேசுவார்”.

நாம் இன்னும் நாட்டுப்பிரிவினையைப்பற்றிப் பேசிக் கொண்டுதானி ருக்கின்றோம்.
ஜர்மனி இன்னும் ஹோலோகாஸ்ட் பற்றி பேசிக் கொண்டுதா னிருக்கின்றது.

பத்து வருடங்கள் என்பது எற்கனவே தாமதம்.  மக்கள் நீதியைப்பெற்றால் நாம் அதைப்பற்றிப் பேசத்தேவையில்லை. மோசமான காலங்களைப்பற்றி நாம் நினைவுபடுத்திக்கொண்டிருக்கத்தேவையில்லை .நாம் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும். ஆனால் நாம் நமது தவறுகளிலிருந்து பாடங் கற்பதில்லை.
ஒடிசாவின் கந்தமாலிலும் அதையேதான் செய்தோம்.எண்ணற்ற பழங்குடி பகுதிகளிலும் அதையேதான் செய்கின்றோம்.
இன்னமும் குஜராத்தின் சிறந்த முதலமைச்சராகவும், திரு உருவாகவும் நரேந்திர மோதி  அழைக்கப்படுகின்றார். அவருக்கு விருதுகள் கொடுக்கப்ப டுகின்றன.சிறப்பு புலனாய்வு குழு அவரை எல்லா குற்றங்களிலிருந்தும் விடுவிக்கின்றது.
நாம் எப்படி போராடாமல் இருக்க முடியும்?

                                  நேர் காணல்: அமீர் அப்பாஸ்,  பஷீர்.
                                                                                               

                                                                                                                                                                                    






.













Wednesday, June 6, 2012

அழகியல் ஆன்மீகம்



'கடவுள் நம்பிக்கையற்ற ஒரு செல்வந்தன் ஒரு ஊரில் வாழ்ந்துவந்தான். தன் பிள்ளைகளும் கடவுளை நம்பக்கூடாது என்பதற்காக அவர்களை வெளியே விடாமல் வீட்டின் நான்காவது  மாடியில் வைத்து வளர்த்தான். சில வருடங்கள் சென்றன. கடவுள்  இருக்கிறாரா என பிள்ளைகளிடம் விசாரித்தான். ஆம் இருக்கிறார் என்றார்கள். அவன் அதிர்ந்து போனான். வீட்டின் மேல் மாடியிலிருந்து தம்மைச் சூழவிருக்கும் பிரபஞ்சஅழகியலின் அடியாகவே அவர்கள் கடவுளை அறிந்து கொண்டதாகச் சொன்னார்கள்.'

எம்மைச் சூழவிருக்கும் மகாபிரபஞ்சம் எத்தனையோ விடயங்களை எமக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றது. இருந்தாலும் மனிதன் தனது அன்றாட அலுவல்களுக்கு மத்தியில் மறந்துவிடுகின்றான்.

இப்பிரபஞ்சஅழகியல் இறைவனது இருப்பை உறத்துச் சொல்கின்றது. அந்த அழகியலை ரசிப்பவன் நிச்சயம் இறைவனைத் துதிக்கச் செய்வான்.

'இறைவா இவற்றை நீ வீணுக்காகப் படைக்கவில்லை..நீ தூய்மை யானவன்.. எங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பாயாக !'

படைப்புக்களின் அழகைக் காண்பவன்,ரசிப்பவன் அதன் ஆன்மீக சுகந்தத்தை உணர்ந்து கொள்கிறான். அவன் நாவு 'ஸுப்ஹானல்லாஹ்' என இறைவனைத் துதிக்க ஆரம்பித்துவிடும்.அதனை ரசிப்பதன் ஊடாக நாம் அல்லாஹ்வைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் படிப்பினை பெறவில்லையாயின் நரகநெருப்பு காத்திருப்பதாக முன்னைய அல் குர்ஆன் வசனம் சொல்லி முடிகிறது.

பிரபஞ்ச அழகியல் ஆன்மீகத்தின் அடிநாதமாக இருக்கிறது. எம்முடன் இருக்கும் ஆன்மீக மூலத்தை நாம் மறந்து விட்டோம்.

'இறைவா
பிரபஞ்சம் உன் வேதம்
ஒவ்வொருபடைப்பும்
உன் வார்த்தை'

என ஒரு கவிஞன் எழுதினான். பிரபஞ்ச அழகியலைத் தரிசிக்கும் ஒருவன் ஆன்மீக சுகத்தை இயற்கையான சுவையை அனுபவிக்க முடியும்.        எல்லோரும் ஆன்மீகத்திற்காக எத்தனையோ புத்தகங்களை வாசிக் கிறார்கள். ஆனால் அவர்கள் காணும் உலகை வாசிக்க மறந்து விடுகிறார்கள்.

அழகியலில் ஆன்மீகத்தைத் தரிசிப்பது போலஆன்மீகத்திலும் அழகியல் கலந்திருப்பது அவசியமாகின்றது. அதனால் தான் இஸ்லாம் எதனையும் நேர்த்தியாகச் செய்யச் சொல்கின்றது. நேர்த்தியென்பது எத்தனை பெரிய அழகியல்!

அல்குர்ஆனை அழகிய முறையில் ராகம் எடுத்து ஓதும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள். ஏனெனில் அதனை அழகியலோடு செய்யும் போது அதில் ஆன்மீகத்தை அடைய முடிகிறது.

ஆழகியலற்றவரட்டுச் சிந்தனைகளால் வாழ்க்கை ஒருபோதும் அழகடை வதும் இல்லை,ஆன்மீகம் பிறப்பதுமில்லை. 

ஆன்மீகம் என்பது வெறுமனே பள்ளியினுள் இருப்பதுமட்டுமல்ல. அது நமது இதயத்தினுள் இருப்பது. அழகியல் ஊடாகவும் ,அழகான செயல்களி னூடாகவுமே நாம் அதனைப் பெற்றக் கொள்கிறோம்.

இம்மாத 'இஸ்லாமிய சிந்தனை' இதழில் வெளியானது






Saturday, May 26, 2012

மரணத்தின் நிழலில் நடத்தல்...



வாழ்க்கைப் பாறையின்
மறு திசையில் எதிரொலிக்கிறது
தொண்டைக்கும்
நெஞ்சுக்குமான இடைவெளியில்
ஏதோ ஒன்று
அடைபட்டிருப்பதான வலி

மொத்த ஆயுளின்
அரைப்பகுதி முடிந்து போனதான
மன வலியில்
அங்கலாய்க்கிறது வயது

இதுவரையிலும் புதைந்து போன
மொத்தப் பிணங்களும்
எழுந்து வந்து
என் செவிகளுக்குள்
மரணம் குறித்து ஓதும் பாஷை
கண்ணீரை வரவழைக்கிறது
இரு விழிகளிலும்

வாழ்க்கை
ஓவ்வொரு மூச்சாய்
விட்டு விட்டு
மயானம் நோக்கி நடக்க
அதற்கு முன்னால்
நடந்து போகிறது
மரணம்...


2007 ஆம் ஆண்டு யாத்ரா 18 ஆவது இதழில் வெளியான எனது கவிதை

Monday, May 21, 2012

வீடு





த.வாசுதேவனின் இக் கவிதை நவீன வாழ்வின் புற,அக அம்சங்களை அழகிய முறையில் பதிவு செய்திருக்கிறது. படித்ததில் பிடித்த இக்கவிதையையை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


இந்தத் தெருவில்
குரைப்பதற்கு நாய்கூட இல்லை

வீடுகளின் குழந்தைகள்
ரெசிடென்சியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

பெரியவர்கள்
முதியோர் இல்லத்தில்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

எறும்புகளைக் கூட
மருந்து வைத்துக் கொன்றுவிட்டோம்.

குப்பைகளைக் கூட
பக்கத்து வீட்டுப் புறக்கடைகளில்தான்
கொட்டுகிறோம்.

கொசுக்களையும்
பூச்சிகளையும்
சுருள்வத்தியால் கொல்கிறோம்.

பல்லிகளைக் கொல்லவும்
வழிவகைகள் காண்போம்.

வாசலுக்கு கான்கிரீட் போட்டுவிட்டால்
தவளைகள் இருக்காது.

காம்பவுன்ட் வால் கட்டிவிட்டால்
பாம்புகள் வராது.

மரங்களை வெட்டிவிட்டால்
பறவைகள் இருக்காது.

குயில் சத்தமும் இருக்காது.
எச்சமும் இருக்காது.

தங்கத்தை பேங்க் லாக்கரில்
வைத்திருப்பதால் திருடர்களும் வரமாட்டார்கள்.

மிச்சமிருக்கும் உணவை
வைப்பதற்கு ஃபிரிட்ஜ்
இருப்பதால் பிச்சைக்காரன்கூட
இங்கு வரமாட்டான்.

அருகில் இருப்பவனிடம்
எதற்குப் பேசுவது?
கைபேசி இருக்கிறது
தூரத்தில் உள்ள உறவோடு பேச

ஏ.டி.எம் இல் பணம் இருக்கிறது
செலவு செய்ய.

நாங்கள் அநேகமாக அலுவலகத்தில்தான்
இருக்கிறோம்.
வாடிக்கையாளரும்,எஜமானும்
வெளிநாட்டில் இருக்கிறார்கள்.

தமிழில் பேசுவது அரிதுதான்
மம்மி மொழி போதும் நமக்கு.

வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது.
மனசும்தான்.

இந்த வீட்டில் டி.வி மட்டுமே
பேசவும் பாடவும் செய்யும்.

இந்த வீட்டில்தான் கதவுகளை நன்கு சாத்தியபடி
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.




Thursday, May 17, 2012

கனவுகளோடு...



இருட்டில் இருப்பதென்றால்
அப்படியொரு பிடிப்பெனக்கு.
அப்போதுதான் விழிநீர்
வெளியே தெரியாமல்
மொத்தமாய் அழுது
தொலைக்கலாம்...

பிறகென்ன...
பேனை  பிடிக்க நினைத்தபோது
கைகளில் அகப்பை தந்து
அழகு பார்த்தாள் உம்மா.

எல்லாத் திறமைகளுக்கும் சேர்த்து
பர்தா போட்டார் வாப்பா.

எனக்குள்ளும்..
நிறைய ஆசைகள் திறமைகள்

சமயலறைக்குள்ளே  புதைந்து
போகுமென்று
எனக்கெப்படித் தெரியும்?

உம்மா...!
எனக்கோர் ஆசை
பல ஊர்களைப்
பார்க்க வேண்டும்.
பல மனிதர்களை, மனங்களை
சந்திக்க வேண்டும்.

என்ன செய்ய...?
வீட்டு முற்றத்தில்
ஐந்து நிமிடம்
நிற்க விடாத
உம்மாவிடம் தான்
இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போதெனக்கு முடிந்ததெல்லாம்...
வீட்டுச் சுவரில்
எத்தனை கிறுக்கல்கள்...

மொத்த வீட்டையும்
கூட்டி முடித்து.
பாத்திரங்களைக்
கழுவி வைக்க எடுக்கும் நேரம்.

ஆடைகளை எவ்வளவு
சீக்கிரம் கழுவலாம்.
என்பதையெல்லாம்
மூச்சுவிடாமல்
சொல்லி முடிக்கத்தான்.

என் முந்தானைக்குள்
நிறையக் கனவுகளை
முடிந்து வைத்திருக்கிறேன்.
இப்போது கொஞ்சம்
சோகங்ளையும்
முடிந்து கொள்கிறேன்.
நாளை எனக்குத்
திருமணம் என்பதால்...

Friday, May 11, 2012

நாகூர் ஈ.எம் ஹனீபாவை நினைத்து...



இறைவா உன்னைத் தேடுடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்.
அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்...

அந்த கம்பீரமான காந்தக் குரல் செவிகளுக்குச் சமீபமாக இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அக் குரலின் இனிமையும் ஆசுவாசமும் எல்லோர் மனதையும் பரவசப்படுத்தக் கூடியது தான்.ஆறு அதன் பாட்டுக்கு ஓடுவது போல மிக இயல்பாக வந்து விழுகிறது அவர் குரல்.மூங்கில் பாடும் ராகம் போல இதயத்திலேயே தங்கி விடுகிறது அக் குரல்...

அவருடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் இதனை எழுதிக் கொண்டிருக் கொண்டிருக்கிறேன்.வரிகளின் எளிமையிலும் குரலின் இனிமையிலும் எத்தனை வசீகரம்.

எனக்குப் 10 வயதிருக்கும் என்று நினைக்கிறேன் என் பாட்டி ஒருவர் எப்போது நான் அவர் வீட்டுக்குச் சென்றாலும் வீட்டிலுள்ளவர்களை அழைத்து வைத்துக் கொண்டு என்னைப் பாடச் சொல்வார்.ஈ.எம் ஹனீபாவின் பாடல்களையே அப்போது நான் பாடுவேன்.'சொன்னால்' என்பதை அவர் பாணியில் 'ஷொன்னால்' என உச்சரிக்கும் போது அவர் சிரிப்பது இன்னும் மங்கலாக நினைவிருக்கிறது.


பின்நாட்களில் அவரது பாடல்களால் தீவிரமாக ஆட்கொள்ளப் பட்டிருந்தேன்.என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட என் சகோதரி ஒருத்தி அவரது அதிகமான பாடல்களை எனக்கு ஒரு கொப்பியில் எழுதித் தந்தார்.இன்றும் அதனைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இஸ்லாமிய கீதம் என்பதற்கு வரைவிலக்கணமாகவே ஈ.எம் ஹனீபா அமைந்து விட்டார் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டிலும் இலங்கை யிலும் முஸ்லிம்களின் மனதில் அவருக்கு இடமிருக்கிறது.எல்லோரும் அவரது பாடல்களைக் கொண்டாடுகிறார்கள்.மத ரீதியான வைபவங்களிலும் அவரது பாடல்களு;கு இடமிருக்கின்றன.ஆனால் இசையையும் பாடலையும் ஹராம் என வாதிடுபவர்கள் கூட அவற்றைச் சத்தமாக ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டிருப்பதுதான் என்னை எப்போதும் வியப்படையச் செய்யும் முரணாக இருக்கிறது.



1940 களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கியுள்ளார் ஹனீபா.இஸ்லாமிய கீத உலகின் சிகரத்திலே சக்கர வர்த்தியாக அவர் அமர்ந்திருக்கிறார்.படித்தவர்களும் பாமரர்களும் அவரது பாடலுக்குச் செவிசாய்க்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் 1925 டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் ஹனீபாஅவர்கள் பிறந்தார்கள்.இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது இவரது பெயர்.அப்பெயரைச் சுருக்கி இ.எம் ஹனிபா என அழைக்கப் பட்டார்.தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால்பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.இசை உலகில் பிரபலமானவுடன் 'இசை முரசு' எனும் அடைமொழியும் அப்பெயரோடு இணைந்து கொண்டது.


ஈ.எம் ஹனீபாவுக்கு ஒரு அரசியல் பரிமாணம் இருப்பதனை அண்மையில்தான் நான் அறிந்து கொண்டேன்.சமநிலைச் சமுதாயத்தில் வெளியான ஆளுநர் ஷாநவாஸின் கட்டுரையே அதற்கு வழிசெய்தது. ஹனீபா அவர்களுக்கு நேர்மையான ஒரு அரசியல் பக்கமும் இருக்கின்றது. கலைஞரையும் பேராசியர் அன்பழகனையும் அவர் அணைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை முதல் தடைவ பார்த்ததும் ஒரு கணம் ஆச்சரியப் பட்டேன்.தி.மு.வின் வளர்ச்சிக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார்.

'கடந்த டிசம்பர் 25 ஆம் நாளோடு அவருக்கு 86 வயது நிறைவடைந்துவிட்டது.89 வயதான பேராசியர் அன்பழகன் தி.மு.கவின் பொதுச் செயளாளராக இருக்கிறார்.88 வயதான கலைஞர் தி.மு.கவின் தலைவராக இருக்கிறார்.87 வய தான ஹனீபா நாகூரில் தாம் கட்டிஎழுப்பிய கலைஞர் இல்லத்தில் வெளிச்சம் குன்றிய ஓர் அறையில் ஒரு ஈசி கதிரையில் சாய்ந்தவாறு ஓய்வில் இருக் கிறார்.'

சிறு வயதிலேயே இவர் பாடத் தொடங்கிவிட்டார்.தனது 15 ஆவது வயதிலே 1941 ஆம் ஆண்டு தனது முதல் இசைக் கச்சேரியை ஒரு திருமண நிகழ்விலே அவர் நடத்தினார்.இத்தனை இருந்தும் எடுப்பான குரல் வாய்ந்த ஹனிபா அவர்கள் முறையாக சங்கீதம் கற்றவரல்ல என்ற செய்தி எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமான செய்திதான்.முறையாக சங்கீதம் கற்றிருந்தால் அதிகமாக சாதித்திருக்க முடியுமே என்று ஹனிபாவிடம் கேட்ட போது 'முஸ்லிம்கள் கர்நாடக சங்கீதத்தை விரும்பிக் கேட்பதில்லை.அப்படி நான் முறையாக சங்கீதம் கற்றிருந்தால் இன்று இந்த அளவுக்கு மக்களிடம் புகழ் பெற்றிருக்க மாட்டேன்.எனது சங்கீதத்தை மேட்டுக் குடி மக்கள் மட்டுமே கேட்டு ரசித்திருப்பார்கள்.ஆனால் எனது குரலை இன்று தமிழ் கூறும் நல்லுலகம்  முழுவதும் கேடகின்றது.சாதாரண மக்கள் கூட எனது பாடல் களால் ஈர்க்கப்பட்டு ஒரு மக்கள் பாடகனாக விளங்குகிறேன்.'என்று பதில் சொன்னார்.

உண்மையில் ஹனிபாவின் பாடல்களின் வெற்றி இங்குதான் இருக் கின்றது.தமிழ் கூறும் நல்லுலகில் அவரது பாடல்களின் பிரதான வெற்றிக்கு எளிமையான வரிகளும் அழகிய குரலுமே பிரதான காரணம் எனச் சொல் லலாம்.இலங்கைச் சூழலில் அண்மைக் காலங்களில் வெளியான இஸ் லாமியப் பாடல்களின் வெற்றியின்மைக்கு மேற்படிக் காரணங்களில் உள்ள போதா மைகளும் ஒரு காரணம் என இங்கு குறிப்பிடலாம்.

நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பிரபல்யமாவதற்கு புலவர் ஆப்தீன் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.ஏனெனில் அவரது அதிகமான பாடல்களை அவரே எழுதியிருக்கிறார்.புலவர் ஆப்தீனும் ஒரு பாடகராக இருந்தாலும் ஹனீபாவின் பாடல்களால் கவரப்பட்டு தான் பாடுவதை நிறுத்திக் கொண்டு ஹனீபாவுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார்.இந்த 'நாகூர் இரட்டையர்கள்'இஸ்லாமிய கீத உலகில் புதுப் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

இறை தூதர் (ஸல்) அவர்களது சீராவைச் சொல்வதில் இவரது பாடல்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.தூதர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை அவை எப்போதும் நினைவில் வைத்திருக்க அப் பாடல்கள் துணை புரிந்திருக்கின்றன.

 இவரது சில பாடல்களில் கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பதனை மறுக்க முடியாது.இருப்பினும் நமது மொத்தக் கவனத்தையும் அதன் பக்கம் திருப்பி நல்லவைகளை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை.நிச்சயம் இவரது பாடல்கள் சமூக,பண்பாட்டுத் தளத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மொத்தமாக நாகூர் ஹனீபாவின் இசைப் பாடல்களை நோக்குகின்ற போது அவை மக்கள் ரசனையின் நீண்ட இடைவெளியை நிரப்புவதற்கான பெரும் சாதனமாகப் பயண்பட்ட அதே நேரம் கலாசாரப் பண்பாட்டுத் தளத்தில் முக்கிய அதிர்வுகளையும் செய்துள்ளது.

ஆரம்ப காலத்தில் இவரது பாடல்கள் ஹிந்திப் பாடல்களின் மெட்டில் அமைந்திருந்தாலும் காலப் போக்கில் தனக்கான இசைப் பாணியொன்றை அவர் அமைத்துக் கொள்வதில் வெற்றியடைந்தார்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய கீதங்கள் முறையான செவ்வியல் இசை மரபில் அமையாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவை தமது இசைப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

கலாநிதி எம்.எஸ்எம் அனஸ் கூறுவது போல'இஸ்லாமிய கீதத்தின் அல்லது முஸ்லிம் இசையின் கடந்த 75 வருட கால வரலாற்றை நோக்கினால் அது தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் மட்டுமல்லாது தென் கிழக்காசிய இசைக்கும் தமிழ் இசைக்கும் அது அதன் பங்கைச் செலுத்தியுள்ளது'

எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏகாந்தத்திற்கு இவரது பாடல்கள் அர்த்தத்தை வழங்கின.இதனால் இசை ரசனைக்கு ஒரு வடிகாலாகக் கூட அவற்றை அமைத்துக் கொண்டார்கள்.அல்லாஹ்வைப் பற்றியும் நபியைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் அவரது பாடல்கள் அமைந்திருக்கின்றன.இதனால் மார்ககம் குறித்த ஒரு நினைவுபடுத்தலாயும் இவை இருந்ததாகக் கொள்ளலாம்.

எல்லாப் பாடல்களும் ஈர்ப்புடையதாய் இல்லாவிட்டாலும் மிக அதிகமான பாடல்கள் எல்லோர் மனதையும் தொட்டவை.பாடும் காலத்தில் அவர் கொண்டாடப்பட்டது போல இப்போது அவர் கொண்டாடப்படுவதில்லை. எல்லாக் கலைஞர்களதும் அந்திமப் பொழுது இப்படித்தான்.அவர்கள் ஒரு காலத்தில் எல்லோரையும் பேசவைக்கிறார்கள்.பின் யாராலுமே பேசப்ப டாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.

ஈ.எம் ஹனீபா காலத்தால் மறக்கப்படாத ஒருவராக இருக்க அவரது பாடல்களே போதுமானது.அவரது குரல் கேட்க ஆரம்பித்துவிடும் போது சட் டென ஒரு புத்துணர்ச்சி இதயமெங்கும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.மூங்கில் பாடும் ராகம் போல என்றைக்கும் எவரையும் மகிழ்விக்கும் சக்தி அவரது குரலுக்கு இருக்கிறது.இதனால் இஸ்லாமிய கீதத்தின் சிகரத்தில் என்றைக்கும் அவர் அமர்ந்திருப்பார்.


இம்மாத வைகறை இதழில் வெளியானது










Thursday, May 3, 2012

நேர்காணல்: B.H அப்துல் ஹமீத்


ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும் 

                    சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்



சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள், வடக்கைச் சேர்ந்தவர், இல்லை இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிர தேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் இவர் கொழும்பு, தெமட்டகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.. வறிய குடும்பம் ஒன்றில் பிறந்து, இளமையிலேயே தந்தையை இழந்த இவரை தாயார் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்கு ஆகாரம் விற்றுக் கிடைக்கும் வருமானத்திலேயே படிக்க வைத்தார். எதிர்பார்ப்புக்கள் எதுவும் அற்ற வாழ்க்கைச் சூழலில் எதேச்சையாக  வானொலி   துறைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது என்று கூறும் இவருக்கு, பாடசாலைக் காலத்தில் நல்லாசிரியர்களின் வழிகாட்டலில், தமிழ் அட்சரங்களைப் பிழையின்றி உச்சரிக்கவும்;, தூய தமிழில் உரையாடவும் கிடைத்த பயிற்சி வானொலி நிலையத்தில் காலடி வைத்த முதல்நாளே கைகொடுத்தது.

பின்நாட்களில் இவரது சாதனைகளுக்கு அதுவே அடிநாதமாக அமைந்து விட்டது. 11வது வயதில் 1960ம் ஆண்டு 'சிறுவர் மலர்' எனும் வானொலி நிகழ்ச்சியில் ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல், இன்று உலகத்தின் எந்த மூலையிலும் வாழும், தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவர் அனைவரும், மதித்து நேசிக்கும் குரலாக சிகரம் தொட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. அறிவிப்பு, நேர்முக வர்ணனை, செய்திவாசிப்பு, சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பு, நாடக ஆக்கம், பாடலாக்கம், நடிப்பு என பன்முகத் திறமைகளை ஒரு சுயம்புவாக வளர்த்துக்கொண்ட இவர்; தென்னிந்தியாவில் வரலாறு படைத்த கலைஞர்கள் பலரது, நேசத்துக்கும் பாசத்தும் உரிய ஒலிபரப்பாளராக இன்று வரை மிளிர்கிறார். அதன் காரணமாக, தென்னிந்திய திரைத்துறையிலும் பாடலாக்கம், நடிப்பு என இவரது பங்களிப்பு தொடர்ந்துள்ளது.  

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே ஒரு ஒலிபரப்பாளராக 1967 முதல் தொடர்ந்து 32 ஆண்டுகள் பணியாற்றிய இவர், பல்துறை சார்ந்த அறிவைத் தேடித் திரட்டிக்கொள்ள 'வானொலி நிலையம் ஒரு பல்கலைக்கழகத்தை விடச் சிறந்த தளமாக தனக்கு அமைந்ததாக நன்றியுணர்வுடன் கூறுகிறார்.                   மீள்பார்வை அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


சந்திப்பு : இன்ஸாப் ஸலாஹதீன், அஹ்ஸன் ஆரிப்


32 ஆண்டுகள் வானொலியிலே பணியாற்றியிருக்கிறீர்கள். அதனது ஆரம்ப காலத்திற்கும் கடைசிக் காலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படி உணர்கிறீர்கள்?

வானொலியில் நான் பணியாற்றிய காலத்தின் முதல் இரண்டு தசாப்தங்களும், நல்ல சுதந்திரமும் மகிழ்ச்சியும், ஊக்குவிப்பும் நிறைந்த பொற் காலமாகும். எனக்கு வழிகாட்டிகளாய் இருந்து, ஊக்குவித்த மூத்த ஒலிபரப்பாளர்களை, என்றென்றும் மறக்க மூடியாது. அங்கு, 17 வருடங்கள் பணியாற்றியதன் பின் 1985ம் ஆண்டு சிறப்புப் பயிற்சிக்காக நெதர்லாந்து (ஹாலந்து) சென்றேன். ஆறுமாத பயிற்சி முடிவில் மூன்று நட்சத்திர அந்தஸ்துடன் சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டது. பின், 1996ல்; மேற்கு ஆபிரிக்காவின் 'பெனின்' நகரில் நடைபெற்ற மற்றுமொரு பயிற்சிப்ப ட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

 இப்பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே, அமைந்த கடுமையான பயிற்சிகள். ஒரு முழுமையான ஒலிபரப்பாளனாக, நாடு திரும்பினாலும். நான் பெற்ற பயிற்சிகளின் பலனை இலங்கை ஒலிபரப் புத்துறைக்கு வழங்க முடியாத அளவுக்கு, நிலைமை மாறிப்போயிருந்தது. படைப்பாற்றல் மிக்கவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து இயங்கிய ஒலிபரப்புச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருந்தது. அரசியல் செல்வாக்குடன் வந்தவர்கள், பெரும்பதவிகளை பெறும் நிலை. அரசியல் வாதிகளைத் திருப்திப்படுத்துவதில்தான் அவர்களுக்கு அதிக அக்கறை இருந்ததே தவிர சமூகத்திற்கான பணியை வழங்கும் கடமை உணர்வோ, புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ, மூத்த வர்களை மதிக்கக் கூடிய பக்குவமோ இல்லாமல் இருந்தது. அபூர்வமாக சில நல்ல திறமைசாலிகளும் இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களாக வந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்களில் சிலரைப் பயிற் றுவிக்க என்னால் முடிந்தாலும் உயர்ந்த தரத்தில் வானொலி ஒலிபர ப்புக்களை மாற்றியமைக்கக் கூடிய காலம் உருவாகமல் பேய்விட்டது என்பதே கவலை.

ஆரம்பகாலத்தில், ஒலிபரப்புத்துறையில் கல்வி, தகவல், பொழுதுபோக்கு ஆகிய மூன்று விடயங்களே தாரக மந்திரமாய் இருந்தன. பின்நாளில் தகவல், அதற்கடுத்து பொழுதுபோக்கு, மூன்றாவது நிலையில் கல்வி என்றிருந்தது. காலப்போக்கில் கல்வி காணாமல் போனது. அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் தகவலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொழுதுபோக்கு மட்டுமே முன்னுரிமை பெற்று விளங்குகிறது. இப்படி நான் ஆதங்கப்பட்டாலும் இந்நிலைமையை சீர்திருத்த செய்யக் கூடியது எதுவும் இல்லை என்பதே உண்மை. சீர்திருத்தங்களைச் செய்யக் கூடிய துணிச்சலும், அக்கறையும் உள்ள இளம் அறிவிப்பாளர்கள் சிலர் இருந்தாலும் இந்த ஊடகங்களை நடத்துபவர்களுக்கு, நிர்வாகிகளுக்கு, அல்லது அவற்றின் உரிமை யாளர்களுக்கு அவ்வாறான அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது. எப்படியாவது வருமானத்ததைத் தேடவேண்டும் என்ற நிர்பந்தந்தத்தில் அனைத்துமே வர்த்தக மயமாகிவிட்டது. தனியார் வனொலிகளுக்குத்தான் இந்தத் தலைவிதியென்றால், அரச வானொலியும் இந்த வர்த்தகப் போட்டிகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பது வேதனையைத் தருகிறது. 

சினிமாச் சிந்தனைகளும், பாடல்களுமே நேயர்களுக்குத்தேவை என்றொரு மாயை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் பணியாற்றிய காலத் தில் இவ்வாறான ஜனரஞ்சக அம்சங்களை இனிப்பூட்டப்பட்ட மருந்தைக் கொடுப்பதுபோல, அளவோடு பயன்படுத்தினோம். அதிகமாக பயனுள்ள தகவல்களை வழங்கினோம். நேயர்கள் மத்தியிலும் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்களை உருவாக்கக் களம் அமைத்தோம்..

அத்தகைய சூழலில் தொடர்ந்தும் பணியாற்றாமல் நீங்கள் வெளியேறக் காரணம்?

ஆரோக்கியமான சூழல் மாற அரம்பித்ததாலும், அரசியல் செல்வாக்குடன் வந்தவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டதாலும், அவமானப்பட்டு வெளியேறும் காலம் வருமுன்; 1998 இல் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எனது பொறுப்பை இராஜினாமாச் செய்தேன். மும்மதங்களைச் சார்ந்து மொழியால் ஒன்றிணைந்த சமூகத்தை நோக்கியே எனது பார்வை இருந்தது. இன்று வரையும் அவ்வாறே இருக்கிறது. ஆனால் இராஜினாமா கடித்தை ஒப்படைத்தபோது, அடுத்த கட்டம் என்ன? என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், இதுவரை என்னைக்காத்த இறைவன் இனிமேலும் காப்பான என்ற நம்பிக்கையோடு தான் வெளியே வந்தேன். ஒரு வாசல் மூடி மறு வாசல் திறப்பான் இறைவன் என்பபார்களே! அதுபோல எனக்கு பல வாசல்கள் திறந்து வைத்தான் இறைவன். அதுவும் இடைவெளியே இல்லாமல்.


இன்றைய ஊடகங்கள் எதிர்நோக்கும் பிரதான சவால் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

நாங்கள் வளர்ந்த, வாழ்ந்த ஊடகச் சூழல் வேறு, அது, அரச ஊடகம் என்பதால் அங்கு வருமானத்தைத் தேடவேண்டிய கவலை எங்களுக்கு இருக்கவில்லை. ஆனாலும் தன்னிறைவு காண்பதற்கும் மேலதிகமாக, வருமானம் கிடைத்தது, அதற்குக் காரணம் எமக்குப் போட்டியாக, தொலைக்காட்சியோ, வேறு தனியார் வானொலிகளோ இருக்கவில்லை. ஆனால், தற்பொழுது ஊடகத் துறையில் பணியாற்றுபவருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் இத்தனை போட்டிகளுக்கும் மத்தியில், எப்படி பணம் உழைப்பது என்பதுதான். இவ்வாறு, போட்டிகள் பெருகும்போது விழுமியங்கள் தொலைந்து போவது இயல்புதானே.

இதனால், இலட்சியங்கள், சமூக கடப்பாடு என்பவை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும், இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், மொழிப்பற்றோடு, அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளை நடத்தும் சில இளம் ஒலிபரப்பாளர்கள் உண்டு, அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் மனமாறப்பாராட்டவும் நான்தயங்குவதில்லை.                                                                            எத்தனை நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்,'வானொலி' என்பது இனி வரும் காலங்களிலும் அதி சக்திமிக்க ஊடகம் விளங்கும் என்பதை எவரும் மறுக்கமுடியாது. காரணம், தொலைக்காட்சிபோன்றவை நமது ஐம்புலன் களையும் ஒருமுகப்படுத்திப் பார்க்கவேண்டியவை. ஆனால் நமது அன்றாட அலுவல்களுக்கு இடையூறின்றி நமது செவி வழியாக வந்தடையக்கூடியது என்பதே வானொலியின், அசைக்கமுடியாத சக்தி. ஆயினும் அதனை நமது நாட்டில் சரியாக உணரந்து பயன்படுத்துகிறோமா? என்ற கேள்விக்கு இன்றைய தலைமுறைதான் பதிலளிக்கவேண்டும்.

அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் மொழியை, பிழையறப்பேச உச்சரிக்க, செவிவழி செல்லும் ஊடகமே சிறந்த பங்காற்றமூடியும். ஒரு குழந்தை செவி வழியாக கிரகித்த ஒலிகளைக் கேட்டு முதன் முதலாக பேச ஆரம்பிக்கிறதே அதுவே சிறந்த உதாரணம். செவிவழியாகச் செல்லும் எந்தமொழியும் கொச்சைப் படுத்தப்பட்டால் எதிர்காலத்தில், அந்த மொழியே சீரழிந்துவிடும் அல்லவா? அதுபோல் நமது மதம் காட்டும் நன்நெறிகள், மற்றும் சமூதாயம் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை தக்கவைப்பதிலே ஊடகத்துறைக்கு, குறிப்பாக, வானொலிக்கு, மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது.




ஊடகத்துறையில் நீண்ட தூரம் பயணித்த நீங்கள் அத்துறையில் உள்ளவர்களுக்கு என்ன ஆலோசனைகளை முன்வைக்கிறீர்கள்?

நாம் தற்போது செய்மதி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால், எங்கெங்கோ இருந்து அநாச்சாரப் பழக்கவழக்கங்கள், நவீனநாகரிகம் என்றபோர்வையில் குக்கிராமம் வரை எட்டிப்பார்க்கின்றன. சமூக வரம்புகளை மீறிப் போகத் தூண்டுகின்றன. எனவே, நமது அடையாளத்தை, நாம்பெருமையோடு பின்பற்றிவந்த பண்பாட்டை, கலாசாரத்தை காக்கின்ற பணியையும், அதற்காக அடுத்த தலைமுறையை தயார்படுத்த வேண்டிய பணியையும் ஊடகங்களே செய்ய வேண்டி உள்ளது.

இதனையே 1996ம் ஆண்டு 'மேற்கு ஆபிரிக்காவின் பெனின் நகரில் நான் கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறையும்' (THE RELEVENCE OF THE MEDIA FOR ADOLESCENTS GROWING UP IN THE ISLAND SOCIETIES) வலியுறுத்தியது. உலகமயமாதலினால், கலாசார அதிர்ச்சி, ரசனை மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது எனினும்;, நமது சிறப்பான பண்பாடுகளைக் காக்க முயற்சியாவது செய்யலாம். அம்முயற்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பே மிகமுக்கியமானது. எனவே ஊடகத்துறை சார்ந்த எங்களது பார்வை அடுத்த தலைமுறையை நோக்கி யதாகவே அமையவேண்டியது அவசியமாகிறது

அதற்குப் புதிய அணுகுமுறையும் அவசியமாகிறது.  சிலவேளை நமது புதிய அணுகுமுறை, மூத்த தலைமுறையின் விமர்சனத்துக்குள்ளாகலாம். அதனால் விரக்தியடையாமல் எடுத்த முயற்சிகளைத்தொடரவேண்டும். அதேவேளை மூத்த தலைமுiறையை உதாசீனப்படுத்தாமல், அவர்களையும் மதித்துப் போற்ற வேண்டும். ஏனெனில், அவர்கள் விட்ட இடத்தில் இருந்துதான் நாங்கள் ஆரம்பிக்கின்றோம். 'ஒவ்வொரு தலைமுறையும் சாதிப்பதைவிட அடுத்த தலைமுறை அதிகமாக சாதிக்கும், அது காலத்தின் நியதி'.

இன்னொரு புறம் பார்த்தால், இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சி வேகமாக பரவிக் கொண்டிருப்பதனால், அச்சு ஊடகத்தின் வீச்சு குறைந்து கொண்டு வருவதையும் காணமுடிகிறது. எனவே, நவீன விஞ்ஞானத் தேரேறி இலத்திரணியல் ஊடகத்தோடு அச்சு ஊடகம் கைகோர்க்கவேண்டும். இப்போ தெல்லாம் இயந்திரகதியில் இயங்குகின்ற மனிதர்கள் மத்தியில், கையில் கொண்டு செல்லும் கருயின் மூலமே, பத்திரிகைகள், சஞ்சிகைகள் ,செய்திப் பக்கங்களை, வாசிக்கும் பழக்கம் மேலோங்கிவருகிறது. 'ஈ.புக்', 'ஓடியோ புக்' என்பனவும் மிகப்பிரபலம். எனவே இவற்றை நோக்கி எமது அச்சு ஊடகங்கள் வேகமாக நகரவேண்டும்.

நமது சமூகத்தைப் பொறுத்தளவில், நாம் எல்லோரும் ஒன்றிணைந்து, கைகோர்த்து இத்தகைய பணிகளை முன்னெடுக்க வேண்டும். தனித்தனித் தீவுகள் போன்று அமைப்புகளை உருவாக்கி, இயங்கும்போது ஒருவரை ஒருவர் அங்கீகரிக்காமல் விமர்சிக்கும் மனப்பான்மையே மேலோங்கும். எனவே நட்புறவுடன் சமகாலச் சிந்தனைகளில் ஒன்றுபடக் கூடியவர்கள் பொதுத் தளத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்.


இலங்கையில்-முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் என்ற கருத்தோடு உடன்படுகிறீர்களா?

இது ஒரு சிக்கலான விடயம். நாம் ஏன் அப்படி நினைக்க வேண்டும்? எது எங்களை அப்படி நினைக்கத் தூண்டுகின்றது? என்ற கேள்வி எழுகிறது. எமது சமூகத்தைப் பொறுத்தவரை மொழி அடையாளத்தைவிட எமக்கு மத அடையாளமே முதன்மையானது. ஆயினும் தமிழ் மொழி சார்ந்த நன்றி உணர் வையும் உரிமைகளையும் நாம் தைரியமாக வெளிப்படுத்துகிறோமா? எமது தாய் மொழி தமிழ் என்பதை நாம் மறுக்க முடியாது. அல்லாஹ்வைப் பற்றியும், எங்கள் நபிகள் நாயகத்தைப்பற்றியும், நாம் பின்பற்றும் மார்க்கத்தைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள மூலமானது எந்த மொழியோ அந்த மொழியே நமது தாய் மொழியானால் அந்தமொழியைப் புறக்கணித்து வாழவும் முடியாது. மொழியின் உரிமையை எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப வாதிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

இந்தமொழி மூலமான கல்வியையும், அதன் பலானாக கிடைக்கும் அனுகூலங்களையும் அனுபவித்துவிட்டு, மொழி அடையாளமற்ற அதாவது முகம் அற்ற சமூதாயமாகவே இங்கு வாழ்ந்து வருகிறோம். ஆனால், எமக்கொரு ஊடகம் என்று வேண்டும் என்று எண்ணும்போது அது தமிழ்மொழி சார்ந்ததாகவே பெரும்பாலும் அமையவேண்டிய நிர்பந்தத்தையும் மறுக்க முடியாது. அனால் நாங்கள் வாழ்வதோ பல்லின, பன்மொழிக்கலாசார நாடு, இங்கு நமது கவனைத்தை ஈர்த்து அலைக்களிக்கும் பல்வேறு ஊடகங்களுக்கு மத்தியில் 'எமக்கென்றொரு ஊடகம்' எனும் முயற்சிக்கு நமது சமூகத்தைச் சார்ந்தவர்களே எந்த அளவுக்கு ஆதரவு தருவார்கள் என்பது கேள்விக்குறி.

இத்தனைக்கும் மத்தியில், பொதுவாகவே தமிழைத் தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள், ஊடகத்துறையில் புறக்கணிப்படுவதால்தான், முஸ்லிம்களுக் கென்று தனி ஊடகம் என்ற சிந்தனை உருவாகிறது என்று வாதத்துக்கோர் பதில், இன்று இலத்திரனயல் ஊடகங்ககளில், கணிசமான அளவு முஸ்லிம் இளைஞர்கள் தமது சுய முயற்சியால் வாய்ப்புகளைப்பெற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதரசமூகங்களிடமிருந்து  எம்மை பிரித்து வைத்துக்கொண்டு மொழி அடையாளமின்றி, இன அடையாளத்தை மட்டும் வைத்து வாய்ப்புக்கள் இல்லை என்று நாம் சொல்வது தவறு. காரணம் நாம் பங்குகேட்பது மொழி அடிப்படையிலான பொதுத் தளங்களில். எனவே ஏனைய சமூகங்களோடு புரிந்துணர்வும், நட்பும் இன்றி எந்த ஒரு பொதுத்தளத்திலும் எமக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. மதம் சார்ந்து எமக்கென்றொரு ஊடகம் வேண்டுமானால் அமையலாம்.

அந்த வகையில் பார்த்தால். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'முஸ்லிம் சேவை' என்று முஸ்லிம்களுக்கு மாத்திரம்தான் தனியான சேவை இருக்கின்றது. கிறீஸ்தவ சேவை, இந்து மத சேவை என்றெல்லாம் அங்கு கிடையாது என்பதை நினைத்துப்பாருங்கள். சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினாராக வாழும் எமக்கு, அரச வானொலியில், தனியாக ஒரு சேவை அமைந்திருப்பது, ஒரு வரப்பிரசாதமல்லவா? எமக்கென்றொரு ஊடகம் என்பதை விட இன்றைய காலத்தின் தேவை என்ன என்பதை முதலில் சிந்தித்துச் செயல்படவேண்டும் என்பதே என் கருத்து. அதாவது, முஸ்லிம் களின் குரல் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டுமே கேட்காமல், நம்மைச் சூழவுள்ளவர்களுக்கு கேட்கவேண்டும், அதுவும் நல்ல விதமாக கேட்க வேண்டும். இன்று சர்வதேச மட்டத்தில் ஊடகங்கள் அமெரிக்காவின், முஸ்லிம் விரோதக் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருப்பதை எவரும் அறிவர்.

முஸ்லிகள் என்றாலே ஈவு இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்ற உருவகமே திட்மிட்டுப் பரப்பப்படுகிறது. இந்த உருவகத்தை மாற்று மதத்தவர் மனங்களில் இருந்து அகற்றவும், நமது சாந்தி மார்க்கத்தின் உண்மைநிலையை, பெருமை களை அவர்கள் உணரவும் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டமிது. எனவே நம்மைச்சுற்றி வாழும் இதர மதங்களைச்சார்ந்த மக்களோடு சுமுக உறவுகளைப்பேணி உண்மைகளைத் தெளிவுபடுத்தும் ஊடகம் ஒன்று வேண்டும். அதுவே உண்மையில் 'நமக்கென்று ஒரு ஊடகம்' என்ற எண் ணத்தை அர்த்தமுள்ளதாக்கும்.    






Thursday, April 5, 2012

இசை எரிக்காத தீ...



“இஸ்லாத்தில் இசை“ நூலுக்கு அனார் அவர்கள் எழுதிய அறிமுகம் இம்மாத உயிர்மை இதழில் பிரசுரமாகியுள்ளது.இந்திய நண்பர் பஷீர்,எழுத்தாளர் ஷாஜி, கவிதாயினி அனார் ஆகிய மூவரையும் இங்கு நன்றியோடு நினைவு படுத்துகிறேன்.
          
                                                              இசை எரிக்காத தீ...
                                                                                                                             அனார்

 “ உன்னை அன்றி வேறெதையும் நினைத்தறியேன் ......
உன் புகழ் கூறாத சொல் அறியேன் ......
அணை போட்டுத் தடுக்காத அருள் வெள்ளமே ......
நெஞ்சில் அலைமோதும் நினைவெல்லாம் நீ யல்லவோ ...... ”

என்ற காயல் ஷேக் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கீதத்தை என் சிறுவயதில் கேட்டபோதெல்லாம் மிகவும் அந்தரங்கமான நெகிழ்வான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு. இன்றும் மனம் கனத்திருக்கும் தனிமையில் இப்பாடலை கேட்கும்பொழுது அக்குரலின் உணர்வு ஒருவித பரிதவிப்பை தருவதுண்டு. அந்தப்பாடலின் இரண்டாம் பகுதியில் அழகானவரி ஒன்று பாடப்படும் :

“ தனிமைக்குள் தனிமையாய் இருப்பவனே ...... ”

இவ்வரியை அப்பாடகன் பாடும் தருணம், உருகி வந்துவிழும் கண்ணீர்த் துளிகள்… அவனுடைய குரலின் இனிமைக்காகவா ? அந்த வார்த்தையின் ஆழ்ந்த அர்த்தத்திற்காகவா ? பாடலின் மெட்டுக்காகவா ? என்று எனக்கு இப்போதும் சரியாகத் சொல்லத் தெரியவில்லை.

நான் மிகச் சிறுமியாக இருந்த நாட்களில், இசையை உணர்வதற்கான பல வாய்ப்புகள் வீட்டிலிருந்தன. எனது  தந்தை மிக நேர்த்தியான அறபுமொழிப் பாடல்களை / ஹஸீதாக்களை பாடக் கேட்டு வளர்ந்தவள். எனது தந்தையின் தந்தையும் ஆலிமாக இருந்தவர். மாலைப்பொழுதுகளில் அவரது சாய்மணைக் கதிரையில் சாய்ந்தபடி பாடிக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவரது மடிக்குள் அமர்ந்திருப்பேன். அறபுச் சொற்களுக் கிருக்கும் மாயத்தன்மை வசீகரிக்கக் கூடியதும் தனித்துமானதும் ஆகும். பள பளப்பான, கம்பீரமான, கூரான வாள்போன்றது அராபியமொழி.

தமிழ்மொழியும், அறபுமொழியும் இரண்டரக் கலந்து சொற்பொழிவுகள் கலைநிகழ்வுகள் என ஊரே களைகட்டியிருக்கும், இசைமயமான காலமொன்றுவரும் அது ‘றமழான்’ நோன்பு காலம். ஒரு மாதம் முழுவதும் சிறுவர்களாகிய நாங்கள் இரவில் தூங்குவதே இல்லை. றபானின் ஓசையைக் கேட்பதற்காக காதுகளைத் திறந்து வைத்து கண்களை மூடிக்கிடப்போம். நள்ளிரவு மின்சாரமில்லாத அந்நாளில் ஊரில் கைவிளக்கை சிறுவன் ஒருவன் கைகளில் பிடித்தபடி முன்னே நடக்க றபான் இசைப்பவர் ‘ பாவா ‘ தனது றபானை மிடுக்குடன் பிடித்து பலமாக தட்டித் தட்டி ஒலியெழுப்பி ஒவ்வொரு வீதியாக உறங்கும் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிச் செல்வார். அவரது வாயிலிருந்து  ‘ஹஸீதா’ அதிர்ந்துவிழும். அவ்விரவின் தனிமைக்குள் அந்த முதிய பாடகன் தன் ஆண்மையான தீராத குரலைச் சிதறவிட்டு,  வெறும் கால்களை மணலில் புதையும்படி நடந்து செல்வதை பச்சைநிறத் தலைப்பாகை மறையும்வரை நானும் கோடி நட்சத்திரங்களும் பார்த்து நிற்ப்போம். என்றைக்காவது ஒருநாள் அவரை அந்நள்ளிரவில் ‘ ஸஹர் ‘ நேரம் வீட்டுகழைத்து தேனீர் கொடுப்பார்கள். அவர் தேனீர் அருந்தும் வரை அந்த றபானை தொட்டு மெல்ல தட்டித் தட்டி அதிசயத்தைப் பார்த்து நிற்பேன்.

இன்று அந்த அற்புதங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. இருந்த இசை மரபுகளையும் முற்றாக இழந்து நிற்கிறோம். ‘ இஸ்லாத்தில் இசை ‘ எனும் இந்த நூலை வாசிக்கையில், என் சிறு வயது உணர்வுகள், மிகுந்த ஆதங்கத்துடன் நினைவின்மேல் எழுந்து வருவதை தவிர்க்க முடியவில்லை. நெடுங்காலமாக இசை தடைசெய்யப்பட்ட ஒன்று எனும் கருத்தே நிலவியது. இசை கேட்டால் “ நரகத்தில் இரு காதுகளிலும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென“ பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடுங்கியவர்களாகவும், வெருண்டோடுபவர்களாகவும் இருந்தோம்.

எதற்குத்தான் அன்று இசை இருக்கவில்லை. பிறந்த குழந்தையை முக்காடிட்ட பெண் மெல்லிய குரலில் பாடிப்பாடி தூங்க வைப்பதிலிருந்தே இஸ்லாத்தில் இசை அல்லது பாடல் கேட்பதற்கான முதல் வாய்ப்பு உருவாகி விடுகின்றது. இசையுடன் தொடங்கி இசையுடன் முடியும் வாழ்வு முறையே எங்களது கிராமத்திலிருந்தது என, எனது தந்தை விபரிக்கக் கேட்டிருக்கிறேன்.

சுமார் 60 – 70 வருடங்களுக்கு முன்புள்ள திருமண நிகழ்வு : பறை அடிப்பவர் ஒலி எழுப்பி முன்செல்ல, குரவை இடும் முஸ்லீம் பெண்கள் கூட்டமாய் குரவையிடும் ஓசையோடு பின்னே நடந்துவர, நடுவில் மணமகனைச் சூழ்ந்தபடி ஆண்கள் அறபு கீதங்களைப் பாடியவாறு, கிராம வீதிகளில் ஊர்வலம் வருவார்கள்.

மரணித்தவரை சந்தூக்கில் கொண்டு செல்லும் போதும், ‘பைத்‘ ஐ பாடி நல்லடக்கத்திற்கு எடுத்துச் செல்லும் வழக்கமும் இருந்திருக்கிறது.

மகிழ்ச்சிகரமான நிகழ்வொன்று நடக்கும் வீட்டுக்கு, ‘ பக்கீர் பாவாக்களை ’ அழைத்துவந்து இரவில் தொடங்கி அதிகாலைவரை இடம்பெறும் இசையும், நடனமுமான கோலாட்டம் போன்றதான இசை வடிவங்களும் இருந்துள்ளன.

பெண்கள் தனித் தனி குழுக்களாக இசைத்துப் பாடுகின்ற ‘மௌலூது‘      எனப்படும் ஒருவித கதைப் பாடல்கள் இன்றும் சில இடங்களில் பெண்களால் பாடப்பட்டு வருகின்றன.

உலகில் இசையோடு சம்மந்தப்படாத மதங்கள் எவையுமில்லை. மதங்களை மனிதர்களிடம் எடுத்துச் சென்றதில் இசைக்கு தனிப் பங்குண்டு. ‘சூஃபிகள்‘ அவர்களுக்கான தனித்த இசை வடிவங்களையும், நிலவிவ ருகின்ற இசையில் நிறைந்த தாக்கத்தைச் செலுத்துபவர்களாகவும் காணப் படுகின்றனர்.

உலகின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஐந்து வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த ‘ அதானை ‘ நபிகளின் காலத்தில் மிக இனிமையாக கூறியவர் கறுப்பினத்தவரான பிலால் (ரழி) அவர்களாகும். தன்னிகரற்ற அவரது குரல் வளமும், இசைத் தன்மையும் மிகப் பிரபலமானது. பிலால் (ரழி) அவர்கள் “ புல் புல் “ (பாடும் பறவை) என்று நபிகளால் செல்லப் பெயரிட்டு அழைக்கப் பட்டார்கள்.

தாவூத் (நபி) க்கு வழங்கப்பட்ட வேதத்தை, இசையினூடாக அவர் மொழியும் அழகில், மனிதர்கள் மயங்கினர். பறவைகளோ அவரது குரலின் இனிமை கேட்டு, சற்று நின்று தாமதித்து செவிமடுத்து பின் பறந்து சென்றன என்று சொல்லப்படுகின்றது.

“ எங்கள் மீது ஒரு பௌர்ணமி பிரகாசிக்கிறது
அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது “

இவ்வரிகள்  மக்காவிலிருந்து வெளியேறிய நபி அவர்களை, மதீனாவின் மக்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி, மகிழ்ச்சியில் பாடி வரவேற்று இசைக்கப்பட்ட பிரபலமான பாடலாகும்.

இசை என்பதே ஒருவகை ஆன்மீகம்தான்.

எம்முடைய இசையை அறிவதற்கான, ஓரளவு ஆறுதலான விடயங்கள் இந்தநூலில் உள்ளன. ஹறாம், ஹலாலுக்கிடையிலான தெளிவான பார்வை சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. ஆகுமான இசை என்பது என்ன ? எத்தகைய இசை ஆகுமானதில்லை ? என்ற இரு கேள்விகளுக்கும் இந்நூலில் பதில் இருக்கிறது. நடு நிலமையான ஒரு சிந்தனையை வலிமையாக பதிவு செய்திருக்கிறது. பல ஆதாரங்களை முன்நிறுவி முற்றிலுமாக இசையை இஸ்லாம் மறுக்கவில்லை என்ற கருத்தை தெளிவு படுத்துகின்றது. ஆனபோதிலும், மேலும் தெளிவு பெறவேண்டிய விடயங்களுக்கான தேவைகள் காணப்படுகின்றன. எனவே இந்தநூலை ஆரம்ப முன்னெடுப்பாகக் கொள்ளமுடியும்.

மேலும் இந்நூலில் கூறப்பட்டது போல :

“ நதிக்கரைகளில் மரங்களின் நிழலில்
இசைக்கருவிகளின் நரம்புகள் இசைக்கும்
மெல்லிய கவிதைகளை
ரசிக்கத் தெரியாதவன்
கடின சித்தம் கொண்டவனும்
கழுதைக்கு நிகரானவனுமாவான் ! ”




Wednesday, April 4, 2012

குரலால் புகழ் கொண்டவர்...

“குறளைப் போலவே குரலால்புகழ் கொண்டவர்“ என வைரமுத்து B.H அவர்களை வாழ்த்தி எழுதிய குறிப்பு அவரது அன்பளிப்பிலே இருந்தது.குரலால் உலகையே தன் பக்கம் ஈர்த்த அந்தக் கலைஞரை அண்மையில் சந்தித்து உரையாடக் கிடத்தது.சுமார் 4 மணித்தியாளம் அளவில் நீண்ட உரையாடல் அவரது குரலைப் போலவே இனிமையானது.ஏ.ஆர் ரஹ்மான் தனக்கு அன்பாகக் கொடுத்த Sound Mixer ஐக் காட்டிய போது நான் நெகிழ்ந்துதான் போனேன்.

அவரது வீட்டின் ஒலிப் பதிவு அறையைப் பார்க்க வேண்டும் என்ற போது மறுக்காமல் எம்மை அழைத்துச் சென்று சிலதை ஒலிபரப்பிக் காட்டினார்.அந்த இயல்பான தன்மை மனதை வெகுவாகக் கவர்ந்தது.தமிழின் ஒலிக் களஞ்சி யமாக அவரது குரல் இன்னும் ஒலிக்கின்றது...